

துப்பாக்கிக் கலாச்சாரத்தை தமிழ்நாட்டிற்குள் அறிமுகப்படுத்த நினைக்கிறது ஒரு வலுவான குழுமம் (syndicate). அதைத் தடுக்க நினைக்கிறார் NIA அதிகாரியான ப்ரேம். அவரது முயற்சியில், அவருக்குத் துருப்புச் சீட்டாகக் கிடைக்கிறார் ரகு ராம். குழுமத்தைச் சென்னைவாசியான (மதராஸி) ரகு தடுத்தானா இல்லையா என்பதே படத்தின் முடிவு.
தனது வெற்றி சூத்திரங்கள் அனைத்தையும் இப்படத்தின் திரைக்கதையில் பிரயோகித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். கஜினியில் நாயகன்க்குக் குறுகிய ‘கால நினைவாற்றல் இழப்பு (Short term memory loss)’ இருப்பது போல், மதராஸியில் நாயகனுக்குத் ‘திரிவரண்மை ஒழுங்கின்மை (Delusional disorder)’ இருக்கிறது. அவர் மனம் உருவகித்துக் கொள்ளும் மாய தோற்றங்கள், எத்தகைய சூழலில் எழும் என்பதற்கு ஓர் அழகான நினைவோடை (flash-back) காட்சியையும் வைத்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சி போல், சிவகார்த்திகேயன் வில்லன்க்கு அறைகூவல் விடுக்கிறார்.
தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரி ப்ரேமாக பிஜு மேனன் நடித்துள்ளார். அவரது கம்பீரம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது. பெரிய படங்களில் தொடர்ந்து, தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பாத்திரத்தில் முன்னணி மலையாள நடிகர்கள் நடித்து வருகின்றனர். ட்ரெண்டாகவே இது மாறிவிட்டது.
பல் மருத்துவ மாணவி மாலதியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். கஜினி கல்பனா போல் ஒரு வலுவான கதாபாத்திரம் இல்லையெனினும், இப்படத்தின் கதையையும் அறத்தையும் தீர்மானிக்கும் முக்கிய பாத்திரத்தில் கலக்கியுள்ளார் ருக்மிணி. “தன்னைப் போல் பிறரை நேசி’ என நாயகி நம்பும் அறம்தான் படத்தின் அடிநாதம். நாயகனுக்கு நாயகி இக்கருத்தைத்தான் மனதிற்குள் ஆழப் புகுத்துகிறார். நாயகனுக்கு அத்தகைய நற்குணம் மனநோயாக இருக்க, அதை அவனது இயல்பாக மாற்றும் மேஜிக்கைக் காதல் மூலமாகச் செய்கிறார்.
காதலில் தோல்வியுற்றவராக, தற்கொலைக்கு முயல்பவராக, பிறர்க்கு ஓடியோடி உதவுபவராக, மிருக உள்ளுணர்வு மிகுந்து மூர்க்கமாகச் சண்டையிடுபவராக சிவகார்த்திகேயன் மிக அருமையாக நடித்துள்ளார். அவரது அறிமுக பாடலில் அவரது துள்ளலான நடனம் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. நாயகனுக்கு இணையாக ஈர்க்கின்றனர் வில்லன்கள் சிராக் மற்றும் விராட்டாக நடித்துள்ள ஷபீர் கல்லரக்கல்லும், வித்யூத் ஜாம்வாலும். கெவின் குமாரின் சண்டைக் காட்சி இயக்கத்தில், துப்பாக்கிக் குண்டுகளுக்கு லாகவமாகத் தப்பிக்கும் வித்யூத் ஜாம்வாலின் சாகசம் ரசிக்க வைக்கிறது. என்.ஐ.ஏ.வின் டார்க் ஹவுஸில் இருந்து அவர் தப்பிக்கும் காட்சியும் அட்டகாசம். குறிப்பாக, அவர் உத்திரத்தில் இருப்பதாக வரும் ஷாட் மிக அற்புதம். படத்தின் ஃப்ளேவரை அதிகப்படுத்துவதில் வித்யூத் முக்கிய பங்காற்றியுள்ளார். சுதீப் ஏலமோனின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தைக் கச்சிதமாகத் திரையில் கொணர்ந்துள்ளது.
சினிமா ரசிகர்களை என்டர்டெயின் செய்யாமல் பெரிய படங்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்துவந்த நிலையில், மதராஸி ஸ்கோர் செய்துள்ளது.

