

சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’ ஆகும். விபின் ராதாகிருஷ்ணன் இயக்க, கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் படத்தில் அங்கம்மாள் என்ற மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீதா கைலாசம்.
கீதா கைலாசத்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணி, இளைய மகன் சரண் ஆவர். அடிப்படையில் ரொம்பவே பிடிவாத குணத்தை உடைய கீதா கைலாசம் அழுத்தமான, தீர்க்கமான பெண்மணி. பரணி, அவரது மனைவி, சரண் என எல்லோருமே கீதா கைலாசத்தை எதிர்த்துப் பேசப் பயப்படுபவர்கள். பெரிதாகப் படிக்காத பரணி விவசாயம் செய்ய, இளைய மகன் சரணை மருத்துவம் படிக்க வைக்கிறார். நகரத்தில் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்க, பெண்ணின் தந்தையும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்கிறார். பெண் வீட்டாரைச் சந்திக்கும்போது தங்களைக் குறைவாக எடை போட்டு விடக் கூடாது என நினைக்கும் சரண், ஜாக்கெட் எனும் மேல் சட்டை அணியும் பழக்கமே இல்லாத அம்மா கீதா கைலாசத்தை ஜாக்கெட் அணியச் சொல்கிறார். அதைச் சொல்லத் தயக்கப்பட அவரது அண்ணி மூலம் சொல்கிறார். ஜாக்கெட் அணிய விருப்பம் இல்லாமல் வெறுப்போடு இருக்கும் கீதா கைலாசம் ஜாக்கெட் அணிந்தாரா என்பதும், அந்தக் குடும்பத்தில் நடக்கும் உரையாடல்களால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதுமே படத்தின் மீதிக்கதை.
கீதா கைலாசம் அங்கம்மாள் என்ற கதாபாத்திரத்தில் ரொம்பவே புதுமையாக தெரிகிறார். ஜாக்கெட் அணியாமல் இருப்பது, பச்சைக் குத்திக் கொண்டிருப்பது, சுருட்டு பிடித்துக் பற்களைக் கறையாக வைத்திருப்பது, யார் என்ன எனப் பார்க்கல் எல்லோரையும் ஏக வசனத்தில் பேசுவது, டிவிஎஸ் சாம்ப் வண்டியில் ஊர் முழுக்க சுற்றுவது என அங்கம்மாளாகவே மாறி நிற்கிறார்.
வடசென்னை சரண், துடிப்பான, படித்த இளைஞராகக் காதல் திருமணம் என்னவாகும் எனக் கொஞ்சம் டென்ஷனோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரது அண்ணனாக நாடோடிகள் பரணி. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார். பரணியின் காதலியாக வரும் முல்லையரசி நடிப்பிலும் அழகிலும் ரசிக்க வைக்கிறார். பரணியின் மனைவியாக, நாயகனின் அண்ணியாகத் தென்றல் ரகுநாதன், மிக யதார்த்தமான நடிப்பால் அசத்துகிறார். அங்கம்மாளின் தோழிகள், அந்த ஊர் பெண்கள், பரணியின் குழந்தை, அங்கம்மாள் ஒரு தலையாக விரும்பும் மனிதர் என எல்லாமே அவ்வளவு தத்ரூபமான முகங்கள்.
ஒளிப்பதிவாளர் அஞ்சோய் சாமுவேலுக்கு மிகப்பெரிய பூங்கொத்து ஒன்றைப் பரிசாகத் தந்தே ஆக வேண்டும். அவரின் ஒளிப்பதிவு படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறது. அந்த வறண்ட நிலப்பரப்பை அவரது கேமரா கோணங்களாலும், படம் பிடித்த விதத்தாலும் அசரடிக்கும் வண்ணம் மாயம் செய்துள்ளார். முகமது மக்பூல் மன்சூரின் இசை, படத்தின் தன்மைக்கேற்ப வலு சேர்த்திருக்கிறது. படம் முழுக்க வீசும் காற்று ஒலியைச் சிறப்பாக வடிவமைத்தவருக்கும் பாராட்டுக்கள்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை எடுத்து, அதை ஒரு திரைப்படமாக்க வேண்டும் என்ற இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் எண்ணமே பாராட்டுக்குரியது. படத்தின் நடிகர்கள் தேர்வு, அவர்களைப் பயன்படுத்திய விதம், முற்றிலும் அவர்களைப் புதிதாகக் காட்டியது என ஸ்கோர் செய்திருக்கிறார். இப்படி ஒரு மெல்லிய கதையை எடுத்துக் கொண்டாலும் அதில் நிறைய விஷயங்களைச் சேர்த்து இன்னும் ஆழமாக, உணர்வுப்பூர்வமான ஒரு படத்தைத் தந்திருக்கிறார். ஒரு உலக சினிமாவுக்கான திரைமொழியால் ஈர்க்கிறார். அதே நேரம் மிக யதார்த்தமான காட்சிப்படுத்தல் மற்றும் நேட்டிவிட்டியால் ரசிக்கவும் வைக்கிறார்.
– மாறன் செ


