
ராமாயணத்தில், தசரதனின் ஆக்ஞையை ஏற்று வனவாசம் சென்றார் ராகவன். இப்படத்தில், ராகவனுக்காக அசாத்தியமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறார் தசரதன்.
தசரத ராமன் எனும் நேர்மையான அரசு அதிகாரிக்கு, ராகவன் எனும் சூதாடி மகன். மகனை உயிருக்கு உயிராக நேசிக்கும் தந்தைக்கும், அப்பாவை உள்ளூற மிகவும் வெறுக்கும் மகனுக்கும் இடையேயான சிக்கலான உறவை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டுள்ளது ராமம் ராகவம் படம். இப்படத்தின் கதை, ‘விமானம்’ படத்தின் இயக்குநர் சிவபிரசாத் யானாலா-வுடையதாகும்.
தனராஜ் கொரனானியின் முதற்படம் எனச் சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகப் படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி – பிரமோதினியின் ஜோடியின் மகனாக அவர் ஒட்டாமல் அந்நியமாக அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் இல்லாமல் தனித்துத் தெரிகிறார். எனினும் சூதில் பெருவிருப்பம் கொண்ட ஊதாரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். பார்வையாளர்களின் கோபத்திற்கு உள்ளாகும்படி அழகாக நடித்துள்ளார்.
பாண்டிச்சேரி தேவாவாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். துணை நாயகன் எனச் சொல்லுமளவு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சண்டை இயக்குநர் நட்ராஜ், ஹரிஷ் உத்தமனுக்கு பில்டப்பான ஒரு சண்டைக்காட்சியும் அழகாக அமைத்துள்ளார். தேவையும் ஆசையும் ஒரு மனிதனின் மனதை எப்படிக் கலைக்கும் என்பதை தேவா பாத்திரத்தின் மூலம் அழகாகச் சொல்லியுள்ளார் இயக்குநர்.
சமுத்திரக்கனியின் மனைவியாக பிரமோதினி நடித்துள்ளார். மகனையும் விட்டுக் கொடுக்க முடியாமல், கணவனின் நியாயத்தையும் புரிந்தவராக, இருவருக்கும் இடையில் சமாளிக்கும் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ராகவனால் காதலிக்கப்படும் பெண்ணாக மோக்ஷாவிற்கு மிகச் சின்னஞ்சிறு பாத்திரமே வாய்த்துள்ளது.
டோலிவுட் நகைச்சுவை நடிகரான சத்யா, ஆங்காங்கே ‘எத்திக்ஸ்’ பேசிப் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ராகவனைச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் காட்சியில், பாலிரெட்டி ப்ருத்விராஜும் கலகலப்பிற்கு உதவியுள்ளார். அருண்சிலுவேருவின் இசை படத்தின் கனத்தை அதிகரிக்க உதவியுள்ளது. ‘குலசாமி போல’ என்ற யுகபாரதியின் பாடலும், முருகன் மந்திரத்தின் வரிகளில் வரும் க்ளைமேக்ஸ் பாடலும் படத்திற்கு வலுவூட்டியுள்ளன. துர்கா கொல்லிபிரசாதின் ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதற்குத் துணை புரிந்துள்ளது.
மகன் விரும்பும் எதையும் வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என நினைப்பதும், மகனின் தவறுகளை எண்ணி உள்ளம் குமுறுவதும் தந்தையின் குணம். அத்தகையதொரு தந்தையாக மனதைக் கவருகிறார் சமுத்திரக்கனி. ஒரு தந்தையாக இருத்தல் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது சமுத்திரக்கனியின் கதாபாத்திரம். ‘விதை நல்ல விதை; நிலமும் நல்ல நிலம். ஆனால் எங்கே தவறு நடந்தது? நான் சரியா வளர்க்கலையா?’ என்ற விடை தெரியாத கேள்வி சமுத்திரக்கனியை மிகவும் வாட்டுகிறது. க்ளைமேக்ஸ் காட்சிகளில் மனதைக் கனக்க வைத்துவிடுகின்றனர் ராமனும் ராகவனும்.