
(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்)
பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் – மேன்களும், ஸ்பைடர் – வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும்.
இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஸ்பைடர் சொசைட்டிக்கும் செல்கிறார் மைல்ஸ் மொரால்ஸ். போன பாகத்தில், அழகான சின்னஞ்சிறு பன்றி ஸ்பைடர்-மேன் பூமிக்கு வரும். ஆனால், ஸ்பைடர் சொசைட்டியிலோ, ஆச்சரியமூட்டும் எண்ணிலடங்கா ஸ்பைடர்-மேன்கள் உள்ளனர். டைனோசர் ஸ்பைடர்-மேன். பூனை ஸ்பைடர்-மேன், குதிரை வீரன் (Cowboy) ஸ்பைடர்-மேன் (அந்தக் குதிரையும் ஸ்பைடர் முகமூடி அணிந்திருக்கும்), மலாலா விண்ட்சர் எனும் ஹிஜாப் அணிந்த ஸ்பைடர்-வுமன், பைக் ஓட்டும் கர்ப்பினி ஸ்பைடர்-வுமன் என ஸ்பைடர்-மேன் சூழ் அண்டமாக உள்ளது ஸ்பைடர்-வெர்ஸ்.
இந்தப் பாகத்தின் சிறப்பம்சம், மும்பையைக் காப்பாற்றும் இந்திய ஸ்பைடர்-மேன் பவித்ர் பிரபாகரே! பவித்ர் பிரபாகரின் சாகசத்தை அசத்தலாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படத்திற்கு ‘ஸ்பைடர்-வார்’ என்று கூடப் பெயரிட்டிருக்கலாம். மும்பையில், மைல்ஸ் மொரால்ஸ், பவித்ர் பிரபாகரின் அங்கிளான இன்ஸ்பெக்டர் சிங்கைக் காப்பாற்றிவிடுகிறார். அவரைச் சாகவிட்டிருக்கவேண்டும், அதனால் அல்காரிதத்திதல் பிழை ஏற்பட்டுப் பெரிய அசாம்பாவிதம் நடக்கப் போகிறது என அச்சுறுத்துகிறார் ஸ்பைடர்-சொசைட்டியில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் மிக்யூல் ஓ’ஹரா எனும் ஸ்பைடர்-மேன். “ஸ்பைடர்-மேனாய் இருப்பது என்பது தியாகம். மனதிற்கு நெருக்கமான ஓர் உறவை இழக்க வேண்டியிருக்கும். நீ கூட உங்கப்பாவை இழந்துவிடுவாய்” என்கிறார். மைல்ஸ் மொரால்ஸோ, “நானொரு ஸ்பைடர்-மேன். என்னால் என் அப்பாவையும் காப்பாற்ற முடியும்; இந்த உலகத்தையும் காப்பாற்ற முடியும்” என்கிறார்.
மைல்ஸ் மொரால்ஸைக் கைது செய்ய மிக்யூல் ஓ’ஹரா முடிவெடுக்க, மைல்ஸ் அங்க்கிருந்து தப்பிக்கப் பார்க்கிறார். மைல்ஸ் மொரால்ஸைப் பல்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஸ்பைடர்-மேன்கள் துரத்துகின்றனர். மைல்ஸ் மொரால்ஸ் அத்தனை ஸ்பைடர்-மேன்களுக்கும் பெப்பே காட்டிவிட்டுத் தனது பிரபஞ்சத்திற்குப் போகிறான். மைல்ஸ் மொரால்ஸைப் பார்க்கப் போய், வில்லன் ஹோல்ஸைக் கோட்டை விட்டதற்காக க்வென் ஸ்டேசியையும் அவளைப் பிரபஞ்சம் கடத்தி விடுகின்றனர். மைல்ஸ் மொரால்ஸோ, வேற பிரபஞ்சத்தில் லேண்டாகி விடுகிறார். இத்தொடரின் கடைசிப் பாகமான, ‘ஸ்பைடர்-மேன்: பியாண்ட் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்திற்கான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் தூண்டியுள்ளது இப்படத்தின் க்ளைமேக்ஸ்.
‘பிளாக் பாந்தர்’ எனும் கறுப்பின சூப்பர் ஹீரோ மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருந்தாலும், குழந்தைகளின் மனம் கவர்ந்த சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனில், முதல் கறுப்பின ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸிற்கான வரவேற்பு குழந்தைகள் மத்தியில் அலாதி வரவேற்பைப் பெற்றது. வணிகக் காரணங்களுக்காகவே இது நிகழ்ந்தது என்றாலும், எத்தனையோ சிறுவர்களின் மனதில் சொல்ல முடியாத ஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய இந்தக் கதாபாத்திர வடிவமைப்பை, ஒரு வரலாற்று நிகழ்வாகவே கொண்டாடப்பட வேண்டும். பன்னண்டம், ஸ்பைடர்-அண்டம் என வார்த்தைகளிலுள்ள குழப்பம், திரைக்கதையில் இல்லாதவர் அற்புதமாகப் படத்தை உருவாக்கியுள்ளார்கள். காமிக்ஸ் ஃபார்மட்டில், கண்ணைக் கவரும் வண்ணமயமான அசையும் பிம்பங்கள் விஷூவல் மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன.
இந்தப் படம் இன்னொரு பிரச்சனையைச் சுட்டிக் காட்டுகிறது. ’90கள் வரை சொல்பேச்சு கேட்டு நடப்பவர்களாய் இருந்த சிறுவர்கள், 2000த்திற்குப் பிறகு அப்கிரேடான குழந்தைகளாக உள்ளனர். தனது குழந்தைப் பருவத்தோடு ஒப்பிட்டு, அதே போல் வளர்க்க நினைக்கும் பெற்றோர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. ‘பெற்றோராய் இருத்தல் என்பது வலியைக் கொடுக்கும் மர்மம் மிகுந்த பொறுப்பாக இருக்கு’ என அலுத்துக் கொள்கிறார் ஸ்பைடர்-வுமன் க்வென் ஸ்டேசியின் தந்தை. பன்னண்டத்தில் ஏதோ ஒரு மூலையிலுள்ள இன்னொரு பிரபஞ்சத்தில், மைல்ஸ் மொரால்ஸின் தந்தைக்கும் அதே பிரச்சனை. ஆக, குழந்தை வளர்ப்பு என்பது தமிழக/ இந்திய/ சர்வதேச/ யுனிவர்ஸல் பிரச்சனையோ இல்லை, அது பூதகரமான மல்டி-வெர்ஸ் பிரச்சனை என படம் சுட்டிக் காட்டுகிறது. இப்படி, எமோஷ்னலாக, கலகலப்பாக, சாகசம் நிரம்பிய ஆக்ஷன் காட்சிகளாகப் படம் அனைத்தும் கலந்த கலவையாக ஈர்க்கிறது.