
நாங்கள் என்பது ஒரு கண்டிப்பான தந்தை, அவரது மூன்று மகன்கள் மற்றும் அவர்களது நாய் ஆகிய ஐவரைக் குறிக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ஒரு கலைப்படமிது.
மின்சாரமும, தண்ணீர் வசதியும் இல்லாத வீட்டில், கார்த்திக், துருவ், கெளதம் ஆகிய மூன்று சிறுவர்கள் எல்லா வேலையையும் செய்கின்றனர். அச்சிறுவர்களின் தந்தை ராஜ்குமார் வந்ததும், அச்சிறுவர்களின் இறுக்கமும் பொறுப்பும் மேலும் அதிகமாகிறது. அச்சிறுவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளரும் அவர்களது தந்தையே! அந்தச் சிறுவர்கள் அவர்களது தந்தையிடம் அகப்பட்டுச் சிக்கித் தவித்து, மகிழ்ந்து, தந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள மெனக்கெட்டு, பால்யத்தை இழந்த ஒரு வினோதமான வாழ்க்கை வாழ்கின்றனர். அதிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தும், நடைமுறைக்கு ஒத்துவராத அம்முயற்சியைக் கைவிட்டு மீண்டும் கூடடைகின்றனர். அச்சிறுவர்களது வாழ்க்கை தான் ‘நாங்கள்’ படத்தின் கதை. ஒரு முழுமை பெறாத அழகிய ஓவியம் போலொரு படம்.
முழுமை பெறாததிற்குக் காரணம், ‘ராஜ்குமார் அப்படித்தான்’ என்ற திட்டவட்டத்தில் இருந்து வெளியில் வராத கதையின் போதாமைகளே! ராஜ்குமார் ஏன் வறுமையில் சிக்கினார், அவருக்கும் அவர் மனைவிக்கும் என்ன பிரச்சனை, உதவக்கூடிய நிலைமையில் ராஜ்குமாரின் தந்தை இருந்தும் ஏன் வறுமையில் உள்ளனர் என சில கேள்விகளுக்குள் போகாமல் தவிர்த்து விடுகிறார் எழுதி இயக்கியுள்ள அவினாஷ் பிரகாஷ். படத்தின் ஒளிப்பதிவிற்கும் படத்தொகுப்பிற்கும் கூட அவரே பொறுப்பேற்றுள்ளார். ஒளிப்பதிவாளரே படத்தொகுப்பாளராக இருக்கும் பட்சத்தில், எடுத்தவற்றில் கத்திரி போட மனமே வராது. எடுத்த அனைத்துமே அழகாகத் தெரியும். இப்படத்தின் 151 நிமிட நீளத்திற்கு அதுவே காரணம். ஆகஸ்ட் 1998 இலிருந்து மார்ச் 2000 வரைக்கும் அச்சிறுவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களின் தொகுப்பாகப் படம் தொகுக்கப்பட்டுள்ளது.
ராஜ்குமாராக அப்துல் ரஃபே நடித்துள்ளார். எரிச்சலை ஊட்டும் கதாபாத்திரமாக அறிமுகமாகி, ஒரு கட்டத்தில் அவரது மூன்று மகன்களைப் போலவே பார்வையாளர்களையும் தனது நடிப்பால் ஏற்றுக் கொள்ள வைத்துவிடுகிறார். ஏன் கண்டிப்புடன் இருக்கிறார், ஏன் அழுகிறார், சிரிக்கிறாரே இவரை நம்பலாமா, பாசத்தோடு அரவணைக்கிறாரே இது எவ்வளவு நேரத்துக்கு என அவரது மகன்களைப் போலவே பார்வையாளர்களையும் ஒரு பதற்றத்திலே வைத்துள்ளார் அப்துல் ரஃபே. மகன்களின் பால்யத்து மீது அக்கறை கொண்டு சில தருணங்களில் மிகவும் நெகிழ்ந்து போகக் கூடியவராக உள்ள ராஜ்குமார், ஏன் அவர் மனைவியை ஒதுக்கி வைக்கிறார் என்பதில் தெளிவில்லை. இந்தப் படம் எதைப் பற்றியது என்பதைக் குறிக்கும் விதமாக Hiraeth (ஹிரைத்) எனும் சொல்லைப் படத்தின் தொடக்கத்தில் போடுகின்றனர். அதற்கு வீட்டைப் பிரிந்த ஏக்கம் அல்லது அன்பானவர்களைப் பிரிந்த ஏக்கம் எனப் பொருள் கொள்ளலாம். தாயுக்கும் மகன்களுக்கும் உள்ள பிரிவேக்கம் தான் கரு என்றும் கொள்ளலாம். ஆனால் படம் ராஜ்குமாரின் அகத்தைப் பிரதிபலிக்கவே மெனக்கெடுகிறது. அதனால் சிறுவர்களின் தாயாக நடித்திருக்கும் பிரார்த்தனா ஸ்ரீகாந்திற்குக் கதையிலும் திரையிலும் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
ராஜ்குமாரின் மகன்களாக நடித்துள்ள V மிதுன், ரித்திக் மோகன், D நிதின் ஆகிய மூன்று சிறுவர்களும் மிகச் சிறப்பான நடிப்பை அளித்துள்ளனர். அந்த சிறுவர்களின் பதற்றமும், மகிழ்ச்சியும், கையறு நிலையும் பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்கிறது. பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில், தந்தையுடன் வளரும் அந்த சிறுவர்களின் உணர்ச்சிப்பூர்வமான மனநிலையை அழகாகத் தன் இசையில் பிரதிபலித்துள்ளார் இசையமைப்பாளர் வேத் ஷங்கர் சுகவனம். படத்தின் கனத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் பின்னணி இசை பிரதான பங்கு வகிக்கிறது. கொஞ்சம் பொறுமையைக் கோரினாலும் சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லாத படமாக, ‘நாங்கள்’ இருப்பதற்கு பிரதான நடிகர்கள் நால்வரின் நடிப்பும், இசையும், ஒளிப்பதிவுமே காரணமாகும்.