
தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) திரைப்படம். இப்படத்தில் பின்னணி இசையும் இல்லை, மற்ற படங்கள் போல் பிரத்தியேகமான கேமரா ஒளிப்பதிவும் இல்லை. போகிற போக்கில், நாம் மொபைலிலோ, கேமராவிலோ படம்பிடிக்கும் ரா ஃபூட்டேஜ்கள் (Raw footage) போல்தான் முழுப்படமுமே உள்ளது.
அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களைப் பதிவிடும் ஏழு யூடியூபர்கள், ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிச்சாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாகப் பதிவு செய்யச் செல்கிறார்கள். அவர்கள் காணாமல் போகின்றனர். அவர்களைக் கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களைப் பறிமுதல் செய்கின்றனர். அந்த யூடியூபர்களின் கேமராவில் பதிவான ஏழு மணி நேர ஃபூட்டேஜ்களைத் தொகுத்து ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது.
ரிஷி, மெல்வின், அங்கிதா, ஜெனிஃபர் என நான்கு யூட்யூபர்களும், காந்தா எனும் உள்ளூர்ப் பெண்ணும் காட்டுக்குள் செல்கின்றனர். காந்தாவைத் தவிர மற்ற நால்வருக்கும் ஏழு கன்னிச்சாமிகளும், சூனியக்கார மங்கையும் பொய்யெனக் கருதுகின்றனர். ஆனால் இரவானால் அமானுஷ்யமாக சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அமானுஷ்யத்தை விஷுவலாகக் காட்டாமல், வித்தியாசமான மந்திர உச்சாடனத்துடன் ஒரு முணுமுணுப்பின் (Murmur) மூலமாக உனரவைக்கின்றனர்.
படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் மழலைத்தமிழ் பேசும் ஹிந்திவாலா ரிஷியாக நடித்திருக்கும் ரிச்சி கபூர். துணை பாத்திரம் போன்றும், நகைச்சுவைக்கான பாத்திரம் போன்றும் அறிமுகமானாலும், படம் முடியும்போது நாயகன் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறார். ஊர்க்காரப் பெண் காந்தாவாக யுவிகா ராஜேந்திரன் கச்சிதமாகப் பொருந்திப் போயுள்ளார். மது, சிகரெட், கஞ்சா என அராத்தான பேர்வழி அங்கிதாவாக சுகண்யா ஷண்முகம் நடித்துள்ளார். நால்வரிலும் மிக நல்ல பாத்திரமான ஜெனிஃபராக அரியா செல்வராஜ் நடித்துள்ளனர். இருவருமே கிளாமராகவும் ஆங்காங்கே காட்சிக் கோணங்களின் மூலமாகப் பயன்படுத்தியுள்ளனர். தொழிலை முதன்மை நோக்கமாகக் கொண்ட மெல்வின் பாத்திரத்தில் தேவ்ராஜ் ஆறுமுகம் நடித்துள்ளார். வசமாகக் கூடாரத்தில் தனியாக மாட்டிக் கொண்டாலும், எப்படியோ முயன்று கன்னிச்சாமிகளைப் பார்த்துவிடுகிறார். கன்னிச்சாமிகளை விஷுவலுக்குள் இருள் சார்ந்து காட்டியதில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன். கதையில் பெரிய திருப்பமோ, சுவாரசியமோ இல்லாவிட்டாலும், படம் பார்க்கும் அனுபவத்தைப் புதிதாகவும் வித்தியாசமாகவும் அளிப்பதில் கவனமாக இருந்துள்ளார்
படத்தின் உண்மையான கதாநாயகன் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ்தான். கதாபாத்திரங்கள் கேமராவைப் பிடித்துக் கொண்டு நடிப்பதில் இருந்து, காட்டின் இரவில், கிடைக்கும் மிக மிகச் சன்னமான வெளிச்சத்தில் விஷுவலாகக் கதை சொல்ல ஒரு பெரும் உழைப்பைப் போட்டுள்ளார். இத்தகைய சோதனை முயற்சியில், பார்வையாளர்களின் கவனம் குலையாமல் படத்திற்குள் தக்கவைக்க வேண்டிய பொறுப்பைப் படத்தொகுப்பாளர் ரோஹித் அழகாகச் செய்துள்ளார். சில அசைவற்ற (Static) காட்சிகள் பொறுமையைச் சோதிக்கும் வகையில் நீண்டாலும், ஒலி வடிவமைப்பு செய்துள்ள கேவ்ய்ன் ஃப்ரெட்ரிக் (Kewyn Fredrick) அக்காட்சிகளை சமன் செய்யுமளவு அற்புதமாகப் பணிபுரிந்துள்ளார்.
தொடக்கத்தில் ஆவணப்படத்தைப் பார்க்கும் உணர்வைத் தந்தாலும், காட்டுக்குள் சென்ற பின் ஒலி வடிவமைப்பின் மூலமும், காட்சிக் கோணங்களின் வாயிலாகவும் திகிலையும் அமானுஷ்யத்தையும் கடைசி வரை உணரவைத்துள்ளனர்.