Shadow

குடும்பஸ்தன் விமர்சனம்

‘குடும்பஸ்தனா வெற்றிகரமான வாழ்க்கை வாழணும்ன்னா வளைஞ்சி நெளிஞ்சி தான் ஆகணும்’ என்றும், ‘அப்படிலாம் வளைஞ்சி நெளியணும்ன்னு தேவையில்ல’ என்றும் இரு தரப்பு மல்லுக்கட்டுகிறது. அந்தக் குடும்ப மல்லுக்கட்டு ஈகோவில் எந்தக் கொள்கை முந்துகிறது என்பதே குடும்பஸ்தன் கதையாகும்.

கதையின் சின்ன லைனாக இதை எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அழகான லேயர்ஸை வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. மணிகண்டன் காதலித்து வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். காதல் மனைவி சான்வே மேகனாவிற்கு கலெக்டராக வேண்டும் என்பது இலக்கு. அப்பா ஆர்.சுந்தர்ராஜனுக்குத் தனது பழைய வீட்டைச் சீர் செய்ய வேண்டும் என்பது இலக்கு. அம்மாவிற்கோ 50 ஆயிரம் ரூபாய் பேக்கேஜில் ஆன்மிக டூர் போக வேண்டும் என்பது இலக்கு. இத்தனை பேர்களின் இலக்குகளுக்கும் நமது ஹீரோ மணிகண்டனே பொறுப்பு. தனது அக்கா கணவர் குரு சோமசுந்தரத்தின் ஈகோ முன் தடுமாறிடக்கூடாது என்பது மணிகண்டனின் இலக்கு. இவற்றையெல்லாம் அவர் எப்படி சமாளித்து சரி கட்டுகிறார் என்பதே குடும்பஸ்தன் படம்!

நடுத்தர வர்க்கத்தான் என்றால் அது நான் தான் என 100% இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துகிறார் மணிகண்டன். நகைச்சுவைக் காட்சிகளும் சரி, எமோஷ்னல் காட்சிகளும் சரி, அவரது மீட்டரில் கச்சிதமாக இருக்கிறது. சான்வே மேகனாவிற்கும் அவரின் கதாபாத்திரத்தைக் குறிப்பிடும்படி அழுத்தமான வேடம். அவரும் சிறப்பாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம் ‘ஒரு சைனா தாண்டவமே’ ஆடியுள்ளார். அதென்ன சைனா தாண்டவம்? படம் பாருங்கள் புரியும். ஆர்.சுந்தர்ராஜன், அவரின் மனைவி பாத்திரம், பாலாஜி சக்திவேல் உள்பட துணை கதாப்பாத்திரங்கள் அத்தனை பேர்களும் தரமான தேர்வு. அனைவருமே அசத்தியுள்ளனர்.

படத்தின் இயல்பான போக்கிற்குத் தகுந்தாற்போல, பின்னணி இசையும் பாடல்களும் அமைந்துள்ளன. ஒளிப்பதிவும் படத்தின் இயல்புத்தன்மையிலிருந்து விலகவில்லை. எடிட்டர் ஸ்ட்ரிக் ஆஃபீசராக வேலைசெய்து, பின்பாதியில் பத்து நிமிடத்தைக் குறைத்திருக்கலாம்

வெகு சாதாரணமாக நாம் பார்க்கும் நடுத்தரவாதி ஒருவனின் வாழ்க்கைப் பாடுதான் கதை. அதற்குள் சாதி, நட்பு, சமூக அழுத்தம் என பலவற்றை கதையைத் துருத்தாதபடி கொண்டு வந்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. முதல்பாதியை ஷார்ப் செய்த அளவிற்கு படத்தின் இரண்டாம் பாதியையும் ஷார்ப் செய்திருக்கலாம் இயக்குநர். இருப்பினும் கடைசி வரைக்கும் நம்மை என்கேஜ் செய்கிறான் இந்தக் குடும்பஸ்தன்.

– வெண்பா தமிழ்