Shadow

அந்தரன் விமர்சனம் | Andharan review

அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் என்று பொருள். கார்த்திகா எனும் இளம்பெண்ணிற்குத் திருமணம் நிச்சயமாகும் பொழுதெல்லாம், கல்யாணத்திற்கு முன் அந்த மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்தோ, தற்செயலாகவோ இறந்து விடுகின்றனர். இந்த மரணங்களின் பின்னணியைத் துப்புத் துலக்கக் காவல்துறை அதிகாரி செழியன் நியமிக்கப்படுகிறார். மறைந்திருந்து வேட்டையாடுபவரை எப்படி உடனின்று கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

அந்தரனிற்கு முன், அந்தரனிற்குப் பின் என தன் வாழ்க்கை மாறுமென செழியனாக நடித்துள்ள பிரஜின் தீர்க்கமாக நம்புகிறார். அவரது நம்பிக்கை மிகையில்லை எனச் சொல்லுமளவிற்குப் படத்தின் கதை சுவாரசியமாகவும், நடிகர்களின் பங்களிப்பு சிறப்பாகவும் அமைந்துள்ளது. பிரதான போலீஸ் கதாபாத்திர வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் பிரஜின். ஒரு போலீஸ்காரராகவும், காதலைப் பல வருடம் மனதில் சுமந்து திரிபவராகவும், ஒரு தயக்கத்துடன், அதே சமயம் கொஞ்சம் மிடுக்குடன் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் கார்த்திகாவிடம் காதலை வெளிப்படுத்தும் நுண்ணியமான காட்சிகளில் கூட தடுமாற்றமின்றி நடித்து ஸ்கோர் செய்கிறார் பிரஜின்.

கார்த்திகாசாக இவானா வருண் நடித்துள்ளார். கண்ணியமாக நடந்து கொள்ளும் ஆட்டோக்காரரைப் பின் தொடர்ந்து காதலிப்பதாகட்டும், தன்னைச் சுற்றி நிகழும் மரணங்களால் சோர்ந்து போவதாகட்டும், க்ளைமேக்ஸின் பொழுது உள்ளிருந்து வெடிப்பதாகட்டும், பிரஜினுடன் போட்டி போட்டுக் கொண்டு மிகச் சிறப்பாக நடித்துள்ளார் இவானா வருண். அறிமுக காட்சியில் சற்றே அந்நியமாகத் தோன்றினாலும், க்ளைமேக்ஸில், இயக்குநர் பொதித்து வைத்துள்ள அட்டகாசமான ட்விஸ்ட்டைப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ள வைக்குமளவிற்கு மெல்ல இவானா வருண் பரீச்சயமானவராய் மாறி இலக்கை அடைகிறார்.

அந்தரன், நிறைவைத் தரும் மிஸ்ட்ரி ரொமான்டிக் த்ரில்லராக ரசிக்க வைக்கிறது.