32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கார்மேனி செல்வம் விமர்சனம் | Carmeni Selvam review

Dinesh R சேலம் Published: 04/04/2026 2 நிமிட வாசிப்பு Updated: 13/04/2026 சினிமா
எழுத்து அளவு:

ஒரு பணக்காருக்குக் கார் ஓட்டுநராகப் பணி புரியும் செல்வம், அவரது வாழ்வில் எதிர்கொள்ளும் எதிர்பாரா நெருக்கடியும், அதைச் சமாளிக்க அவர் தேர்ந்தெடுக்கும் பாதையும், அப்பாதையில் எழும் விளைவுகளே இப்படத்தின் மையச்சரடு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பணக்கார முதலாளி சம்பத்தாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன், அப்பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மனைவி தேவியாக நடித்துள்ள அபிநயா மிகச் சில காட்சிகள் வந்தாலும், படத்தில் அவரது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். இந்தப் படத்தில் வரும் செல்வம் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதனால்தான் சம்பத் போலும், தேவி போலும் முதலாளிகள் அவனுக்குக் கிடைத்துள்ளனர். அவனது அழகான சின்ன வாடகை வீடும், பணக்கார முதலாளியே பொறாமைப்படும் இடத்தில் அமைந்துள்ளது. அவனுக்கு இக்கட்டான சூழலில் உடனுக்கு உடன் கடன் கிடைக்கிறது, அதை அடைக்க வழியும் கிடைக்கிறது. அதை எல்லாம் அனுபவித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு, ‘ஃபோன்லயே என்னால குடும்பம் நடத்த முடியாதுடா!’ என அட்வைஸ் செய்ய முடிகிறது. அனைவருக்கும் ஒன்று போலவே வாழ்க்கை அமையாதே! அவரவர் நெருக்கடி அவரவர்க்கு.

செல்வத்தின் மனைவி சாந்தியாக நடித்துள்ள லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி மிகப் பிரமாதமாக நடித்துள்ளார். கணவனின் தங்கை முன் அசிங்கப்படுவதாகட்டும், அவ்வசிங்கத்தைத் துடைக்க முயற்சி எடுப்பதாகட்டும், அப்படி முயற்சி எடுத்து மேலும் அசிங்கப்படும் பொழுதாகட்டும், கணவனின் போக்கால் சங்கடப்படுவதாகட்டும், மிக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மகன் பாலுவாக நடித்துள்ள கரண் சக்கரவர்த்தி எனும் சிறுவனும் அசத்தியுள்ளான். ‘அப்பா, நீ ரொம்ப அறிவாளிப்பா’ என சமுத்திரக்கனியைப் பாராட்டும் பொழுதெல்லாம் ரசிக்க வைக்கிறான்.

விலை உயர்ந்த காரில் வந்து, இன்ஷ்யூரன்ஸ் போடச் சொல்லி படவா கோபியிடம் பேசும் கார்த்திக் குமார் அத்தியாயம் ரசிக்க வைக்கிறது. ‘நிறைய கடன் வாங்கணும்’ என்ற அவரது போதனை, சாமானிய கார் ஓட்டுநரான செல்வத்தின் வாழ்க்கையையே மாற்றுகிறது. கடன் வாங்கிய பின், அல்லாடும் செல்வத்தின் வாழ்க்கையைப் பார்வையாளர்களுக்கு ஒரு பாடமாக்கியுள்ளார். ஆனால், உழைப்பதற்கும், தேவைக்கும், ஆசைப்படுவதற்கும், தேவைக்கு அதிகமாகத் தன்னை வருத்திக் கொள்வதற்குமான வித்தியாசத்தைக் கவனம் கொள்ளத் தவறியுள்ளார் இயக்குநர். ஒன்றை இன்னொன்றாகக் காட்டி, சொல்ல வந்த கருத்திற்கு நியாயம் செய்துவிடுகிறார்.

‘அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை’ எனும் படையப்பா பேசும் ரஜினி தான் படத்தின் ஒன்-லைன். இயக்குநர் ராம் சக்ரி, இதை உணர்வுப்பூர்வமாகச் சொல்ல முயற்சி செய்துள்ளார். அதற்கான அடித்தளத்தை முதல் பாதியில் எதார்த்தமாக நிறுவினாலும், ஒரு கட்டத்தில், குறிப்பாக இடைவேளைக்குப் பின், கார்மேனி செல்வம் பணம் சம்பாதிப்பதை ஒரு பேராசையுடன் செய்து, அதற்கு மனைவிதான் காரணமெனக் காரணம் சொல்லும்போது அந்த எதார்த்தம் நீர்த்துப் போகிறது. குடும்பத்தைப் பிரிந்து அப்படியென்ன சம்பாதனை வேண்டிக் கிடக்கு எனும் அறிவுரையை அனைவருக்குமானதாக வகுக்க முடியாது. ஆனால் சமுத்திரக்கனி அதை மிகவும் ரசித்துச் செய்துள்ளார்.

கார்மேனி செல்வம் – ஆணின் வலியைப் பேசும் படம்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.