

‘சாவு வீடு’ என்பதன் சுருக்கமாகச் சாவீ எனத் தலைப்பிட்டுள்ளனர். ‘சாவு வீட்டுக்கு டிக்கெட் கொடுங்க’, ‘சாவு வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்’ எனப் பார்வையாளர்களால் கேட்கவோ, சொல்லவோ முடியாதெனச் சில திரையரங்கத்தில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகச் ‘சாவீ’ எனத் தலைப்பை மாற்றி வெளியிடுகின்றனர்.
நாயகன் ஜூடின் இளைய தாய்மாமன் ஆரோக்யராஜ் இறந்து விடுகிறார். அவரது பிணம் காணாமல் போகிறது. ஆரோக்யராஜின் உடல் என்னானது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
ஆய்வாளர் சக்கரவர்த்தியாக ஆதேஷ் பாலா நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரம் என்றாலும், தேவையற்ற இடங்களில் சம்பந்தமே இல்லாமல் திடீர் தீடீரெனக் குரலை உயர்த்துகிறார். நாயகனின் நண்பன் கிரணாக ராட்சசன் யாசர், படத்தின் கலகலப்பிற்கு ஓரளவு உதவியுள்ளார்.
பானா காத்தாடி, கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த உதய் தீப், முதல் முறையாக நாயகனாக நடித்துள்ளார். இவர், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை, ‘நிலா காலம்’ படத்திற்காக, 2001இல் பெற்றது குறிப்பிடத்தக்கது. சாவு வீட்டில், பக்கத்து வீட்டுப் பையன் போன்றொரு பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். எனினும், சுமாரான திரைக்கதையால், அவரே பேசி காமெடியெனச் சிரித்துக் கொள்ளும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
எழுதி இயக்கியுள்ள ஆண்டன் அஜித்திற்கு, டார்க் காமெடி எடுக்க முயற்சி செய்துள்ளார். ஒரு சாவு வீட்டில் பிணம் தொலைந்துவிட்டால் என்னாகும் என்ற இயக்குநரின் யோசனை அபாரமானது. நல்ல கருவை அவர் கண்டடைந்தாலும், அதை நகைச்சுவையான திரைக்கதையாக்குவதில் திணறியுள்ளார். படம் எதை நோக்கிப் பயணிக்கிறது என கடைசி வரை சஸ்பென்ஸாகவே கொண்டு சென்று, ஒரு சோஷியல் மெஸ்ஸேஜ் சொல்லி முடித்து விடுகிறார். அந்த மெஸ்ஸேஜையாவது அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.


