

தேர்தல் நேரம் என்பதால் தனது தப்பாக்கியைத் திருமழிசை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான். அதை வாங்கி வைக்கும் ரைட்டர் பெரியசாமி, துப்பாகியைத் தவற விட்டுவிடுகிறார். ட்ரெயினி எஸ்.ஐ.யான புகழிடம், வெளியில் தெரியாமல் ரகசியமாகத் துப்பாக்கி கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது.
கனகராஜ் எனும் ரெளடி, தேர்தல் செலவுக்காகப் பத்து கோடியை ஆய்வாளர் வில்லியம்ஸிடம் கொடுத்துவிடுகிறார். அந்தப் பணம் காணாமல் போகிறது. கனகராஜின் தம்பி (ஸ்பாட் படத்தின் நாயகன் கெளஷிக்), ஒரு சின்ன தகராறில் ரைட்டர் பெரியசாமியை உள்ளாடையுடன் நிற்க வைத்துவிடுகிறார். காவல்துறை உயரதிகாரிகளும், கனகராஜின் பக்கம் நின்று மெளனம் சாதிக்கிறார்கள். ஆனால், பெரியசாமி தனது தந்தையைப் போன்றவரென ஆவேசம் இளம் எஸ்.ஐ.யான புகழ், கெளஷிக்கை அடித்துக் கோமாவில் தள்ளிவிடுகிறான். கனகராஜ் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்கத் துடிக்கிறார்.
காணாமல் போன துப்பாக்கியும் பணமும் கிடைத்ததா, கனகராஜ் – பெரியசாமி மோதல் என்னாகிறது என்பதே படத்தின் கதை.
ரைட்டர் பெரியசாமியாகக் குணசித்திர வேடத்தில் பின்னியுள்ளார் லால். பெண் உதவி ஆய்வாளரிடம், ‘நான் உங்களுக்குப் போட்டியா?’ எனக் கேட்கும்போதும், உள்ளாடையோடு நிற்க வைத்ததால் கூனி குறும்போதும் கலக்கியுள்ளார். ஆய்வாளராக வரும் அருள் D. ஷங்கர்க்கு மிகச் சிறப்பான வேடம் அளிக்கப்பட்டுள்ளது. அக்கதாபாத்திரத்தில் அவர் நேர்த்தியாக நடித்துள்ளார். எதற்கும் அடங்காத, நினைத்ததைச் செய்யும் இளங்காளை பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் கெளஷிக். கெளஷிக்கிற்கும், தர்ஷனுக்கும் பேருந்துக்குள் நடக்கும் சண்டைக்காட்சியும், மருத்துவமனைக்குக் கொலை செய்ய வரும் கும்பலுடன் தர்ஷன் சண்டையிடும் காட்சியும் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. சண்டை இயக்குநர் ஆக்ஷன் சந்தோஷ்க்குப் பாராட்டுகள்.
கனகராஜாக நடித்துள்ள மலையாள நடிகர் சுஜித் மிரட்டியுள்ளார். அதற்குத் தீனி போடும் வண்ணம் நன்றாகக் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளார் கெளதம் கணபதி. இவர், ஈரம் முதலிய படங்களை இயக்கிய அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புகழாக பிக்பாஸ் தர்ஷன், நாயகன் பாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரெயினி எஸ்.ஐ.-யாகக் கச்சிதமாகப் படத்திற்குள் பொருந்திவிடுகிறார். துப்பாக்கி வாங்க வரும் முனிஷ்காந்த் அத்தியாயம் மட்டும் சற்றே ஒட்டாமல் தனி ட்ராக்கில் பயணிப்பது போலிருந்தது. இது இயக்குநரின் படம் என்றாலும், நடிகர்களையும் ஹைலைட் செய்யும்வண்ணம் அமைந்திருந்ததே கெளதம் கணபதியினுடைய எழுத்தின் வெற்றி.

