Shadow

மாமன்னன் விமர்சனம்

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் அருபெரும் முயற்சியால், பட்டியலினச் சமூகம் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகார அமைப்புக்குள் வர வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சரத்தாகவே நிறைவேற்றிய சமாச்சாரம் தான் “தனித் தொகுதி” திட்டம். இது கிட்டத்தட்ட 1932 ஆம் ஆண்டு காலம் தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். இதற்கு முதன்முதலாக 1891ஆம் ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பியவர்கள் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தான். ஆரம்பக் காலகட்டங்களில் பட்டியலினச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் பட்டியலினப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாமிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இரட்டை வாக்குரிமை கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு பட்டியலினத் தலைவரும், ஒரு பொதுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். ஆனால் அண்ணல் காந்தியடிகள் பட்டியலினத் தலைவரைப் பட்டியலின மக்களே கூடித் தேர்ந்தெடுக்க்கும் இந்த முறையைப் பெரிதும் எதிர்த்தார். பட்டியலினச்/ பழங்குடியினச் சமூக மக்கள் மட்டுமே அந்தத் தொகுதியை ஆளவேண்டும். அப்பொழுது தான் நாம் எதிர்பார்த்த சமூக மாற்றம் நிகழும் என்று போராடிச் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அதன் பின் காந்தியடிகளுக்கும் அம்பேத்கருக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து சமரச முடிவு எட்டப்பட்டு பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து இரட்டை வாக்குரிமை ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பட்டியலினச்/ பழங்குடியினச் சமூகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 71இல் இருந்து 148-ஆக இருமடங்கு அதிகரிக்கப்பட்டது. சுதந்திர இந்தியா உதயமான பின்பு கூட மக்களவையில் இரட்டைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் முறை இருந்து வந்தது. அது 1961இல் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் முழுவதுமாக ஒழிக்கப்பட்ட பின்னர்தான் தற்போது இருக்கிற தனித் தொகுதி திட்டம் இந்தியா முழுக்க நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி தற்போது தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தொகுதியில் மொத்தம் 46 இடங்கள் தனித் தொகுதிக்கும், மக்களவைத் தொகுதியில் 7 இடங்கள் தனித் தொகுதிக்கும் பிரிக்கப்பட்டு உள்ளன. இது வரலாறு. இனி கதைக்கு வருவோம்.

இப்படி சாதிய வன்மத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் முழு வெற்றியைப் பெற்றிருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு மாமன்னன் திரைப்படம் மிகச் சிறந்த சான்று. எப்படி என்றால் தனித் தொகுதியில் பட்டியலினச் சமூக மக்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, அந்தத் தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் மக்கள் அந்தத் தலைவருக்கான குறைந்தபட்ச மரியாதையைக் கூடக் கொடுப்பதில்லை. அது போல் அவர் தலைவராக இருந்தாலும் மற்ற பதவிகளில் இருக்கும் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரின் எந்தவொரு திட்டத்திற்கும் ஒத்துழைப்புக் கொடுக்காமல் முட்டுக்கட்டை போடுவதுடன் பெரும் மன உளைச்சலையும் அத்தலைவருக்கு ஏற்படுத்துகின்றனர். அல்லது ஆரம்பக் காலகட்டங்களில் இருந்தே அம்மக்களைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, அவர்களைத் தலைவராகவும் ஆக்கி, அவர்களைச் சுயமாக இயங்கவிடாமல் தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொண்டு தாங்கள் நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொள்ளும் நடைமுறையும் தான் தற்கால அரசியல். இதனைத் தான் மாமன்னன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

பள்ளிப்பாடப் புத்தகத்தில் எழுத்தாளர் சி. தெய்வசிகாமணி எழுதிய ‘பெயரில் என்ன இருக்கிறது’ என்ற சிறுகதை ஒன்று இடம்பெற்றிருந்தது. பெயரில் என்ன இருக்கிறது என்று நினைப்பவர்கள், அரசியலையும் சமூகத்தையும் ஊன்றிக் கவனித்தால் பெயரில்தான் எல்லாமே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் ரஞ்சித்தின் திரைப்படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வரும் பொதுமக்களுக்கும், பெயரின் பின்னால் இருக்கும் அரசியலைத் தற்போது ஓரளவிற்கேனும் புரிந்திருக்கும். உதாரணத்திற்கு கர்ணன் திரைப்படத்தில் ஹீரோ தனுஷ் கர்ணனாகவும், அவன் ஊர் மக்கள் துரியோதனக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களை வேட்டையாட வரும் நட்டி கதாபாத்திரம் கண்ணபிரான் ஆகவும் இருப்பதை நினைவில் கொள்க. ஏனெனில், இப்படத்திற்கும் இந்தப் பெயர் அரசியலுக்கும் கூடத் தொடர்பு இருக்கிறது.

தனித்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கும் மாமன்னன் வடிவேலுவை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஃபகத் ஃபாசிலும் அவர் அப்பா அழகம் பெருமாளும் ‘மண்ணு மண்ணு’ என்று அழைத்தபடியே அவரை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு நினைத்ததை சாதிக்கிறார்கள். அப்பா அழகம் பெருமாள் செய்த அதிகார அரசியலைப் பார்த்து வளர்ந்த இளைய தலைமுறையான மகன் ஃபகத் ஃபாசிலும், அதே அதிகார அரசியலைத் தொடர விரும்ப, எதிர்முனையின் இளைய தலைமுறையான மாமன்னனின் மகன் அதிவீரன் அந்த அதிகார அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ‘மண்ணு, மண்ணு’ என்று அழைக்கப்படும் தன் அப்பாவை உண்மையாகவே மாமன்னனாக மாற்றிக் காட்டுகிறார். இது தான் படத்தின் கதை.

அப்பா எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் பன்றி வளர்ப்பதை இன்றளவும் விட்டுவிடாத மகன் அதிவீரனின் அறிமுகமும், வேட்டை நாய்களைப் பந்தயத்திற்கு விட்டு அது தோற்க நேர்ந்ததும் அதை அடித்தே கொல்லும் ஃபகத் ஃபாசிலின் அறிமுகமும், மனு கொடுக்க தன்னைத் தேடி வரும் பொதுமக்களை வற்புறுத்தி உட்காரச் சொல்லி, ‘யார் முன்னாடியும் நின்னு பழகிரக்கூடாது, ஒக்காந்து பேசிப் பழகணும்’ என்று சொல்லும் வடிவேலுவின் அறிமுகமுமே இந்த மூன்று கதாபாத்திரங்களின் குணாதிசயத்தைச் சொல்லி விடுகிறது.

ஒரு பிரச்சனைக்குச் சமரசம் பேசப் போன இடத்தில் பொதுமக்களைத் தன் முன் உக்கார வைத்துப் பேசும் தன் அப்பா, அதிகார வர்க்கத்தின் முன் நின்று கொண்டு பேசுவதைப் பார்த்து மனம் வெதும்பிப் போய் அவரை வலுக்கட்டாயமாக உட்கார வைக்கும் அந்த நிமிடத்தில் இருந்து, இரு தரப்பும் முட்டிக் கொள்ள அதைத் தொடர்ந்து நடக்கும் பின் விளைவுகளும் அதன் முடிவும் தான் மாமன்னனின் மீதிக் கதை.

படத்தில் நடக்கும் எல்லாத் தவறுகளுக்கும் மாமன்னன் பொறுப்பேற்கும் ஒரு காட்சி வரும். அதில் அவர், ‘எல்லாத் தப்புக்கும் நான் தான் காரணம், எனக்குக் கெடைச்ச அதிகாரத்தை என்னோட உரிமைன்னு நெனைக்காம, அவனுக போட்ட பிச்சைன்னு நெனைச்சேன் பாத்தியா, அது என்னோட தப்புதான்’ என்று பேசுவார். படத்தின் அடிநாதமும், படத்தின் வாயிலாக மாரி செல்வராஜ் சொல்ல வரும் கருத்தும் இதே தான். ‘உங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை உங்கள் உரிமையாக எண்ணி, அதன் மூலமாக என்ன நல்லது செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். இதனால் சில பின் விளைவுகள் நிகழத் தான் செய்யும். ஆனால் இதெல்லாம் நடக்காமல் எந்தவொரு மாற்றங்களும் இங்கு நிகழாது’ என்ற கூற்றைச் சொல்ல விளைகிறார்.

நடிப்பாகப் பார்க்கும் போது வடிவேலுவும், ஃபகத் ஃபாசிலும் நானா நீயா என்று முட்டி மோதுகிறார்கள். தன் தந்தைக் கட்டிக் காத்துத் தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற அந்த அதிகாரத்தைத் தன் மகனிடம் அதே போல் தானும் கொடுக்க வேண்டும் என்று துடிக்கும் அந்த அதிகாரத் திமிர் ஒரு புறம், அடிபட்ட தன் மகனுக்காகவும் பேச முடியாமல், இறந்து போன குழந்தைகளுக்காகவும் பேச முடியாமல், தன் கட்சிக்காகவும் பேச முடியாமல், ‘கூழைக் கும்பிடு போட்டே பழகிய நான் தலைநிமிர்வதற்கான தருணம் இதுதானா?’ என்ற கேள்வியோடும் குழப்பத்தோடும் பதைபதைப்போடும் அல்லாடும் வடிவேலு மறுபுறம் என இருவரும் தங்கள் மேலான நடிப்பின் மூலம் விருந்து படைக்கிறார்கள்.

உதயநிதியும் தன் பங்குக்குச் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘ஒருத்தன் நம்மள அடிச்சிட்டானேன்னு நெனைச்சிக் கடைசி வரைக்கும் பயந்துக்கிட்டே இருக்கக்கூடாது. அது கோழைத்தனம். ஒருத்தனை நாம அடிச்சிட்டோமேன்னு நெனைச்சி காலம் பூரா அவனை அடிச்சிக்கிட்டே இருக்கக்கூடாது. அது அயோக்கியத்தனம்’ என்று மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதில் தொடங்கி, தன் அப்பாவை வலுக்கட்டாயமாக சாதி அதிகாரத்தின் முன் அமரச் செய்யும் இடம் என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தன் நடிப்பில் ஒரு முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். தன்னோட பிம்பம், ஓட்டு வங்கி அரசியல் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இம்மாதிரியான கதையின் பின்புலத்தில் நடித்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது. அதிகாரப் புன்புலம் இல்லாவிடினும் மிகுந்த சிரமங்களுக்கிடையே இத்தகைய படங்கள் உருவாகலாம், ஆனால் இத்தகைய வீரியத்தோடு வெளியாகிக் கவனிக்கப்பட உதயநிதி ஸ்டாலினே முழுமுதற் காரணம்.

நடிகர் லால் முதலைமைச்சராக வந்து தன் கட்சியின் மூலம் சமூக நீதியை நிலைநாட்டப் போராடுகிறார். ஃபகத் ஃபாசிலுடனான உரையாடலில் நான் உன்னை விட சீனியர் என்று நிறுவுகிறார். ஏழை மாணவ மாணவியருக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கும் பெண்ணாக உதயநிதியின் கல்லூரி காலத் தோழியாக வரும் லீலா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ். இது போன்ற அறிமுகத்திற்குப் பின்னர் வழக்கமான காதலியாக மாறிக் காணாமல் போகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் காட்சிகளுக்கு ஏற்ப நெஞ்சைக் கனக்கச் செய்யும் ஓர் அற்புதமான பின்னணி இசையை இப்படத்திற்குக் கொடுத்திருக்கிறார். பன்றி மேய்க்கும் சிறுவர்கள் ஊர்க்கோயில் குளத்தில் குளிக்கும் போது, அவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநியாயத்தின் போது அவர் இழைத்திருக்கும் அந்தப் பின்னணி இசை ஒரு துன்பவியல் அனுபவத்தை நமக்குள் பரவச் செய்கிறது. பாடல்களில் ‘ராசாக்கண்ணு’ பாடல் மனதை ஏதோ செய்கிறது. தேனி ஈஸ்வரின் கேமரா அழகோடு சாதியத்தின் அழுக்குப் பக்கங்களையும் சாதிய வன்மத்தின் அடர்த்தியையும் பதிவு செய்து இருக்கிறது.

பொதுவாக மாரி செல்வராஜின் திரைப்படம் என்றால் காட்சிக்குக் காட்சி மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும். ஆனால் அது போன்ற காட்சிகள் இப்படத்தில் மிகவும் குறைவு தான். படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு 20 நிமிடம் வரைக்கும் கதாபாத்திர வடிவமைப்பிற்கான காட்சிகளாகவும், காதல் காட்சிகளாகவுமே படம் நகர்கிறது. மாரியின் முத்திரை முப்பதாவது நிமிடத்தில் பன்றி மேய்க்கும் சிறுவர்கள் குளத்தில் குளிக்கும் போது தான் வெளிப்படுகிறது. அதற்குப் பின்னர் மீண்டும் மாமன்னனை அதிவீரன் அமரச் சொல்லும் அந்த நாற்காலி அரசியலின் போதும், அந்த நிகழ்விற்குப் பின்னர் அடிமை மண்ணுவாகவே தன்னை எண்ணிக் கொள்ளும் மாமன்னன், உண்மையாகவே தான் மாமன்னன் என்று உணர்ந்து கொண்டு தன் சுபாவத்தை மாற்றும் அந்தத் தருணம் ‘அட!’ சொல்ல வைக்கிறது. இதற்குப் பின்னர் பன்றிகளை வேட்டைநாய்கள் வேட்டையாடும் காட்சி தவிர்த்து முற்றிலுமாக மாரி செல்வராஜ் என்னும் காத்திரமான இயக்குநர் படத்தில் காணாமல் போகிறார்.

அதற்குப் பின்னர் வரும் காட்சிகள் எல்லாம் எந்த சுவாரசியத்தையோ, கேள்விகளையோ, குற்றவுணர்வையோ ஏற்படுத்தாமல் வெகுஜன இயக்குநரின் படம் போல் நகர்கிறது. மேலும் இரண்டாம் பாதியில் அது வெறும் நாயகன் வில்லனுக்கு இடையேயான சண்டையாக மாறி நிற்கிறது. மேலும் அந்த அரசியல் தொடர்பான காட்சிகளிலும் வடிவேலு வாக்கு கேட்டு மக்களிடம் கேமரா வாயிலாகப் பேசும் காட்சியும் வெகு சாதாரணமாக இருக்கிறது.

அது போல் மாரி செல்வராஜின் முந்தைய படங்களில் இருக்கும் சில காட்சி பிம்பங்கள் இதில் பின் தொடர்வது போல் தெரிகின்றன. வளர்ப்புப் பிராணியின் கொலை, பாதிக்கப்பட்ட சிறுவனைச் சுற்றி ரவுண்ட் டிராலியில் கேமரா ஃபாலோ செய்வது, வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் நாய்கள் என அவருக்கே உரித்தான காட்சிகள் முந்தையப் படங்களில் ஏற்படுத்தாத அயர்ச்சியை இப்படம் ஏற்படுத்துவதால் ஒரு முழுமையான கலைப்படைப்பாக மாறாமல் சற்று ஏமாற்றம் தருகிறது.

இப்படி படம் தொடர்பாக சில குறைகள் இருந்தாலும் படம் பேச வரும் அரசியல், தற்கால அரசியலில் விவாதித்து முடிவு எட்டப்பட வேண்டிய முக்கியமான களம் என்பதாலும், அதை வேறு இயக்குநர்களோ, வேறு திரைப்படங்களோ பேசியதே இல்லை என்பதாலும் ‘மாமன்னன்” திரைப்படம் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் படமாக மாறி நிற்கிறது.

நாமும், வளரும் தலைமுறையும் இந்த அதிகார அரசியலில் இருக்கும் சமத்துவமின்மையைப் புரிந்து கொண்டு, அதைக் கலைவதற்கான அடுத்தகட்ட அரசியலைக் கையில் எடுக்க வேண்டும் என்பதால், இந்த மாமன்னனுக்கு அரியாசனம் கொடுத்து அமர வைக்க வேண்டியது சர்வ நிச்சயம்.

– இன்பராஜா ராஜலிங்கம்