Shadow

போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review

ஒருவனின் பழிவாங்கும் உணர்வு, சம்பந்தமே இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதற்குக் காரணமாகிவிடுகிறது. யாரோ ஒருவன், முன்னால் ரெளடி தனாவின் மகனைக் கொன்றுவிட, காவல்துறையினர்தான் அவனைக் கொன்று விடுவதாகத் தனா தவறாக நினைத்துக் கொள்கிறான். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் வெஞ்சினத்துடன் தேடித் தேடிக் கொல்வதுதான் போலீஸ் ஃபேமிலியின் கதை.

தனாவாகப் பருத்தி வீரன் சரவணன் நடித்துள்ளார். மகனின் மரணத்திற்குக் காரணமான அனைவரது குடும்பத்தையும் கொன்றே தீருவது என்று ஆவேசமாக உள்ளார். அப்படி சிலரைக் கொன்றதும், வலியே இல்லாமல் இறந்து விடுவார்கள் எனக் குடும்பத்தாரை மட்டும் கொல்ல ஆணையிடுகிறார். ஏட்டு சுரேஷாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் காதல் சுகுமார். அவ்வளவு கனமான பாத்திரம் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தைத் தருமளவிற்கு சுகுமார் அனுகூலமான நடிப்பை வழங்கவில்லை. அனிதா எனும் கதாநாயகி பாத்திரத்தில் நிஷா தூபே நடித்துள்ளார். அவரது கண்மூடித்தனமான காதலும் நம்பிக்கையும், அவரை மட்டும் பாதிப்பதோடு, அவரைச் சார்ந்தவர்களையும் ஆபத்தில் தள்ளுகின்றது.

கதையின் நாயகனாக நடித்துள்ளார் தயாரிப்பாளரான ராஜா மலைச்சாமி. தனது மகள்களை தனாவிடம் இருந்து காப்பாற்ற அவர் போராடுவதுதான் படத்தின் திரைக்கதை. சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள டிராகன் ஜோஷ், இன்னும் கொஞ்சம் எதார்த்தமாக உருவாக்கிப் படத்தின் மூடுக்கு (mood) உதவியிருக்கலாம். சில காட்சிகளில், மறைந்த நடிகர் முரளியை ஞாபகப்படுத்தும் சாடையில் உள்ளார் ராஜா A.M. மலைச்சாமி. கேமரா கோணங்களால் விளையாடி அவர் நடிக்கத் தடுமாறும் இடங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும் இயக்குநர் M.பாலா.

போலீஸ் ஃபேமிலியை எழுதி இயக்கியுள்ளார் M. பாலா. விசாரணை, தற்காப்பு போல் ஓர் அழுத்தமான படமாக வந்திருக்கவேண்டியது. ஆனால் அவசர கெதியில் எடுக்கப்பட்டுள்ளதாலும், திரைக்கதையில் போதிய கவனம் செலுத்தாததாலும், மிகச் சுமாரான வசனங்களாலும் படம் தனது இலக்கை ஊடுருவாமல் தொட மட்டுமே செய்துள்ளது. மன்னிக்கும் குணம் எத்தகைய உயரியது என்பதையும், அதனால் எவ்வளவு இழப்புகள் தடுக்கப்படக்கூடும் என்பதையும் இப்படம் பேச முற்பட்டுள்ளது சிறப்பு.