32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Once Upon A Time In Madras விமர்சனம்

Dinesh R சேலம் Published: 11/12/2024 3 நிமிட வாசிப்பு Updated: 22/09/2025 இது புதிது
எழுத்து அளவு:

தன் வீட்டு மரத்து மாங்காயை அடித்துத் தின்ற சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். அந்தத் துப்பாக்கி, யார் யார் கைகளில் கிடைக்கிறது, அவர்கள் வாழ்வில் என்ன நேருகிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நான்கு கதைகளை இணைக்கும் hyperlink ஆகப் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. மகளாகப் பருவ மாற்றம் அடையும் மகனைப் பெற்ற தாயிடமும், அரசியல் கொலை புரியும் கொலைக்காரன்க்கு உடந்தையாக இருக்கும் ஓட்டுநரிடமும், டொமஸ்டிக் வயலன்ஸிற்கு உள்ளாகும் புது மருமகளிடமும், சாதிவெறி பிடித்த பத்திரிகையாளரிடமும் துப்பாக்கி கிடைக்கிறது.

படத்தின் முதற்பாதி, கோர்வையற்ற காட்சிகளாக நகர்ந்து இடைவேளையில் ஆவலைத் தூண்டும் விதமாக முடிகிறது. இரண்டாம் பாதியின் முடிவில் எல்லாக் கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் இணைந்து திருப்திக்கரமாகப் படம் முடிகிறது. நான்கு கதைகளுமே, 121 நிமிடத்திற்குள் முடிந்து விடுவது பெரிய ஆசுவாசத்தையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

தன் மனைவியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடவேண்டுமென மெனக்கெடும் பாத்திரத்தில் பரத். தன் மகளை எப்படியாவது மருத்துவராக்கி விடவேண்டுமெனப் போராடும் துப்புரவு தொழிலாளியாக அபிராமி. இருவரது அத்தியாயமும் அட்டகாசமாக உள்ளது. அறிமுக இயக்குநரான பிரசாத் முருகன் அவர்களின் கதை சொல்லும் பாணியில் ஒரு பேட்டர்னைக் கவனிக்க முடிகிறது. ஏழை பெற்றோர், பிள்ளையின் நலத்திலும், முன்னேற்றத்திலும் அக்கறை உடையவராகவும், விருப்பு வெறுப்பிற்குக் காது கொடுப்பவராகவும் உள்ளனர். பணம் படைத்த பெற்றோர்களோ, மதம், சாதி என மனமிறுகி உள்ளனர்.

பரத், அபிராமி, அஞ்சலி நாயர், ராஜாஜி, பவித்ரா லட்சுமி, ஷான், தலைவாசல் விஜய், அருள் ஷங்கர் என கச்சிதமாகப் பொருந்திப் போகும் கதாபாத்திர தேர்வுகள் படத்திற்கு பலமாகியுள்ளது. ஜோஸ் ஃபிராங்க்ளினின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளது. ‘ஷூட் பண்ணு‘ என்ற பாடலை இயக்குநர் பிரசாத் முருகனும், ‘போ போ சே குவாரா‘, ‘தேசம் இல்லா ராஜா நான்’ ஆகிய பாடல்களை ஜெகன் கவிராஜும் எழுதியுள்ளனர். பபிள் கம் மென்று கொண்டு, வில்லனோடு வரும் ஒரு சின்னஞ்சிறு பாத்திரத்தில் ஜெகன் கவிராஜ் நடிகராகவும் தோன்றிக் கவனிக்க வைத்துள்ளார்.

குடும்பப் பெருமையை நிலைநாட்டத் துடிக்கும் டொமஸ்டிக் வயலன்ஸ் பற்றி ஓர் அத்தியாயம் பேசுகிறது. உடை, வேலை என எல்லா விஷயத்திலும் புதிய மருமகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் மாமியாரின் சுயரூபம் ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது அஞ்சலி நாயர்க்கு. அஞ்சலி நாயரின் தந்தை பாத்திரத்தில் நடித்திருப்பவர் ‘அய்யா வழி’க்காரராக வருகிறார். அவர் தனது மகளிடம், ‘சந்தோஷத்தையும் சுயத்தையும் இழக்க வேண்டிய சூழல் உருவானால், அங்கிருந்து வெளியேறி விடு’ எனச் சொல்லி அனுப்புகிறார். வசனகர்த்தாவாக, இப்படத்தில் அறிமுகமாகியுள்ள M. ஜெகன் கவிராஜ் கிடைக்கும் இடத்திலெல்லாம் கவனத்தைக் கோரும்வண்ணம் பளீச்சிடுகிறார்.

கொடுத்த பட்ஜெட்டில், மிகக் குறைவான நாட்களில் நிறைவானதொரு படத்தைக் கொடுத்துள்ளார் பிரசாத் முருகன். நிறைய நடிகர்கள் படத்தில் இருந்தாலும், அனைவருக்கும் திருப்தியான பாத்திரங்களை அளிக்க, பிரசாதின் செறிவான திரைக்கதை உதவியுள்ளது. சாமானியர்களை எகத்தாளமாக எள்ளி நகையாடும் போலீஸ், சாதியைத் தூக்கிப் பிடிக்கும் பத்திரிகை முதலாளியிடம் பம்முகிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என மதம்பிடித்த பெற்றோர் ஒரு பக்கம், கொடும் துன்பத்தை அனுபவிக்கும் மகளிடம் தற்கொலை எண்ணம் எழவே கூடாதெனத் தாங்கிப் பிடிக்கும் ஒற்றை பெற்றோர் மறுபக்கம். அபிராமிக்கும், ராஜாஜிக்கும் இடையேயான மெச்சூர்டான நட்பு ரசிக்க வைக்கிறது. அதே சமயம், ஒரே படுக்கையில் படுக்கும் அஞ்சலி நாயர்க்கும், அவரது கணவர்க்கும் இடையேயான பெருந்தொலைவு சமூகத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கிறது. இத்தகைய கலவையான மனிதர்கள் மூலம் ஓர் இயல்பான சுவாரசியத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் பிரசாத் முருகன். தனிமனித வாழ்வை முதன்மைப்படுத்தும் நவீன சிந்தனையைப் பிரதானமாக முன் வைக்கிறது பிரசாத்தின் எழுத்தும் படமும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.