

இந்த வருடத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சிறை திரைப்படம். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரியின் முதற்படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார்.
வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ரெளஃப் எனும் கைதியை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார் கதிரவன் எனும் போலீஸ் ஏட்டு. அந்தப் பயணத்தின் வாயிலாக, நீதித்துறையின் போதாமைகள், அழுத்தமான காதல் கதை, போலீஸார்க்கு நேரும் சங்கடம், கொம்பு முளைத்தது போல் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் போலீஸாரின் ஆணவப்போக்கு என அழுத்தமான கதை சொல்லியுள்ளார் இயக்குநர்.
அப்துல் ரெளஃபாக L.K.அக்ஷய் குமார் நடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமாரின் மகனாவார். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படமிது. அதற்காக லலித் குமார், டாணாக்காரன் தமிழிடம், விசாரணை போலொரு கதை கேட்டுள்ளார். தமிழ் சொன்ன உண்மைக்கதையில், அப்துல் கதாபாத்திரத்திற்குக் கன கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் அக்ஷய். அவரது குரலும், உடற்மொழியும், மருண்ட பார்வையும் அவரை அப்துலாகவே மாற்றியுள்ளது. இயக்குநரால் மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.
சின்னச் சின்ன கதாபாத்திரத்திற்கும் கவனம் செலுத்தி மெருகேற்றியுள்ளார் சுரேஷ் ராஜகுமாரி. அப்துலின் அம்மா, அவரது கணவன் மீது கொண்டுள்ள காதலைப் போகிற போக்கில் காவிதமாக்கிவிடுகிறார். கதிரவனுக்கும், அவரது மனைவி மரியத்துக்கும் இடையே நிலவும் இணக்கத்தையும் எதார்த்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மரியமாக ஆனந்த தம்பிராஜா நடித்துள்ளார். அவரது முகம் ஒரு கதை சொல்கிறது. கதாபாத்திரங்களின் தேர்வில் மட்டுமில்லாமல், அவர்களைப் பயன்படுத்திய விதத்திலும் அசத்தியுள்ளார் இயக்குநர்.
மரியத்தின் கணவர் ஏட்டு கதிரவனாக வரும் விக்ரம் பிரபுவிற்கு இது 25 ஆவது படமாகும். அதை மேலும் சிறப்பாக்கும் விதமாக, இப்படம், 2025 ஆம் ஆண்டில் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகிறது. டாணாக்காரனைப் போலவே அவர் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி வாழ்நாளிற்கான கதாபாத்திரம் வாய்த்துள்ளது.
ரெளஃபின் காதலி கலையரசியாக மலையாள நடிகை அனிஷ்மா நடித்துள்ளார். படத்தின் ஆன்மா எனச் சொல்லுமளவு மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். திரையில் அவரது இருப்பே, படத்திற்கு ஓர் அழகையும் கனத்தையும் தீவிரத்தையும் (intense) தந்துவிடுகிறது. அவரது பெரிய கண்களும், புன்னகையும் வசீகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் கலங்கும்போது பார்வையாளர்களையும் சேர்த்துக் கலங்கடிக்கிறார்.
விசாரிக்கப்படாமலே, வாய்தா மட்டும் அளிக்கப்பட்டு ஆண்டுகணக்காகச் சிறையில் வாடும் கொடுமை எவர்க்கும் நிகழக்கூடாதது. அதுவும் பாதிக்கப்பட்ட அந்த நபர் முஸ்லிமாக இருந்துவிட்டால் அது சகிக்க முடியாத கூடுதல் கொடுமை. நீதித்துறையின் மெத்தனத்தை மட்டுமல்லாமல், பொதுப்புத்தியையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர். எத்தனை சரிகள் நம் பக்கமிருப்பினும், எனது அதிகாரத்திற்கு நீ அடங்கியே ஆகவேண்டுமென்ற போலீஸின் கொடும் மனநிலையை எதிர்கொள்ள நேரிடும் பொழுது ஏற்படும் பதற்றத்தைத் தணிக்கச் சிரமப்பட வேண்டியதிருக்கும். அத்தகைய மனநிலையில் உள்ள வேலூர் கான்ஸ்டபிளை, விக்கிரவாண்டி காவல்துறை அதிகாரி டீல் செய்யும் விதம் உள்ளபடிக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் அதே சமயத்தில் மனதைக் கனக்கவும் வைக்கிறது. அதிகாரம் உள்ளவர்கள் (அது சிறியதோ/ பெரியதோ) கரிசணத்துடன் நடந்து கொண்டால், பலரின் வாழ்க்கை அதனால் நல்லவிதமாக மாறும் என அழுத்தமாக இயக்குநர் படத்தை முடித்துள்ளது சிறப்பு.


