வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார்.
ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். ஒரு பகல் முழுவதும், வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களைச் சுமந்து, கால்வாய்கள் அடங்கிய வழுக்கும் வரப்பின் வழியாக லாரியில் கொண்டு போய் ஏற்றவேண்டும். பாரத்தால் கழுத்து ஒரு பக்கம் சாய்ந்தவண்ணமே இருக்கும் அச்சிறுவர்களுக்கு. அந்த சிறுவர்களின் வலியைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார் மாரி செல்வராஜ். வாரயிறுதிகளில், தனது மகன் சிவனணைந்தான் காய் சுமக்க வருவான் என்று தரகரிடம் முன்பணம் வாங்கிவிடுகிறார் அவனது அம்மா. ஆனாலும் ஒவ்வொரு முறையும் காய் சுமக்கச் செல்வதைத் தவிர்க்க, தன்னாலான மட்டும் முயற்சி செய்கிறான் சிவனணைந்தான்.
சிவனணைந்தான் ரஜினி ரசிகர்; சேகர் கமல் ரசிகர். ரசிக மனோபாவத்தில் மண்ணில் விழுந்து புரண்டு சண்டையிட்டுக் கொண்டாலும், இணை புரியாத ஆத்ம நண்பர்கள். வசனங்களில் வரும் ரஜினி – கமல் சுட்டலின் (Reference) பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் நிறைகிறது.
ரஜினியைப் பிடித்தாற்போல் சிவனணைந்தான்க்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் – பூங்கொடி டீச்சர். ஒரு பதின் பருவத்து மனதை அணுகி, அம்மனதின் வண்ணமயமான மென்னதிர்வைத் தொட்டுள்ளார் மாரி செல்வராஜ். அதை அவருக்கு, இசையாலும் ஒளிப்பதிவாலும் படத்தொகுப்பாலும் சாத்தியமாக்கித் தந்துள்ளனர் சந்தோஷ் நாராயணனும், தேனி ஈஸ்வரும், படத்தொகுப்பாளர் சூரியா பிரதாமனும். படம் கடத்தும் உணர்விற்கு மிக முக்கியமான காரணம் எடிட்டரின் கவித்துவமான படத்தொகுப்பே!
‘பஞ்சு மிட்டாய் சேலை கட்டி’ என்ற பாடலுக்கு மாணவர்களுக்கு நடனம் சொல்லித் தருகிறார் பூங்கொடி டீச்சர். இப்படியாகப் படத்தில் சில தருணங்களை உருவாக்கி வாழையைக் கமர்ஷியலுக்குள்ளும் கொண்டு வந்துவிடுகிறார் மாரி செல்வராஜ். பூங்கொடி டீச்சராக நிகிலா விமல் நடித்துள்ளார். படத்தில் அவர் வரும் காட்சிகள் அனைத்துமே, அவர் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து மட்டுமே காட்டப்படுகிறார். சிவனணைந்தான்க்குப் பூங்கொடி டீச்சரை எவ்வளவு பிடிக்கும் என்பது மட்டுமே திரையில் வருகிறது. கொஞ்சம் கூட எங்கும் விலகாமல், சொல்ல வந்ததில் மட்டுமே மிகக் கவனமாக இருந்து, அவற்றில் இருந்து பூரணமான அழகை மாரி செல்வராஜ் கொண்டு வந்துள்ளார். அவருக்கென்று அரசியல் இருந்தாலும், இப்படத்தில் தப்பித் தவறிக் கூட அது பிரதிபலித்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்துள்ளார்.
பண விஷயத்தில் கறார் காட்டும் தரகர், வேறு ஆள் இல்லை, அதே ஊரைச் சேர்ந்த அவர்களது உறவினர்தான் என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ளார். அதன் மூலம் உழைப்பு, சுரண்டல் எனும் வர்க்க அரசியலைப் போகிற போக்கில் தொட்டுவிடுகிறார். கம்யூனிசக் கொடியை அலங்கரிக்கும் சுத்தியலையும் அரிவாளையும் அழகாகப் பயன்படுத்தியுள்ளார். சிவனணைந்தான் அம்மாவின் கையில் அச்சின்னம் பச்சை குத்தப்பட்டிருக்கும். உழைக்கிறவனால் தான் ஊரில் ஓர் ஆளாக வேரூன்ற முடியும், இல்லையெனில் தன் மகனை ஊரார் ஏமாற்றி விடுவார்கள் எனும் கருதுகோள் உடையவர். ‘பணம் வாங்கியுள்ளோம் அதற்கு உழைக்கவேண்டும்’ எனும் எளிய மனம் தான் வாழ்க்கைக்கான அவரது தத்துவமே! அவருக்கு அந்தச் சின்னம், தனது கணவனின் நினைவு மட்டுமே! அதே சின்னத்தை, ‘அதிகாரத்தை தைரியமாகக் கேள்வி கேட்பது’ என்று புரிந்து வைத்துள்ளான் சிவனணைந்தான். தன் தந்தை அதைத்தான் செய்தார், கனி அண்ணனும் அதைத்தான் செய்கிறார் என கம்யூனிசச் சின்னம் பொறிக்கப்பட்ட பேப்பர் வில்லையைப் பரிசளிக்கிறான். ரஜினி, பூங்கொடி டீச்சர் அளவுக்கு இல்லாவிட்டாலும், கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பும் மரியாதையும் மனதின் அடியாழத்தில் எங்கோ ஒளிந்துள்ளது நாயகனுக்கு.தரகர் பாத்திரத்திற்கு நடிகர் பத்மன் நல்ல தேர்வு.
சிவனணைந்தானின் அம்மாவாக ஜானகி நடித்துள்ளார். கர்ணன் படத்தின் தனுஷிற்கு அம்மாவாக நடித்திருப்பார். பெயர் போடும்பொழுதே கர்ணன் ஜானகி என்றே போடுகின்றனர். மாரி செல்வராஜால், ஏன் வேறு எவரையும் அந்தக் கதாபாத்திரத்திற்கு யோசிக்க முடியவில்லை என்பதைப் படம் பார்க்கும் பொழுது உணரமுடியும். தொடக்கம் முதல் சிவனணைந்தானின் படமாக இருப்பதை, க்ளைமேக்ஸில் தனது படமாக்கிவிடுகிறார். ஊரையே உலுக்கும் ஒரு விபத்தை சிவனணைந்தான் எப்படிப் பார்க்கிறான் என்பதில் இல்லாத கனம், மகனைப் பட்டினி போட்டுவிட்டேனே என்ற தாயின் அழுகையில் உள்ளது. சிவனணைந்தானின் உள்ளம் என்ன பாடுபட்டது என்ற புள்ளியில் படம் நிற்காததாலோ என்னவோ, படைப்பு முழுமையைத் தொடுவதில் இருந்து லேசாய் விலகிவிடுகிறது.
கனியாக கலையரசனும், சிவனணைந்தானின் அக்கா வேம்புவாகவும் திவ்யா துரைசாமியும் நடித்துள்ளனர். அவர்களுக்குள் இயல்பாகத் துளிர்க்கும் காதலைத் தனக்குத் தெரியுமென சேகர் சொல்லுமிடத்திலும் திரையரங்கத்தில் சிரிப்பொலி எழுகிறது. சேகராக நடித்திருக்கும் ராகுல் மிகச் சிறப்பான தனது நடிப்பால் படத்திற்கு உயிரளித்துள்ளார். இவர், ராயன் படத்தில் கருப்பு வெள்ளை காட்சியில் வரும் இளம்வயது தனுஷாக நடித்து, அப்படத்திற்கு நல்லதொரு அடித்தளத்தை உருவாக்கியிருப்பார். கமல் ரசிகராக நடிப்பதற்குப் பொருத்தமான ஆளைத் தேர்ந்தெடுள்ளார் மாரி செல்வராஜ். சிவனணைந்தானாகப் பொன்வேல் நடித்துள்ளார். பூங்கொடி டீச்சரைப் பார்த்தால் மலரும் பொன்வேலின் முகமும், காய் சுமக்கப் போகவேண்டும் என்று நினைப்பு வந்தாலே வாடிப் போகும் பாவனையும், வாழையின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்துள்ளது.