32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நீளிரா விமர்சனம் | Neelira review

Dinesh R சேலம் Published: 01/04/2026 2 நிமிட வாசிப்பு Updated: 09/04/2026 சினிமா
எழுத்து அளவு:

நீளிரா = நீள் + இரா. நீண்ட இரவு என்பதைத் தலைப்புக் குறைக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இலங்கையின் வடக்குப் பகுதியில், 1988 ஆம் ஆண்டு, திருமணம் செய்வதற்காக IPKF (இந்திய அமைதி காக்கும் படை) – இடமிருந்து அனுமதி வாங்குகின்றனர் ஓர் ஈழத் தமிழர் குடும்பத்தினர். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவன்று, இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலர் அவ்வீட்டிற்கு வருகின்றனர். அவர்களைப் போராளிகள் தாக்க முற்படுகின்றனர். இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு, அந்நீண்ட இரவில் அந்தக் குடும்பம் படும் பெரும்பாடுதான் தான் நீளிரா படத்தின் கதை.

‘யாரிடம் இருந்து எங்களைக் காப்பாற்ற வந்தீர்களோ, அவர்களுடன் இணைந்து கொண்டு எங்களை வதைக்கிறீர்கள்’, ‘எங்க ஒரு குடும்பத்துக்காவது அமைதியைக் கொடுங்களேன்’ என்ற சவுக்கைச் சுழற்றும் வசனங்கள் படத்தில் இருந்தாலும், சோமிதரன் அதை வலிந்து திணிக்காததாலோ என்னவோ, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் மியூட்டில் இருந்து தப்பியுள்ளன. தப்பாதவையும் கொஞ்சம் மெளனமாக்கப்பட்டுள்ளது.

அரசியல் சரி, தவறுகளுக்குள் போகாமல், போரினால் ஒரு கல்யாண வீடு எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்பதிலேயே பிரதான கவனம் செலுத்தியுள்ளார். ஆதலால் IPKF – இன் மனித உரிமை மீறல்களை விமர்சிக்காமல் தவிர்த்துள்ளார். படம் வெளியாவதற்குச் சோமிதரனின் இந்தப் புத்திசாலித்தனம் மட்டுமே காரணம்! அதைப் புத்திசாலித்தனம் என்று கடந்துவிட முடியாது, யதார்த்தமுமே அதுதான் என்பதைப் படம் பற்றிய உரைகளில் அழுத்தமாகச் சொல்லியுள்ளார். ‘இதுதான் எங்கள் சூழல். குண்டுமழைக்குள் வாழும் வாழ்க்கையில் எங்களுக்கான சிறு சிறு மகிழ்ச்சிகளைச் சேகரித்துக் கொள்ளாவிடில் மன அழுத்தமே எங்களைக் கொன்று போட்டிருக்கும்’ என்கிறார் சோமிதரன். அந்தக் கல்யாண வீட்டின் மகிழ்ச்சி உண்மையில் எத்தகையது என்பதை அவர் படத்தின் முடிவில் விவரிக்கும்போது ஒரு சொல்லொண்ணாப் பாரத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுகிறார்.

IPKF கேப்டனாக நவீன் சந்திரா நடித்துள்ளார். படம், IPKF இன் மனித உரிமை மீறல்களைப் பற்றியது இல்லை என்பதால், நவீன் சந்திரா பாத்திரத்தை மிக சாஃப்டானவராகப் படைத்து, அவர் மூலம் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வைத்துள்ளார் இயக்குநர் சோமிதரன். நடிப்பு எமகாதகியான ரூபா கொடுவாயூர் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

ஓர் அழகான காதலை, பெரும்பான்மையினரிடம் ஆட்சியை ஒப்படைத்த ஆங்கிலேயரின் வரலாற்றுப் பிழையை எல்லாம் போகிற போக்கில் வசனங்களாகக் கடந்தாலும், அவை அழுத்தமாகப் பாதிப்பை ஏற்படுமாறு கச்சிதமான இடங்களில் இடம்பெறச் செய்துள்ளார் சோமிதரன். அவருக்கான குறுகிய சுதந்திர எல்லைக்குள், ஓர் அழுத்தமான கலைப்படைப்பிற்கு மெனக்கெட்டுள்ளார். இதை அவருக்குச் சாத்தியமாக்கிக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோவிற்கும், ராணா டாகுபதியின் ஸ்பிரிட் மீடியாவிற்கு வாழ்த்துகளும் நன்றியும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.