

தமிழ் சினிமாவில் புதுவிதமான களங்களில், கான்செப்ட்களில் திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் கொரியன் திரைப்படங்களிலும், சீரீஸ்களிலும் பல பேன்டஸி கான்செப்ட்கள் இன்றும் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு ஃபேன்டஸி கான்செப்ட்டில் உருவாகி இருக்கும் படம் தான் “மெஸஞ்ஜர்” ஆகும். ரமேஷ் இளங்காமணி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, ஃபாத்திமா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் ஃபேண்டஸி கான்செப்டில் உருவாகியிருக்கும் ஒரு காதல் திரைப்படமாகும்.
காதல் தோல்வியில் இருக்கும் சக்திவேலன், அதில் இருந்து வெளிவர முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தற்கொலை செய்து கொள்ளாதீங்க என ஒரு மெசேஜ் வருகிறது. அனிதா என்ற பெண் அனுப்பியிருக்கும் அந்த மெசேஜை படித்து மேலும் அவரிடம் பேச, அனிதா இரண்டு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் இறந்ததையும், ‘இந்த மெஸன்சர் தான் என்னுடைய மீடியம், அதன் வழியாக தான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன், உங்கள் அருகில் தான் இருக்கிறேன்’ எனச் சொல்கிறார். அதிர்ச்சி அடையும் நாயகன் மேலும் விசாரிக்க, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. இறந்து போன அனிதா எப்படி மெசேஜ் அனுப்புகிறார்? உண்மையில் அவர் இறந்து விட்டாரா? அவர் பெயரில் வேறு யாரேனும் மெசேஜ் அனுப்புகிறார்களா? அவர் ஏன் சக்திவேலன் மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்பதே மீதிக்கதை.
ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக அவரது கதாபாத்திரத்தை விட்டு விலகாத ஒரு நடிப்பை தந்திருக்கிறார். காதல் தோல்வியில் இருக்கும் காட்சிகள், அனிதாவைப் பற்றி விசாரிக்கும் காட்சிகள் என வித்தியாசம் காட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் கூடுதல் உழைப்பைப் போட்டு நடித்திருக்கிறார். அனிதாவாக வரும் ஃபாத்திமா அப்படியே நம் மனதில் பதியும் கதாபாத்திரம். அவரின் அப்பாவித்தனம், வெள்ளந்தியான அன்பு, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
நாயகனை பிரேக் அப் செய்து விட்டுப் போகும் கதாபாத்திரத்தில் மனிஷாஸ்ரீ. கொஞ்சம் காமெடியிலும் சிரிக்க வைக்கிறார். நாயகியின் தோழியாக வரும் வைஷாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி, யூடியூபர் பிரஷாந்த் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த நடிகர்களும் ஓரளவு நல்ல நடிப்பையே தந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பால கணேசன் ஒளிப்பதிவு மிக எளிமையாக, கதைக்கேற்ப காட்சிகளை நமக்குத் தந்திருக்கிறது. காதல் படத்திற்கேற்ப கொஞ்சம் வண்ணமயமாகவும் இருக்கிறது. இசையமைப்பாளர் அபுபக்கர் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் படத்திற்கேற்ப தந்திருக்கிறார்.
இயக்குநர் ரமேஷ் இளங்காமணி. ஒரு காதல் கதையைக் கொஞ்சம் புதுமையாகக் கொடுக்க முயற்சி செய்து, அதில் பாஸ் மார்க் வாங்கியுள்ளார். மேக்கிங் சுமாராக இருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தைக் கொஞ்சம் தெளிவாகச் சொல்லிப் பார்க்கும் ரசிகர்களுக்குப் புரிய வைக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் முக்கியமான திருப்பம் எல்லாம் ரசிகர்களை ஏற்றுக் கொள்ள வைப்பது அசாதாரணம். ஆனாலும் அதை நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கிறார். படத்தின் இறுதிக் காட்சியில் வரும் விஷயம் ஒரு கவிதை போன்ற முடிவைப் படத்துக்குத் தந்து விட்டுச் செல்கிறது. சின்ன பட்ஜெட்டில் நல்ல ஒரு ஃபேண்டஸி படத்தைத் தந்து ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ் இளங்காமணி.
– மாறன் செ

