சமஸ்கிருதத்தில், காமி என்றால் ‘தேடல் உடையவர்’ எனப் பொருள்.
சிவனின் சாபத்தைப் பெற்றவராகக் கருதப்படும் அகோரி ஆசிரமத்திலுள்ள சங்கர், தேவதாசி துர்காவின் மகளாகப் பிறக்கும் உமா, இவ்திய – சீன எல்லையில் அநாதைகள் மீது நடக்கும் சட்டவிரோதமான மருத்துவ ஆராய்ச்சியில் சிக்கிக் கொள்ளும் CT-333 என அடையாளமிடப்பட்ட ஒருவன் என மூன்று பேரைப் பற்றிய கதை.
மனிதர்கள் யாராவது தொட்டால், உடலில் நீலம் பாவி மூர்ச்சையாகிவிடுவார் சங்கர். அத்தகைய சாபத்தைப் பெற்ற சங்கரை, அகோரிகளே தங்கள் கூட்டத்தில் இருந்து வெளியில் அனுப்புகின்றனர். தான் யார் என்பதையும் அறியவும், தன் சாபத்துக்கான விமோசனத்தைத் தேடியும், தன்னை அகோரி ஆசிரமத்தில் விட்ட கேதார் பாபாவைத் தேடி, ஹரித்வாரிலிருந்து பிராயக்ராஜில் (அலஹாபாத்) நடக்கும் கும்பமேளாவிற்குச் செல்கிறான் சங்கர். சிறுமி உமாவையும் தேவதாசியாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மூளையின் செயற்திறனை மாற்றும் லோபோடோமி (Lobotomy) எனும் அறுவைச் சிகிச்சையை, CT-333க்குச் செய்ய நாள் குறிக்கப்படுகிறது.
துரோணகிரி எனும் இமயமலையின் உயரமான சிகரங்களில் கிடைக்கும் மாலிபத்ரம் என்ற ஒளிரும் காளானை உண்டால், சங்கரின் சாபம் தீர்ந்துவிடும். ஆனால், அந்தக் காளான் 36 வருடங்களுக்கு ஒருமுறையே ஒளிரும். தேவதாசியாக தன் மகள் மாற்றப்படக்கூடாதெனப் போராடுகிறார் துர்கா. அடிக்கடி மின்சக்தியை உடலில் பாய்ச்சும் (Electrocute) மருத்துவ ஆய்வகத்தில் இருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டுமென CT-333 முடிவெடுக்கிறான். இந்த மூன்று கதையும் இணையும் புள்ளி தான் படத்தின் முடிவு. மூன்று கதாபாத்திரங்களின் தேடலும், அகம் – புறம் சார்ந்த விடுதலையே என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண உறவால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான பூஞ்சையியல் நிபுணரான (Mycologist) டாக்டர் ஜானவி, தன்னைப் போலவே பல காரணங்களால் காலத்துக்கும் மன அதிர்ச்சியில் (Trauma) சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவ, ஒளிரும் காளான உதவும் என நினைக்கிறார். சங்கருடன் இணைந்து அவரும் இமயமலைக்கு சாகசப்பயணம் மேற்கொள்கிறார். படத்தின் அமானுஷ்யத்தன்மையைத் தக்க வைக்க பனிச் சிகரங்களும், வாரணாசியும், பிராயக்ராஜும், ஆந்திரக் கிராமமும் என்ற மாறுபட்ட நிலப்பரப்புகள் உதவியுள்ளன. விஸ்வாந்த் ரெட்டி செலுமல்லாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை அதிகப்படுத்த உதவியுள்ளது. பனிச் சிகரங்கள் சம்பந்தப்பட்ட சாகசக் காட்சிகளில் கையாளப்பட்டுள்ள வி.எஃப்.எக்ஸ்.-உம் ரசிக்கும் வண்ணம் உள்ளது. அதற்காக இமயத்தில், சங்கரை வேட்டையாட் சிங்கம் துரத்துகிறது என்ற அதீத கற்பனையை ஏற்க மனம் மறுக்கிறது. சுவாரசியம் என்ற புள்ளியில் வேண்டுமானால் சலுகையுடன் அதைக் கடக்கலாம்.
தான் யார் என்ற தேடலிலுள்ள சங்கராக விஸ்வக் சென்னும், தான் மேற்கொண்ட முயற்சியில் மிகுந்த முனைப்புடன் இருக்கும் ஜானவியாக சாந்தினி செளத்ரியும், தன்னைப் போல் தனது மகள் சிக்கிக் கொள்ளக்கூடாது என பரிதவிக்கும் தாய் துர்காவாக நாடோடிகள் அபிநயாவும், அம்மாவை முதலில் வெறுத்து பின் புரிந்து கொண்டு அன்பைச் சொறியும் சிறுமி உமாவாக ஹரிகா பெட்டாவும், வலி வேதனையைத் தவிர வேறொன்றும் அறியா CT-333 ஆக மொகமத் சம்மத்தும் நடித்துள்ளனர். அனைவரது நடிப்புமே எங்கும் மிகாமல் படத்தோடு ஒன்ற உதவியுள்ளது.
Lobotomy, Haphephobia, Congenital Adrenal Hyperplasia என்ற பதங்களைக் கதையில் மையப்படுத்தி, இப்படத்தின் இயக்குநர் வித்யாதர் காகிதாவும், பிரத்யுஷ் வாத்யத்தும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். அதனை மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்து அசத்தியுள்ளார் படத்தொகுப்பாளர் ராகவேந்திர திருன். வழக்கமான சினிமாவில் இருந்து மாறுபட்ட காண் அனுபவத்தை அளிக்கும் படங்களைத் தேடிப் பார்க்கும் பொறுமைசாலிகளுக்கான தெலுங்கு திரைப்படமிது!