

மருதம் என்பது வயலையும், வயல் சார்ந்த இடங்களையும் குறிக்கும் ஒரு நிலப்பிரிவைக் குறிக்கும் திணையாகும். தமிழ் சினிமாவில் விவசாயிகளை வைத்து, ‘விவசாயின்னா யார் தெரியுமா? அவன் சேத்துல கால் வைக்கலனா சோத்துல நாம கை வைக்க முடியுமா?’ என்பது போலவே உணர்வுகளைப் பிழிந்து, அதை வைத்து கல்லா கட்டி விட்டன பல படங்கள். ஆனால் கன்டென்ட்டுக்காக விவசாயியைப் பற்றி எடுக்காமல், விவசாயிகளின் யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்டி, அத்தோடு அப்படி பல விவசாயிகள் சில மோசடி பேர்வழிகளிடம் சிக்கித் தங்கள் சொத்தை, வாழ்வை இழந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படமே மருதம் ஆகும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தன் சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து, மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் விதார்த். அரசுப் பள்ளியை விட தன் மகன் தனியார் பள்ளியில் படித்தால் தான் அவன் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என நினைத்து மகனை அந்த மாவட்டத்திலேயே மிகப் பெரிய “கோல்டன் பள்ளி”யில் சேர்க்க முயற்சி செய்கிறார். கவுன்சிலர், எம்எல்ஏ என சிபாரிசில் மகனுக்குச் சீட்டு வாங்குகிறார். பள்ளிக்குக் கட்டணம் செலுத்த தன் நிலத்தை அடமானம் வைத்து 3 லட்ச ரூபாயை அருள்தாஸிடம் இருந்து கடன் வாங்குகிறார். சில நாட்களிலேயே அந்த நிலத்தைச் சுற்றி யாரோ ஒருவர் கம்பி வேலி போடுகிறார். வங்கியில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாததால் அந்த நிலத்தை சம்பந்தப்பட்ட வங்கி ஏலம் விட்டது எனத் தெரிய வருகிறது. ஆனால் கடனே வாங்காத விதார்த் தரப்பு அதை எப்படி நீதிமன்றத்தில் நிரூபிக்கிறது, உண்மையில் அந்த நில விஷயத்தில் நடந்தது என்ன, அந்த கடனை வாங்கியது யார், அந்த மோசடியில் இருந்து மீண்டு விதார்த் தன் நிலத்தை மீட்டாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
நல்ல நல்ல கதைகளையே தேடித் தேடி நடிக்கும் விதார்த் திரை வாழ்வில் இந்த மருதம் படமும் ஒரு மிகச் சிறந்த படைப்பாகவே உருவாகியிருக்கிறது. ஒரு குழந்தைக்கு அப்பாவாக, தன் மகன் எதிர்காலத்துக்காக உழைக்கும் ஒரு தந்தையாக, இயற்கை விவசாயத்தை மதிக்கும் ஒரு நல்ல விவசாயியாக மிக மிக யதார்த்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். தன்னிறைவுடன் விவசாயம் செய்யும்போது ஒருவித எனர்ஜியுடனும், எல்லாவற்றையும் இழந்து நிற்கும்போது அந்த வலியைக் காட்டி மிக இயல்பாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் ரக்ஷனா, ஒரு கிராமத்துப் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். கிராமத்துப் பெண்கள் எப்படி இருப்பார்கள், எப்படி வேலை செய்வார்கள் என்பது வரை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார். நல்ல ஒரு பக்குவமான நடிப்பு.
விதார்த்தின் நண்பராக மாறன் ஆங்காங்கே காமெடியின் மூலம் நம்மைச் சிரிக்க வைத்தாலும் இறுதியில் கொஞ்சம் கலங்கவும் வைக்கிறார். விதார்த்துக்கு உதவும் வழக்கறிஞராக ‘தினந்தோறும்’ நாகராஜ், அவராகவே வந்து போயிருக்கிறார். ஸ்டைலிஷ் வில்லனாக சரவண சுப்பையா ஸ்கோர் செய்கிறார். ஃபைனான்சியராக அருள் தாஸ் கச்சிதமான தேர்வு.
பாடல்களைப் பொறுத்தவரை மிக இனிமையான பாடல்களைத் தந்திருக்கிறார் NR ரகுநந்தன். அந்தக் கிராமத்துப் பின்னணியில் அவற்றைப் படமாக்கிய விதமும், அவர்களின் வாழ்வியலைத் தத்ரூபமாக படம் பிடித்து காட்டியதும் அருமை. ராணிப்பேட்டை, வாலாஜா என வட தமிழ்நாட்டையும் மிக அழகாகக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் அருள் சோமசுந்தரம்.
இயக்குநர் கஜேந்திரன் விவசாயம், விவசாயிகள் படும் துயரங்கள் என அடித்துத் துவைத்த அதே கதைகளைப் படமாக்காமல், அவர் பார்த்த சில விஷயங்களின் பின்னணியில் இந்த மருதம் படத்தைத் தந்திருக்கிறார். இதுவரை அதிகம் சொல்லப்படாத கதை. வாங்காத கடனுக்குத் தங்கள் விவசாய நிலங்களை இழந்து, அதனால் உயிரை, வாழ்க்கையை இழந்த விவசாயிகளின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை சோகம் பிழியாமல் கொஞ்சம் கமர்ஷியல் அம்ங்களைக் கலந்து மிக அழகாகத் தந்திருக்கிறார். அத்துடன் சட்டம், வங்கிகள், பள்ளிகள் பற்றிய விழிப்புணர்வுவைத் தந்திருக்கிறார். விதார்த் கேரியரில் இன்னுமொரு நல்ல தரமான படம் தான் இந்த மருதம்.
– மாறன் செ

