மார்ச் 18 ஆம் தேதி அன்று ஷார்ட்ஃப்ளிக்ஸ் எனும் செயலியில் வெளியாகியுள்ளது இக்குறும்படம்.
குருவிராஜன் எனும் பிரசித்த பெற்ற கொலைகாரனை விளையாட்டாக அறைந்து விடுகிறார் ஷெரிப். குருவி ராஜன் யார், ஷெரிப் யார், குருவி ராஜனிடம் ஷெரிப் சிக்கினானா இல்லையா என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் மதிவாணன்.
கேஜிஎஃப் பாணியில், கதையை ப்ரொஃபசர் மித்ரன் சொல்வதாகத் தொடங்குகிறது. மித்ரனாக, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, மிரள் முதலிய படங்களில் நடித்திருந்த ராஜ்குமார்.G நடித்துள்ளார். சஸ்பென்ஸைக் கூட்ட அவர் அடிக்குரலில் பேசும் சில வசன்ங்களைக் கவனிக்கச் சிரம்மாம இருந்தாலும், 2டி அனிமேஷனில் விரியும் குருவிராஜனின் கதை நல்லதொரு அடித்தளத்தைப் படத்திற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
குருவிராஜனாக அர்ஜெய் நடித்துள்ளார். ‘நான் கேங்ஸ்டர் இல்லை கில்லர்’ என அவர் சொன்னாலும், அவரது பின் கதையும், அவரது தோற்றமும், அவருடன் உள்ள ஆட்களைக் கொண்டு அவரை ‘டான்’ ஆகவே புரிந்து கொள்ள முடிகிறது. ஆர்ஜெயின் கம்பீரமான உருவமும், அவரது உடையும், அவரேற்ற கதாபாத்திரத்தை டான் போலவே சித்தரிக்கிறது.
விரைவில் புற்றுநோயால் இறந்துவிடுவோம் எனத் தெரிய வரும் ஷெரிப், சாவதற்கு முன் செய்ய வேண்டிய இலக்குகளை எழுதுகிறார். சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி எழுதும் கடத்தல் விதிகளைப் போல! படம், ஷெரிப்பாக நடித்திருக்கும் ஆஷிக் ஹுசைனின் வரவிற்குப் பின், கேங்ஸ்டர் டோனில் இருந்து பிளாக் காமெடி வகையறா படமாக மாற்றம் கொள்கிறது. அதற்கு உறுதுணையாக உள்ளார் நகைச்சுவை நடிகர் சிவ ஷா ரா. ஷெரிப்பைத் தம்பியாக ஏற்றுக் கொண்டு, அவரது இலக்குகளை ஒன்றைக் கூட்டிப் பட்த்தின் க்ளைமேக்ஸிற்கும் தலைப்பிற்கும் உதவிப் புரிந்துள்ளார்.
குறைவான பட்ஜெட்டில், 65 நிமிடங்கள் ஓடக்கூடிய படம், அதன் குறைகளை மீறி ரசிக்கவே வைக்கிறது. குருவிராஜனுக்குக் கிடைத்தது போல் அட்டகாசமான அறிமுகம் ஷெரிப்பிற்குக் கிடைக்கவில்லை. வாய்ஸ்-ஓவரிலேயே கதையை நகர்த்தி, படத்தின் மையமான ஷெரிப்பால் குருவிராஜன் அறையப்படும் காட்சிக்குக் கூட அழுத்தம் தராமல், நேரத்தை இழுத்துப் பிடித்துளார் மதிவாணன். ஒரு முழு நீளப்படத்திற்கான ஸ்க்ரிப்ட்டைச் சமரசங்களுடன் ஷார்ட்ஃப்ளிக்ஸில் குறும்படமாக வெளியிட்டுள்ளனர்.
படத்தைப் பார்க்க: shortflixindia.in/7qXf