Shadow

இரவின் விழிகள் விமர்சனம் | Iravin Vizhikal review

பார்வையாளர்களை ஈர்க்கவும், அதன் மூலம் புகழ் பெறவும், எதையாவது கன்டென்ட்டாக்கி வீடியோ போட்டுத் தொடர்ந்து லைம்லைட்டிலேயே இருக்க நினைக்கும் யூட்யூபர், எக்ஸ், இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களைச் சாடியுள்ளார். ஒரு விஷயத்தின் உண்மை நிலையைப் பற்றி எதுவும் அறியாமலே ஒரு கருத்தை மிக வலுவாகப் பொதுச் சமூகத்தில் விதைத்து விட முடிகிறது இந்த சோஷியல் மீடியா செலிபிரட்டிகளால். அதனால் தவறே இழைக்காதவர்கள் வீண் பழி சுமக்க வேண்டி வருகிறது. இத்தகையவர்களைத் தேடிக் கொல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அவன் முதலில் கொல்வது, பிளாக்மெயில் ஜர்னலிசம் செய்யும் சரக்கு சங்கர் என்பவரை. அந்த சைக்கோ கொலைகாரனிடம் யூட்யூபர்களான கர்ணாவும் ரேஷ்மாவும் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தப்பித்தார்களா, ஏன் அவனை சைக்கோ கொலைகாரன் கொல்லத் துடிக்கிறான் என்பதற்குப் பதிலுடன் நிறைவுறுகிறது படம்.

படத்தின் முதற்பாதியைச் சகித்துக் கொள்ள ஓர் அசாத்திய திடம் தேவைப்படுகிறது. அத்தனை ஏரியாவும் அத்தனை மெத்தனமாகக் கையாளப்பட்டுள்ளது. சைக்கோ கொலைகாரன் தன் மழு ஆயுதத்தால், ஒரு ஆணின் கழுத்தைக் கரகரவென அறுத்துக் கொல்கிறார். தன்னுடன் வந்தவர் இறந்துவிட்டதைப் பார்த்து அதிர்ந்து, பக்கத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கும் பெண் பயந்து போய், “எங்களை விட்டுடு” என மன்றாடுகிறார். ஏற்கெனவே இறந்தவருக்காகவும் சேர்ந்து இறைஞ்சும் அதிசயப் பெண்மணியாக உள்ளார் அவர். ஆனால் எத்தகைய அதிசயத்தாலும் பாதிக்கப்படாத கொள்கை வீரராக, அப்பெண்ணின் கழுத்தையும் அறுத்துத் தள்ளுகிறார் வில்லன்.

கர்ணா எனும் நாயக கதாபாத்திரத்தில் பிளாக் ஸ்டார் மகேந்திரா நடித்துள்ளார். வாரணாசி நாயகனே கூனிக் குறுகிவிடுமளவு ஓர் உணர்ச்சியற்ற முகத்திற்குச் சொந்தக்காரராக உள்ளார் நாயகன். படத்தின் தயாரிப்பாளருமாக அவர் இருப்பதால் கிடைத்த சலுகையை மிக அழகாக உபயோகப்படுத்தத் தவறியுள்ளார். படத்தின் இயக்குநரே படத்தின் வில்லன். அதாவது முதற்பாதியில், நாயகனுக்குச் சரியாகக் கதை அமைக்காத இயக்குநர் சிக்கல் ராஜேஷ், இரண்டாம் பாதியில் அவர் வரும் அத்தியாயத்திற்கு மட்டும் கதையென்றொன்றை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

யூட்யூபர் ரேஷ்மாவாக, ‘பங்காரா’ எனும் கன்னடப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே நடித்துள்ளார். பிளாக் ஸ்டார் மகேந்திராவிற்கு ஜோடியாக நடித்ததோடு மட்டுமல்லாமல், கன்டென்ட்டே இல்லா முதற்பாதியில் நாயகனோடு ஒப்பேத்தியுள்ளார். நாயகன் சிப்ஸ் சாப்பிடத்தான் லாயக்கு என அவரையே அவர் கலாய்த்துக் கொள்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியிலும், வில்லன் பக்கம் பக்கமாக வசனம் பேசும்போது நாயகன் எந்த உணர்ச்சியுமில்லாமல் நிற்க, அவருக்கும் சேர்த்து முக பாவனைகளில் பெர்ஃபார்ம் பண்ணிக் கொண்டிருந்தார் நீமா ரே. சினிமா பார்க்கிறோம் என்ற உணர்வையே காவல்தூறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன் ராஜ் திரையில் தோன்றும் பொழுதுதான் ஏற்படுகிறது.

சட்டம் தன் கடமையைத் தவறினாலும், இரவின் விழிகளில் இருந்து எந்தக் குற்றமும் தப்பாது எனும் பொருள்படத் தலைப்பினை வைத்துள்ளார் இயக்குநர். திரைக்கதையில் அத்தகைய வலுவில்லாட்டியும், படத்தின் இரண்டாம் பாதி பெரும்பாலும் மலையிலும் இரவிலும் நிகழ்வதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.