

காயல் – காய்தல் – வாடுதல்
திருமதி தேன்மொழி தற்கொலை புரிந்து கொள்ள, அவரைச் சார்ந்தோர்கள் எல்லாம் துக்கத்தில் வாடுகின்றனர். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பதை ஒரு சமூக நோக்குடன் அணுகுகிறது திரைக்கதை.
காயல், எழுத்தாளர் தமயந்தியின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரி, பிச்சாவரம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் என படத்தின் கதை நெய்தல் திணைகளிலேயே பயணிக்கிறது. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தல் திணையின் அக ஒழுக்க உரிப்பொருளாகும். இரங்கலுக்கு துக்கம், சோகம், வருத்தம் எனும் அர்த்தங்கள் வந்தாலும், இப்படத்தின் கருவான இழந்தவரை எண்ணி வருந்துதல் என்பதோடு சாலப் பொருந்துகிறது.
தேன்மொழியாக காயத்ரி நடித்துள்ளார். தீமையைக் கண்டால் சீறியெழும் பெண்ணாகப் படைக்கப்பட்டிருந்தாலும், தேன்மொழி பாத்திரத்தை முடித்த விதத்தில் ஏமாற்றத்தை அளித்துள்ளார் தமயந்தி. படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆண் பாத்திரங்கள் எல்லாம் நல்லவர்களாக உள்ளனர். தேன்மொழியின் தந்தை ஐசக், தேன்மொழியின் காதலர் ஆதி தமிழாக வரும் லிங்கேஷ், தேன்மொழியின் அண்ணன், அண்ணனின் நண்பன் மனநல மருத்துவர் ஸ்ரீதராக வரும் ரமேஷ் திலக் ஆகியோர் நல்லவர்களாக உள்ளனர். யமுனா, ஸ்ரீதரின் மனைவி ஃபிலோமினா, தேன்மொழியின் மாமியார் ஆகியோர் இருண்மை நிறைந்தவர்களாக உள்ளனர். ஒரே விதிவிலக்காக லிங்கேஷைக் காதலிக்கும் ஸ்வாகதா நல்லவராக வருகிறார். ஆனால் அவர் திரையில் தோன்றினாலே எரிச்சல்படுத்தும்விதமாக அக்கதாபாத்திரத்தை அமைத்துள்ளார் தமயந்தி. ஸ்வாகதா மிக நன்றாக நடிக்கிறார் எனினும் மிகவும் தட்டையாக உருவாக்கப்பட்ட பாத்திரத்தால் விளைந்த வினை அது. பல காட்சிகளில் கதாபாத்திரங்கள் நேரத்தைக் கடத்தும்படி வசனங்கள் பேசுகின்றனர். படத்தின் மையக் கருவைப் பிரதிபலிக்கும்படியான இயல்பான, வலுவான வசனங்கள் இல்லாதது மிகப் பெரிய குறை. எழுத்தாளராகக் கோலேச்ச சாத்தியம் வாய்ந்த இடங்களிலும் போதிய கவனத்தைத் செலுத்தத் தவறியுள்ளார் தமயந்தி. பறவைக் கோண காட்சிகளிலும், நெய்தல் திணையின் நிலப்பரப்பையும் மிக அழகாகத் திரையில் காட்டிய விதத்திலும் ரசிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக்.
குடும்பத்திற்குள் சாதிய மனோபாவமும், பாகுபாடும் பெண்கள் மூலமாகவே நுண்ணியமாகப் பாவுகிறது என்பதை மிக அழுத்தமாகப் பதிந்துள்ளார் தமயந்தி. படத்தின் அடிநாதமான இக்கருத்தை அழகாகக் கதையோடு இழைய விட்டுள்ளார் தமயந்தி. தேன்மொழியின் தாய் யமுனாவாக நடித்திருக்கும் அனுமோல், தனது நடிப்பின் மூலம் படத்தின் ஆன்மாவாக விளங்குகிறார். மற்ற கதாபாத்திரங்களை விட அனுமோலுக்கு வசனங்கள் கம்மி. ஆனால் அனுபவம் வாய்ந்த அனுமோலால், மிக இலகுவாக அவரேற்ற கதாபாத்திரத்தின் வீரியத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிட முடிகிறது. ஆனால், தேன்மொழியின் தந்தையாக நடித்திருக்கும் ஐசக் வர்கீஸால் சுத்தமாக அது முடியவில்லை. மகளின் மரணத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தேன்மொழியின் தந்தை பாத்திரம்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் இந்தக் கனமான பாத்திரத்திற்குப் பொருந்தாமல் மிகவும் விலகியுள்ளார். வேறு எவரையேனும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் படம் கூடுதல் கனத்துடன் அமைந்திருக்கும். சாதி சார்ந்து வளர்த்தெடுக்கப்படும் நம்பிக்கைகளுக்கும், உரையாடல்களுக்கும் பின்னாலுள்ள குடும்ப உறுப்பினர்களின் பங்கை, அதிலும் குறிப்பாகப் பெண்களின் பங்கைப் பற்றிய கலகக்குரலாகவே தமயந்தியின் காயல், ஓர் ஆழி அலை போல் எழுந்தடங்குகிறது.

