

“வசந்தத்திண்டே கனல் வழிகளில்” என்று மலையாளத்தில், 2014 ஆம் ஆண்டு வந்த படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வீர வணக்கமாக வெளியிட்டுள்ளனர்.
நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட் – P.கிருஷ்ண பிள்ளை
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான P.கிருஷ்ண பிள்ளையின் (1906 – 1948) சரிதத்தை ஒட்டி, இப்படம் இயற்றப்பட்டுள்ளது. E.M.S.நம்பூதிரிபாட், A.K.கோபாலன் ஆகியோரும் P.கிருஷ்ண பிள்ளை தொடங்கும் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்குகின்றனர். இப்படம் நிகழும் காலகட்டம் 1940 முதல் 1946 வரையாகும்.
சிறையில் இருந்தவாறே, தங்கம்மாவைக் காதலித்து மணம் புரிகிறார் P.கிருஷ்ண பிள்ளை. சாதி ஒடுக்குமுறை உச்சத்தைத் தொடும் ஒரு கிராமத்திற்குச் சென்று, மக்களை ஒருங்கிணைத்து அவர்களது உரிமையை மீட்கப் போராடுவதுதான் படத்தின் கதை.
இக்கதையை மக்களுக்கு நினைவூட்டி, அனைத்து மக்களும் சமம்தான் என சுமார் எழுபதாண்டுகளுக்குப் பிறகு சொல்கிறார் பரத். நாடாளுமன்ற உறுப்பினரே செல்வந்தரான பரத்துக்காகக் காத்திருக்கிறார். ஊருக்கு அவ்வளவு நல்லது செய்பவரெனப் புகழப்படுகிறார். அவர் ஏழையானதொரு பாட்டியின் தோளில் கை போட்டுப் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றனர். அவரது மீசையும், கூலிங்கிளாஸ் அணிந்தவாறு மக்களின் குறையைக் கேட்கும் பாங்கும், குங்குமப் பொட்டு நெற்றியும், அவரை மக்கள் நலனில் அக்கறையுள்ள கம்யூனிஸ்ட்டாக ஏற்றுக் கொள்ள மனத்தடையை ஏற்படுத்துகிறது.
தமிழக – கேரள எல்லையில் படம் நிகழ்வதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ப.ஜீவானநந்தத்துடன், P.கிருஷ்ண பிள்ளை தொடர்பில் இருப்பதாக வசனம் வருகின்றது. இந்தியாவெங்கும் சுதந்திரப் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டும் நம்பூதிரி – நாயர் கூட்டணிக்கு எதிராக மக்களின் சமூகப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சாதியப் பாகுபாட்டைப் பார்த்து மனம் நொந்து, “பைத்தியக்கார ராஜ்யம் (Lunatic Asylum)” என 1892 இல் சொன்னார் சுவாமி விவேகானந்தர்.
ஆண்டான் – அடிமை பாகுபாடும், அதற்கு எதிரான மக்களின் போராட்டமும்தான் படத்தின் மையம் என்ற போதிலும், திரைக்கதையிலோ, காட்சிப்படுத்துதலிலோ போதிய அழுத்தம் இல்லாமல் உள்ளது. உழைப்புக்கேற்ற ஊதியம் தராமல் பண்ணையாட்களைக் கொடுமை செய்தததைக் காட்சியாக்கியதை விட, ஆண்டானான நம்பூதிரியும் அவரது வாரிசுகளும், தங்கள் பண்ணையத்தில் வேலை செய்யும் பெண்களை அனுபவிப்பார்கள் என்பதிலும், போலீஸ்காரர்களும் விசாரணை என்ற பெயரில் சீரழிப்பார்கள் என்பதிலும் தேவைக்கு அதிகமான கவனத்தைச் செலுத்தியுள்ளது திரைக்கதை. அழுத்தமான திரைமொழியைக் கைகொள்ளாமல், மிகச் சுமாரான ஆவணப்படம் போல் மேலோட்டமாகப் பயணிப்பதால் பார்வையாளர்களுக்கு எழவேண்டிய உணர்வெழுச்சி கம்மியாக உள்ளது.
திக்கித் திக்கிப் பேசும் E.M.S. எனும் சங்கரன் நம்பூதிரிபாட்டாக சுதீஷும், A.K.கோபாலானாக V.K.பைஜுவும் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் P.கிருஷ்ண பிள்ளையாகச் சமுத்திரக்கனி நடித்துள்ளனர். அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும் ஒரு பாத்திரம். தங்கம்மாவைக் கல்யாணம் செய்து அழைத்துச் செல்லும் முதல் நாள், ‘நீ என் மனைவி மட்டுமில்லை. என் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளப் போகும் சக தோழர்’ என்பார். அந்த வசனம் சொல்லப்பட்ட பின், தங்கம்மா மறைந்து விடுவார். வசனமும் காட்சியும் ஒத்திசைவாக இல்லாததற்கு இது ஒரு சிறிய உதாரணம். ஆண்டானுடன் இருந்து, மக்களுடன் இணையும் பீமன் ரகு ஏற்றிருக்கும் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.
இந்தப் படத்தில் ஓர் அழகான காதல் கதை உள்ளது. போராளி ரைரு நம்பியாராக நடித்த ரித்தேஷ்க்கும், பண்னையாளாக நடித்திருக்கும் சுரபிக்குமிடையே ஏற்படும் காதல்தான் அது. சுரபியின் வயது முதிர்ந்த பாத்திரத்தில், 95 வயதான சமூகப் போராளியும், சுதந்திர போராட்ட வீரரும், மக்கள் பாடகருமான P.K.மேதினி நடித்துள்ளார். பாடல்களுக்கு இசையமைத்த எழுவரில் ஒருவராகவும் பங்காற்றியுள்ளார். மீதமுள்ள அறுவர், V. தக்ஷனாமூர்த்தி, M.K.அர்ஜுனன், பெரும்பாவூர் G.ரவீந்திரநாத், A.R.ரெஹைனா, ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் ஆவர். படத்திற்குப் பின்னணி இசையை அஞ்சல் உதயகுமார் அளித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமையும், மக்கள் போராளியுமான P.கிருஷ்ணபிள்ளையை நினைவுகூரும் படத்தை இயக்கியுள்ள அனில் V.நாகேந்திரனுக்கு வாழ்த்துகள்.

