தேஜாவு இயக்குநரின் இரண்டாவது படமிது. பிரபல நடிகர்களைத் தேடிப் போகாமல், திறமையானவர்களுக்கு வாய்ப்பளித்து, சின்ன பட்ஜெட்க்குள் படம் செய்யவேண்டும் என்று தனக்குத் தானே வரித்துக் கொண்ட விதிக்கு உட்பட்டு இப்படத்தை இயக்கியுள்ளார். புகழ் (PUGAZH) & ஈடன் (EDEN) என்பவர்கள் Zhen ஸ்டுடியோஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர்.
எதிர்பாராத் தருணத்தில், திடீரென எழுந்த கோபாவேசத்தில் தலையில் ஒரு அடி அடிக்கப் போய், ரோஹித்தைக் கொலை செய்து விடுகிறாள் மீரா. மீராவிற்கு நிச்சயிக்கப்பட்ட CRPF அதிகாரியான அர்ஜுன், மீராவை எப்படிக் காப்பாற்றுகின்றான் என்பதே படத்தின் கதை.
அர்ஜுனின் நண்பன் விஷ்வாவாக வரும் பால சரவணன் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ஆனால், வீட்டில் பிணம் இருக்கும்போது, பாலசரவணனை வைத்து நகைச்சுவை புரிந்தே ஆகவேண்டுமென தருணத்தைக் கவனத்தில் கொள்ளத் தவறவிடுகின்றனர் நாயகனும் நாயகியும். ஆனால், முதற்பாதியில் ஒரு இரவுக்காட்சியில், நாயகனும் நாயகியும் பைக்கில் சென்று கோண்டிருக்கும் பொழுது, முன்னாள் காதலியின் கல்யாணத்திற்கு ஏன் சென்றேன் என மிகுந்த முதிர்ச்சியான மனோபாவத்தில் சிறப்பாக விளக்கும் வசனம் ஒன்று அசத்துகிறது.
ரோஹித்தாக ராஜ் ஐய்யப்பா நடித்துள்ளார். படத்தின், முதற்பாதியில் அவரை வில்லனாக அழுத்தமாகப் பதியவேண்டுமென வலுகட்டாயமாக இடம் பொருள் ஏவலைக் கருத்தில் கொள்ளாமல், நிச்சய தேதி குறிக்கப்பட்ட பெண்ணிடம், ‘நாம பாண்டி ட்ரிப் போகலாமா?’ என வசனம் பேசிஎரிச்சல் மூட்டுகிறார். அவரது வேலையோ, ஏமாத்துவதுதானே தவிர இரிடேட் செய்வது இல்லை.
பாசக்கார அம்மாவாகக் கோலேச்சி வரும் கீதா கைலாசம், பரிதவிப்புடனும் பதற்றத்துடனும் இருக்கும் தாயாக இப்படத்தில் வருகிறார். முதற்படமான தேஜாவுவில், சின்னஞ்சிறு கதாபாத்திரம் அளித்ததற்கு பிராயசித்தமாக, முழுப்படத்திலும் வருவது போல் மீரா எனும் பாத்திரத்தை ஸ்ம்ரிதி வெங்கட்டிற்குக் கொடுத்துள்ளார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமென உணர்ந்து, ஸ்ம்ரிதியும் நன்றாக நடித்துள்ளார். முதற்பாதியில் பாந்தமாகவும், இரண்டாம் பாதியில் பதற்றமாகவும் நடித்துள்ளார்.
‘முதலும் நீ முடிவும் நீ’ படத்தின் நாயகனான கிஷன் தாஸ், இப்படத்தில் அர்ஜுன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். சற்று பொறுமையாகப் பதற்றப்படாமல் யோசித்துச் செயற்படுவதற்கு ஏற்ற முகபாவத்துடன் கச்சிதமாகப் பாத்திரத்திற்குப் பொருந்துகிறார். நிலைமையை உள்வாங்கி, எப்படி நிதானமாகச் சிக்கலில் இருந்து தப்பிக்கிறார் என்ற திரைக்கதையின் போக்கை அவரது உடற்மொழியில் கொண்டு வந்துள்ளார். தர்புகா சிவா பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசையை அஷ்வின் ஹேமந்த் அளித்துள்ளார்.
கதாபாத்திர அறிமுகங்கள், பிரதான கதாபாத்திரங்கள் சந்திப்பு, காதல், வில்லனின் நோக்கம் என முதற்பாதி கதைக்குள் புகாமல் பயணிக்கிறது. கதை இடைவேளையில்தான் தொடங்குகிறது. அதனால் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகப் பயணித்து, ஒரு த்ரில்லர் படத்திற்கான நிறைவைத் தருகிறது. கிட்டத்தட்ட பொங்கலுக்கு வெளியாகியுள்ள வணங்கான் படத்தின் கதைதான் இதுவும். வில்லனை பாலாவின் நாயகன் கொடூரமாகக் கொல்ல, அரவிந்தன் ஸ்ரீனிவாசனின் நாயகனோ த்ரிஷ்யம் படத்து ஜோர்ஜ்குட்டி போல் தண்டிப்பதோடு சாதுரியமாகத் தப்பிக்கவும் செய்கிறார். மல்லூவுட்டிற்குக் கைவந்த கலையான இத்தகைய ஜானர், அவர்களுக்கு மட்டுமே உரியதல்ல தமிழிலும் அது சாத்தியம் என நிரூபித்துக் காட்டியுள்ளார் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.