32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஓ பட்டர்பிளை! விமர்சனம் || Oh Butterfly! review

Dinesh R சேலம் Published: 04/03/2026 3 நிமிட வாசிப்பு Updated: 05/03/2026 இது புதிது
எழுத்து அளவு:

பட்டாம்பூச்சியை உருவகமாகப் பயன்படுத்தி, மானுட வாழ்க்கையின் நிலையற்றத்தன்மையைக் குறித்தும், அதை சாஸ்வதமென நம்பி நடப்பவற்றிற்குப் பொறுப்பேற்கும் மனித மனங்களின் முரணைக் குறித்தும் படம் தத்துவார்த்தமாகச் சொல்கிறது. ‘பட்டாம்பூச்சிகளைப் போல் ஒருநாள் சிறகடித்துவிட்டு, என்றென்றைக்கும் அது நித்தியம் என நினைத்துக் கொள்ளும் நாம் (We are like butterflies who flutter for a day and think it is forever)’ எனும் கார்ல் சாகனின் (Carl Sagan) மேற்கோளுடன் படம் தொடங்குகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கல்லூரிக் காலத்தில் தனக்கும் சூர்யா குமரவேலுக்கும் இருந்த உறவைப் பற்றிக் கணவனிடம் எப்படியாவது சொல்ல நினைக்கிறார் கெளரி. கணவன் அர்ஜுனுக்கோ, கல்யாணத்திற்கு மறுதினமே வேலை பறிப் போன மன அழுத்தத்தில் இருக்கிறார். கணவனிடம் தனிமையான சூழலில் உண்மையைச் சொல்லிவிட நினைத்து, கொடைக்கானல் போகும் வழியிலுள்ள குறிஞ்சிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே எதிர்பாராதவிதமாக சூர்யா குமரவேல் வந்து சேர, மூவருக்கு இடையேயான தீவிரமான கணங்கள்தான் படம்.

ஒரு வீடு, மூன்று பிரதான கதாபாத்திரங்கள் என மினிமலிஸ்டிக்கான செட்டப்பில் இன்டென்ஸான படமாக வந்துள்ளது. அதற்குக் காரணம் இயக்குநர் விஜய் ரகுநாதனின் எழுத்தும், நடிகர்களின் அட்டகாசமான நடிப்புமே காரணம். பட்டாம்பூச்சி வளர்க்கும் சகாயமாக வரும் நாசர், மரணம் பற்றியும், வாழ்க்கை பற்றியும் பட்டாம்பூச்சியைக் கொண்டு எடுத்தியம்புவது ரசிக்க வைக்கிறது. ‘மரம்ன்னு பார்த்தா மரம், சிலுவைன்னு பார்த்தா சிலுவை’ என மனிதர்களின் நம்பிக்கையைப் பற்றிச் சொல்வதாகட்டும், முதன்முறை பட்டாம்பூச்சி தன் இறக்கைகளை விரிக்கும்போது, ‘வாழும் வரை மகிழ்ச்சியாக இருப்போம்’ என அர்ஜுனுக்கு நம்பிக்கையை விதைப்பதாகட்டும், நாசர் தன் பாத்திரத்தை மிக அனுபவித்து நடித்துள்ளார்.

கெளரியின் அக்கா ரஞ்சனியாக லட்சுமி பிரியா சந்திரமௌலி நடித்துள்ளார். பத்தொன்பது வயதிலேயே துறவியாகி விடும் ரஞ்சனி, தன் தங்கை கெளரிக்கு உற்ற துணையாக இருந்து, அவரை மனப்போராட்டத்தில் இருந்து மீட்கிறார். ‘பிரபஞ்சத்தின் முன் மானுட இருப்பென்பது மிகவும் குறுகியது. அதை நீட்டிக்கவோ, தடுத்து நிறுத்தவோ, அழிக்கவோ மனிதனால் ஆகாது. ஆனால் அப்படி மனிதனால் ஆகுமென நினைத்துக் கொள்ள அவனது ஆணவமே காரணம்’ என கெளரிக்குப் புரிய வைத்துக் குற்றவுணர்வில் இருந்து மீட்கிறார்.

அர்ஜுனாக அதுலும், சூர்யா குமரவேலாக சிபி சந்திரனும் கலக்கியுள்ளனர். ஆனால் இந்தப் படத்தின் ஆணிவேர் என்றால் அது கெளரியாக நடித்திருக்கும் நிவேதிதா சதீஷ்தான். கெளரியின் மனவுணர்வுகளை, நிவேதிதா சதீஷின் உடலும் உடற்மொழியும் கண்ணாடி போல் பிரதிபலித்துள்ளன. கணவனிடம் உண்மையை மறைக்கும் பதற்றம், எப்படி உண்மையைப் போட்டுடைப்பது என்ற தடுமாற்றம், முன்னாள் காதலனைப் பார்த்ததும் ஏற்படும் எரிச்சல் மற்றும் தவிப்பு, ஏமாற்றப்பட்டோம் என்ற கோபம், கணவனின் நிலைக்குத் தன்னை நொந்து கொள்ளும் குற்றவுணர்வு என கெளரியின் மனவார்ப்பை உள்ளபடிக்குப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுகிறார். பல விருதுகளை வாங்கக் கூடிய அளவிற்கு மிக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஓர் ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன் (Conviction) திரைக்கதையை அணுகியுள்ளார் விஜய் ரகுநாதன். மூன்று கதாபாத்திரங்களை வைத்துக் கண்ணாமூச்சி ஆடியிருப்பதோடு, மிகக் கவனமாகவும் நுணுக்கமாகவும் அனைத்து விஷயங்களுக்கும் ஒரு முடிவைக் (Closure) கொடுத்துள்ளார். சிலந்தி வலையில் சிக்கிக் கொள்ளும் ஜெபமணிக்கு எப்படி விடுதலை கிடைத்தது என்ற விஜய் ரகுநாதனின் சித்தரிப்பைச் சான்றாகச் சொல்லலாம். திரைக்கதையில் உதவியுள்ள ஹரீஷ் ராஜகோபாலுக்கும் பாராட்டுகள்.

வேதராமன் சங்கரனின் ஒளிப்பதிவு, வைசாக் சோம்நாத்தின் இசை, புவனேஷ் மணிவண்ணனின் படத்தொகுப்பு, சரண்யா ரவிச்சந்திரனின் கலை இயக்கம், டீனா ரோசாரியோவின் ஆடை வடிவைப்பு என மொத்த தொழில்நுட்பக் குழுவின் நேர்த்தியான பங்களிப்பு படத்திற்குப் பெரும் பலமாய் அமைந்துள்ளது. யாருமற்ற கடற்கரையில் கெளரியின் தவிப்பில் தொடங்கும் படம், மக்கள் நடமாட்டமுள்ள கடற்கரையில் நிற்கும் கெளரியின் மகிழ்ச்சியில் முடிகிறது. இந்த ஆதியும் அந்தமுமான காட்சிகளுக்கிடையே, கெளரியின் அகம் சார்ந்து நடப்பவற்றை ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் போல் கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குநர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.