

பார்க்கிங், லப்பர் பந்து முதலிய வெற்றிப்படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’ ஆகும். இயக்குநர் சண்முகம் முத்துசாமி கச்சா எண்ணெய் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான விஷயங்களை விவாத்துள்ளர்.
சென்னை கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவ கிராமங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் சில விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. நாயகன் ஹரிஷ் கல்யாணும், அவரது வளர்ப்பு தந்தை சாய்குமாரும் கச்சா எண்ணெய் கடத்தல் தொழிலில் கிங்-பின்னாக இருக்கிறார்கள். அவர்களது ஆதிக்கத்தைப் பிடிக்காத இன்னொரு கோஷ்டி அந்தத் தொழிலைக் கைப்பற்ற காவலதிகாரி வினய் உதவியுடன் இயங்குகிறது. அதே நேரம் கார்ப்பரேட் முதலாளி ஒரு தனியார் துறைமுகம் ஒன்றை அமைக்க காய் நகர்த்துகிறார். இந்தச் சூழலில் மீனவர்கள் நிலை என்ன ஆனது, அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆனது, கார்ப்பரேட் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதா போன்ற கேள்விகளுக்குப் படத்தின் மீதிக்கதை.
ஹரிஷ் கல்யாண் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையுமே கொஞ்சம் தனித்துவமாக இருக்கிறது. அவர் படங்களில் ஏதாவது ஒரு ஆக்ஷன் காட்சி அங்கங்கு இருக்கும். இந்த ‘டீசல்’ படம் ஹரிஷ் கல்யாண் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம். ஓபனிங் பாடல், சண்டைக் காட்சிகள், ஹீரோ வில்லன் மாஸ் மோதல் என பின்னி எடுக்கிறார். நாயகி அதுல்யா ரவி வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார்.
வில்லனாக மிரட்டுகிறார் வினய் ராய். அவரது தோற்றமும், பார்வையுமே பாதி வேலையை செய்து விடுகிறது. ஹரிஷ் கல்யாணின் வளர்ப்பு தந்தையாக நடித்துள்ள சாய் குமார் மனதில் அழுத்தமாக பதிகிறார். வினய் மனைவியாகக் கொஞ்ச நேரமே வந்தாலும் அனன்யா ஸ்கோர் செய்கிறார். சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் எல்லாம் கூட நல்ல பரிச்சயமான நடிகர்கள். திரும்பும் திசையெல்லாம் கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா மற்றும் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.
திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் ரொம்பவே சூப்பர். பீர் சாங் தியேட்டரில் கொண்டாட்டத்திற்கு உத்திரவாதமளிக்கிறது. நாயகனின் அறிமுக பாடல், ‘தில்லுபரு ஆஜா’வும் அசத்துகிறது. பின்னணி இசையிலும் குறைவில்லை. எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.
அடங்காதே என்ற படத்தை எடுத்து இன்னும் வெளிவராத நிலையில் இந்த டீசல் படத்தை மிகப் பிரம்மாண்டமாகவே தந்திருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி. கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல் எதிர்கால எனர்ஜி வியாபாரம் என பல விஷயங்களைக் கொஞ்சம் நன்றாகவே ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார். திரையிலும் எந்தக் குறையும் இல்லாமல் விஷுவல்களை நன்றாகவும் பிரம்மாண்டமாகவும் காட்டியிருக்கிறார். சில இடங்களில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே நீளமாக இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. ஒரு சில வாவ் மொமெண்ட்ஸ் ஆங்காங்கே வந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் அது மறைந்து சராசரியாகிவிடுகிறது. இந்த மட்டுப்படுத்துதலைத் தவிர்த்திருந்தால், படம் தீப ஒளி திருவிழாக்கானதாய்ப் பட்டாசாய் ஒளிர்ந்திருக்கும்.
– மாறன் செ

