

விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷாலே தயாரிக்க உருவாகியுள்ள படம் ஆர்யனாகும். ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலில் நெறியாளராக இருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரைப் பேட்டி எடுக்கிறார். அப்போது அங்கு பார்வையாளராக வரும் செல்வராகவன், துப்பாக்கியை எடுத்து நீட்டி மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்புகிறார். அத்துடன் தான் ஒரு எழுத்தாளர் என்றும், தன்னுடைய படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றும் கூறுகிறார். தொடர்ந்து 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தன்னுடைய மாஸ்டர் பீஸை எழுதியிருக்கிறேன் எனச் சொல்வதோடு, தொடர்ந்து ஐந்து கொலைகளைச் செய்யப் போவதாகவும், முடிந்தால் போலீஸார் தடுத்து நிறுத்தட்டும் என்ற சவாலை விடுக்கிறார். போலீஸ் நினைத்தாலும் தன்னைப் பிடிக்க முடியாது என்றும் சொல்கிறார். யாரைக் கொலை செய்யப் போகிறேன் எனப் பெயரை அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் கொலை நிகழும் என்றும் சொல்கிறார். அந்தக் கொலைகளைப் பற்றி விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் விஷ்ணு விஷால் அந்தத் தொடர் கொலைகளைத் தடுத்து நிறுத்தினாரா, அந்தக் கொலைகளுக்குப் பின்னணி என்ன, செல்வராகவன் யார் என்பதை பரபரவென சொல்வதே மீதிக்கதை.
நாயகனாக விஷ்ணு விஷால், கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். துடிப்பான இளம் அதிகாரியாக மனதில் பதிகிறார். கதாபாத்திரத்தில் ஸ்மார்ட்டோ இல்லையோ தோற்றத்தில் ரொம்பவே ஸ்மார்ட். படம் முழுக்க அவரது ஸ்கிரீன் ப்ரசன்ஸ் படத்துக்குப் பலம் சேர்க்கிறது. செல்வராகவன் நடித்த படங்களிலேயே இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்த கதாபாத்திரம் அவரது நடிப்பு கேரியரில் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு கதாபாத்திரம். நடிப்பைத் தாண்டி வழக்கமான செல்வராகவனாகவே நம் கண்ணுக்குத் தெரிந்தாலும் பொருத்தமான கதாபாத்திரமாகவே இருக்கிறது.
ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு வழக்கமான நாயகி போல கதாபாத்திரமாக இல்லாமல் கொஞ்சம் தனித்துவமான ஆளுமை செலுத்த முடிகிற ஒரு கதாபாத்திரம். நன்றாகவே செய்திருக்கிறார். மானசா சௌத்ரி அழகாக இருக்கிறார். அதைத் தாண்டி அவரது கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை. மற்ற துணை நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ராட்சசன் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். வழக்கம் போல பின்னணி இசையில் மிரட்டி எடுக்கிறார். ஒளி மற்றும் ஒலிப்பதிவு படத்துக்குக் கூடுதல் கனம் சேர்த்துள்ளன. 2:15 மணி நேரம் படத்தைக் கொடுக்கப் படத்தொகுப்பாளர் எடுத்திருக்கும் முயற்சிக்குப் பாராட்டுகள்.
இயக்குநர் பிரவீன் வழக்கமான சீரியல் கில்லர் படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு கோணத்தில் கதையைச் சொல்ல எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறப்பு. அவர் USP-யாக எடுத்துக் கொண்ட விஷயமே படத்துக்கு பலவீனமாக அமைந்திருப்பது சோகம். எப்படியும் தொடர் கொலைகள் நிகழ்ந்து விடும் என்பது ரசிகர்களுக்கு முதல் 20 நிமிட காட்சிகளிலேயே தெரிந்து விடுவதால் த்ரில்லர் படங்களுக்கே உண்டான பதட்டமும், பரபரப்பும் கொஞ்சம் குறைவு தான். அந்தக் கொலைகளுக்கான காரணங்களும் கொஞ்சம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. படத்திற்குத் தேவையே இல்லாமல் ஒரு நாயகியைச் சேர்த்ததையும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் புதுமையான ஒரு முயற்சி என்பதற்காகப் பாராட்டலாம்.
– மாறன் செ

