Shadow

எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்

லியோனாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே உமா சங்கர்க்குக் காதல் வந்து விடுகிறது. லியோனாவிற்கும் காதல் வந்துவிட, அவர்களுக்கு இடையேயான ரொமான்ஸும் ஊடலும்தான் படத்தின் கதை.

மீண்டுமொரு ஸ்டாக்கிங் (Stalking) படமாக இருக்குமோ என்ற எண்ணம் எழும்போது, உமாசங்கர் லியோவிடம் காதலைச் சொல்லி விடுகிறார். ‘எனக்கு இது செட்டாகாது’ என லியோ சொன்னதும், உமா சங்கர் நாயகியைத் தொந்தரவு செய்யவில்லை. மிகவும் ஆசுவாசமாக இருந்தது. நாயகியும் சட்டென காதலை உணரத் தொடங்கிவிடுவதால், அடுத்த படம் ‘ரொமான்ஸ்’-இற்குள் போகுமென நினைத்தால், கடைசி வரை அதுக்குள் போகவே இல்லை. க்யூட்டாக வைக்க வேண்டுமெனத் தலைப்பை மிஸ் லீடிங்காக வைத்துள்ளனர்.

புரிதலில் ஒரு சின்ன பிரச்சனை, தன்னிடம் பொய் சொல்லி விட்டான் என்ற நாயகியின் கோபம்தான் படத்தின் மைய ஓட்டம். 112 நிமிட கால அளவு கொண்ட படம். திருப்பமோ, சுவாரசியமோ இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் முதற்பாதி, கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. இரண்டாம் பாதியின் கலகலப்பு அக்குறையைப் போக்கி விடுகிறது. எழுதி இயக்கியுள்ளார் பாலாஜி கேசவன்.

பக்ஸ் எனும் பகவதி பெருமாளின் முதற்பாதி கெட்டப்பும், இரண்டாம் பாதியில் அவர் எடுக்கும் ரிஸ்க்கும் ரசிக்க வைக்கின்றன. நாயகனின் நண்பராக வரும் விஜய் வரதராஜ், நகைச்சுவைக்கு உதவ முயற்சி மட்டுமே செய்துள்ளார்.

லியோனாவாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். சட்டெனப் பார்த்ததும் ஈர்ப்பவராகவோ, மெல்ல மெல்ல கவருபவராகவோ, லியோனா கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை. நாயகனின் தாயாக ஊர்வசி, அவரது வழக்கமான கலகலப்பான நடிப்பால் ஈர்க்கிறார்.

நாயகனின் தொழில் படம் எடுப்பது. படத்தில் அசோக் செல்வன், உதவி இயக்குநராக வருகிறார். பிளாக்பஸ்டர் படத்தை இயக்கியவராகத் தன்னை நினைத்துக் கொள்ளும் வேடத்தில் இயக்குநராகவே பாலாஜி தரணிதரன் நடித்துள்ளார். அவர் எடுத்ததாகப் படத்துக்குள் வரும் படத்தில் ஒரு வசனம் வருகிறது. “சிங்கத்துக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் தான்டா. நான் தினமும் ஷேவ் பண்ணிப்பேன். சிங்கம் ஷேவ் பண்ணாது” என ஒரு ஹீரோ கத்துகிறார். அதைப் பார்க்கும் கேட்கும் பார்வையாளர்கள் கடுப்பாகிறார்கள் என நன்றாக நையாண்டி செய்துள்ளனர். எவ்வளவு முயன்றும் சமீபத்திய படமான கங்குவாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. எமக்குத் தொழில் ரொமான்ஸுடன் வெளியாகியுள்ள ஜாலியோ ஜிம்கானா படத்திற்கும் கணேஷ் சந்திரா தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களின் ஒளிப்பதிவுமே சிறப்பாய் வந்துள்ளது.

உமா ஷங்கராக அசோக் செல்வன். இப்படம், வெளியாகத் தாமதமாகிவிட்டதால், தற்போது இப்படம் வெளியாவதில் விருப்பம் காட்டவில்லை அசோக் செல்வன். காரணம், தனக்கான படங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துபவராக மாறிவிட்டார். ஆனால், அவரது கிராஃபிற்கு எந்தப் பாதிப்பையும் செய்யாதவண்ணம் படம் டீசன்ட்டாகவே உள்ளது.