
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பொழுது, இந்த நாடும் நாட்டு மக்களும் என்னாவார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றுள்ளது படம்.
‘சொதப்பினா ஒத்துக்கணும்’ என்ற கடைசி விதிக்கு உட்பட்டு, கடத்தல்காரர்களின் தலைவன் குருநாத் சிறைக்குச் செல்கிறார். அவர் சிறையில் இருந்து வந்ததும், அவருக்கு மட்டுமே தெரியக்கூடிய அம்முவின் மரணத்திற்குக் காரணம் நிதி அமைச்சர் அருமை பிரகாசம் என குருநாத்திற்குத் தெரிய வருகிறது. அருமை பிரகாசத்தைப் பழிவாங்க நினைக்க, அது குருநாத் குழுவை எங்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.
சூது கவ்வும் முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் மிக அழகாக இணைத்துள்ளனர். வாகை சந்திரசேகரைக் கொண்டு அமைக்கப்பட்ட பின் கதை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியையும், பாபி சிம்ஹ்சவையும் கதைக்குள் கொண்டு வந்த விதமும் ரசிக்க வைக்கிறது.
இப்பாகத்தில், இரண்டு நல்ல ‘சைக்கோ’ காவல்துறை அதிகாரிகள் வருகின்றனர். முதல் பாகத்தில், இன்ஸ்பெக்டர் பிரம்மாவாக வரும் யோக் ஜபீயுடன், இன்ஸ்பெக்டர் தெய்வநாயகமாக கராத்தே கார்த்தி நடித்துள்ளார். கமாண்டோ படது அர்னால்ட் போல் இறுகிய உடலும் முகமும் கொண்ட சைக்கோவாக வருகிறார். முதல் பாகத்தில், பிரம்மாவும் கூட படத்தின் சுவாரசியத்திற்கு உதவியிருப்பார். அவர் ஏன் முதல் பாகத்தில் பேசாத சைக்கோவாக வருகிறார் என்பதற்கும் ஓர் அழகான பின் கதையை இணைத்துள்ளனர். பின் கதைகளில் உள்ள சுவாரசியம், நிகழ்கதையில் இல்லை.
ஷாலுவாக வரும் சஞ்சிதா ஷெட்டியை, அம்முவாக மாற்றி ஹரிஷாவை நடிக்க வைத்துள்ளனர். அருமை பிரகாசம் என்ற பெயர் கருணாகரனுக்கு ஏன் வைக்கப்பட்டது என்று பின்கதையில் அட்டகாசமானதொரு காரணம் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தைப் போலவே, இப்படத்திலும் கலக்கியுள்ளார் கருணாகரன். குடிகார குருநாத்தாக மிர்ச்சி ஷிவா நடித்துள்ளார். குடிக்காவிட்டால் அவருக்கு பாம்புகள் தெரியத் தொடங்குவிடும். அரசு விநிதோகிக்கும் மதுவில் தரம் இல்லை எனக் குறைப்பட்டுக் கொள்கிறார். அவரது வழக்கமான மென்னகையுடன் அவர் வலிப்படுத்தும் நகைச்சுவை படத்தில் இல்லை. ஆங்காங்கே அவர் ரசிக்க வைத்தாலும், அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கு சற்று குறைவாகவே கலகலப்புக்கு உதவியுள்ளார்.
அரசு அறிவிக்கும் இலவசங்களைக் கலாய்த்து, இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கலாய்த்துள்ளார் இயக்குநர் S.J.அர்ஜுன். முதல் பாகத்தில், ‘நேர்மை’ என்பது சீரியசான தவறு போல் சித்தரிக்கப்பட்டிருக்கும். இப்படமோ, அரசின் இலவசங்களைப் பெறும் மக்களை நையாண்டி செய்துள்ளனர். முன்பாவது (!?) தர்மத்தை சூது கவ்வியது, இப்போ தர்மமே இல்லை. எது எதைக் கவ்வினால் என்ன என ஆழ்ந்த அஞ்ஞானத்தில் மையம் கொண்டுள்ளது படம்.