Shadow

யெல்லோ விமர்சனம் | Yellow review

தமிழ் சினிமாவில் வன்முறை படங்களே மேலோங்கி இருக்கும் சூழலில் அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே வெளியாகும் மென்மையான ஃபீல் குட் படங்கள் ரசிகர்கள் மனதை வருடிச் செல்வதோடு மிகப்பெரிய வெற்றியையும் பெறுகின்றன. மிகச் சமீபத்திய உதாரணங்களாக லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களைச் சொல்லலாம். அந்த வகையில் ஒரு பெண்ணின் உணர்வுகளை மையப்படுத்தி இந்தியில் வெளியான குயின் படத்தை போல தமிழில் வெளியாகியிருக்கும் படம் தான் “யெல்லோ”வாகும். பிக் பாஸ் பிரபலம் “அராத்தி” பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த்துள்ளார்.

ரோடு ட்ராமா வகைமையைச் சேர்ந்த இந்தப் படத்தில் காதல் தோல்வி, சொந்த வாழ்க்கையில் அப்பாவின் திடீர் உடல்நலக் குறைவு, தன் கேரியர், வாழ்க்கைக் கனவு சிதைந்து அல்லாடுகிறார் பூர்ணிமா ரவி. பிடிக்காத ஒரு வங்கி வேலையில் மெஷின் போல வேலை செய்து வரும் நாயகி, ஒரு கட்டத்தில் சில நாட்கள் கிடைத்த விடுமுறையில் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டுக் கிளம்பி விடுகிறார். பால்ய வயதில் தன்னுடன் பழகிய, தற்போது தொடர்பில் இல்லாத சிலரைத் தேடி சந்திக்கக் கிளம்புகிறார். அந்தப் பயணத்தில் அவர் அந்த மனிதர்களைச் சந்தித்தாரா, ஆவர் பெற்ற அனுபவங்கள் என்ன, அந்தப் பயணம் அவருக்கு உணர்த்திய சேதி என்ன, அவர் வாழ்க்கையை அந்தப் பயணம் எப்படி மாற்றியது என்பதைச் சொல்கிறது யெல்லோ.

நடிகர்களைப் பொறுத்துவரையில், யூட்யூபில் காமெடி வீடியோக்களில் சம்பவம் செய்து வந்திருந்த பூர்ணிமா ரவி, இந்தப் படத்தில் ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். வெறுமை, கோபம், காதல், அன்பு, தன்னை உணர்தல் என அத்தனையையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். கச்சிதமான தேர்வு என நம்மை எண்ண வைக்கும் ஒரு நடிப்பு. Carefree attitude-இல் ஊர் சுற்றக் கிளம்பும் ஒரு கதாபாத்திரத்தில் வைபவ் முருகேசன். அதிகம் பேசினாலும் பல இடங்களில் கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரமாக நன்றாகவே நடித்துள்ளார்.

பூர்ணிமாவின் அப்பாவாக டெல்லி கணேஷ், பூர்ணிமாவின் தோழியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி, நாயகனுக்கு உதவும் பிரபு சாலமன், சாய் பிரசன்னா, வினோதினி வைத்தியநாதன் என மற்ற நடிகர்களும் அவர்கள் நடிப்பால் படத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

ட்ரைலரிலேயே படத்தைப் பார்க்கத் தூண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அபி ஆத்விக் ஒளிப்பதிவு அமைந்தது. படத்தில் அந்த ஒளிப்பதிவு மிக மிகத் தரம். இயக்குநரின் அழகியல் எண்ணங்களைத் திரையில் கொண்டு வந்ததற்குப் பாராட்டியே தீர வேண்டும். மூணார், கோவா, கேரளா, மலை, காடு, சென்னை நகரம் என எல்லாவற்றையுமே அழகாகக் காட்டியிருக்கிறார். ஸ்ரீ வாட்சன் படத்தொகுப்பு, படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். ஆனந்த காசிநாத்தின் பின்னணி இசை, படத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்கிறது.

இயக்குநர் ஹரி மஹாதேவன் ஒரு நாயகியை மையப்படுத்திய கதையில், அவர் என்ன நினைத்தாரோ அதை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். முதல் பட இயக்குநர் என்றாலும் படத்தை உருவாக்கிய விதத்தில் சபாஷ் போட வைக்கிறார். படத்தின் ஒவ்வொரு ஷாட்டும், அதை கம்போஸ் செய்த விதமும், நடிகர்களின் நடிப்பும் வசனங்களும் படத்தின் மிகச் சிறந்த அம்சங்கள். பூர்ணிமா, டெல்லி கணேஷ் இடையேயான காட்சிகளும், பூர்ணிமா ரவி பயணத்தின் போது உணர்கிற விஷயங்களும் தியேட்டரில் நல்ல ஒளி, ஒலி அமைப்புடன் பார்த்தால் இன்னும் ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நிச்சயம் திரையரங்கில் பார்க்க வேண்டிய படத்திலொன்று.

– மாறன் செ