Shadow

கேம் சேஞ்சர் விமர்சனம்

ஊழலுக்கு எதிரான நாயகன் எனும் ஷங்கரின் பழைய விளையாட்டில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அடித்து ஆடியுள்ளார் ராம் சரண்.

கெட்டதைக் கண்டால் கோபத்தில் பொங்கி எழும் ராம் நந்தனின் சீற்றத்தை ஆரோக்கியமான முறையில் மடைமாற்றி சமூகத்துக்கு நல்லது செய்யச் சொல்கிறாள் அவனது காதலி தீபிகா. படித்து ஐ.பி.எஸ். ஆகி, தொடர் முயற்சியில் ஐ.ஏ.எஸ். ஆகி கலெக்டராகி விடுகிறார் ராம். இறப்பதற்கு முன், ராம் நந்தனை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் ஆந்திர முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தி. முதல்வர் கனவில் இருக்கும் சத்யமூர்த்தியின் வளர்ப்பு மகன் பொப்பிலி மோபிதேவி, ராமை ‘பாலிட்ரிக்ஸ்’ செய்து கட்சியை விட்டு நீக்கி விடுகிறார். ராம் நந்தன் தேர்தல் ஆணையராகி விடுகிறார். இப்படி, காட்சிகள் கதையின் வேகத்தை விட துரிதமாக மாறிக் கொண்டே இருக்கிறது.

முதல்வன் படத்தில், ஒருநாள் முதவராக அர்ஜுன் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் எடுக்கிறார் ராம் சரண். காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டம்தான். ராம் சரண் சஸ்பென்ஷனில் இருந்தால் கூட ஹெலிகாப்டரில்தான் பயணிக்கிறார். பாடல் காட்சிகளில், ஆயிரம் பேர் நடனமாடுகிறார்கள். க்ளைமேக்ஸில், சண்டை நடக்கும் இடத்தையாவது மாற்றியிருந்தால், பார்வையாளர்கள் காதில் ஏற்றுக் கொள்ளக்கூடிய பூச்சூடலாக இருந்திருக்கும்.

ஒருபுறம் திகட்டும் அளவுக்கு வண்ண அலங்காரமாய் இருக்கிறது படத்தின் விஷுவல். மறுபுறம், அடுத்து என்ன என்ற ஆர்வம் ஏற்படுத்தாத உப்புசப்பில்லாத சக்கையாய் இருக்கிறது திரைக்கதை. சைடு சத்யன் எனும் பாத்திரத்தில், பக்கவாட்டிலேயே நடந்து, பக்கவாட்டிலேயே பார்க்கும் பாத்திரத்தில் சுனில் நடித்துள்ளார். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் பிரம்மானந்தம் ரசிக்க வைக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யாவைச் சீண்டிப் பழித்துக் காட்டும் காட்சிகளில், திரையரங்கில் ஜெயராமன் கைத்தட்டலைப் பெறுகிறார். ‘இது அவ்ளோ பெரிய காமெடி இல்லையே!’ என மூளைக்கு உரைத்தாலும், ஜெயராமன் தரும் ஆசுவாசத்திற்குப் பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். கதாபாத்திர வடிவமைப்பை அலட்சியமாகக் கையாண்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். உதாரணம், உப்புக்குச் சப்பாணியாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சமுத்திரக்கனியைச் சொல்லலாம்.

தெலுங்கு ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதைக் கச்சிதமாகக் கணித்து காட்சிகளை வடிவமைத்துள்ளார். சினிமா விஷுவல் மீடியம்தானே என ஷங்கர் கதையையும் திரைக்கதையையும் பற்றிப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், அவற்றிற்குப் பொருந்திப் போகாத பிரம்மாண்டத்தைத் தோற்றுவித்துள்ளார். இப்படம், ஷங்கர் தனது கேமை சேஞ்ச் செய்தாகவேண்டிய அவசியத்தைப் பிரம்மாண்டமாக்கியுள்ளது.