Shadow

ரெஜினா விமர்சனம்

ஒரு வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில், ரெஜினாவின் கணவரும் வங்கி ஊழியருமான ஜோ கொடூரமாகக் கொல்லப்படுகிறார். ஒரே நாளில் தன் வாழ்வை ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கின கொள்ளையர்களைத் தேடிச் சென்று எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் ரெஜினா படத்தின் கதை.

ரெஜினாவாக சுனைனா நடித்துள்ளார். மீனுக்காக ஒற்றைக் காலில் காத்திருக்கும் கொக்கு போல் பழி வாங்குவதற்கான தருணத்தை எதிர்நோக்கிப் பொறுமையாகக் காத்துள்ளார் சுனைனா. ரிது மந்தாராவைக் கடத்தி, நிவாஸ் ஆதித்தனை மிரட்டி தன் பழிவாங்கும் பயணத்தை நகர்த்துகிறார் சுனைனா. நண்பர்கள் உதவி செய்கின்றனர் எனக் காட்டப்பட்டாலும், சுனைனா தன் இரையை மிகச் சுலபமாக நெருங்குவது திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது.

பவா செல்லத்துரை, டெர்மினேட்டர் அர்னால்டை நினைவுறுத்துவது போல் ஆடாமல் அசையாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வசனம் பேசுபவராக உள்ளார். ‘ஐயோ, பாவம்’ என அவர் இரக்கப்பட்டாலும் ஒரே முகபாவனை ஒரே தொனி, ‘தைரியத்தை மட்டும் விட்டுடாதம்மா’ எனச் சொன்னாலும் ஒரே முகபாவனை ஒரே தொனி. படத்தைத் தயாரித்ததோடு இசையமைத்தும் உள்ளார் சதீஷ் நாயர்.

ரெஜினாவின் கணவர் ஜோவாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். தனக்கும், தன் கணவருக்கும் இடையேயான அந்நியோன்யத்தை ரெஜினா நினைவுகூரும் பொழுதெல்லாம், கட்டிலறை அந்தரங்கக் காட்சிகளையே மனதில் ஓட்டிப் பார்க்கிறார். காதல், இழப்பு, அதனால் ஏற்படும் அகம் சார்ந்த வேதனை என்பதைக் காட்சிப்படுத்த இயக்குநர் டொமின் டி சில்வா, இன்னும் சிறப்பான காட்சிகளை யோசித்திருக்கலாம். பொறுப்பில்லாத கணவனுடனான வாழ்க்கையை எண்ணி ரிது மந்தாரா வருந்தும் போது, ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என சுனைனா முன்னெடுக்கும் செய்கைகள் படத்தின் விறுவிறுப்பை நீர்த்துப் போகச் செய்கிறது. அதனால் ரெஜினா மீது பரிதாபம் வரவில்லை, வில்லன்கள் மீதும் கோபம் வரவில்லை.

கணவனை இழந்த சோகமும், வலியும், வேதனையும் கலந்த நிர்கதி நிலையை அழகாக நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சுனைனா. ஆனால், ரத்தமும் சதையுமாகப் பழி வாங்க வேண்டிய ரெளத்திரத்தை எவ்வளவு முயன்றும் சுனைனாவால் தன் முகத்தில் கொண்டு வர முடியவில்லை. சுனைனா, ஆனந்த் நாக், கொச்சி, இடுக்கி என பவி K. பவனின் ஒளிப்பதிவில் விழும் அனைத்தும், அனைவரும் அழகாகத் திரையில் பளிச்சிடுகின்றன(ர்).