துக்ளக் தர்பார் விமர்சனம்
அமாவாசைகளால் நிரம்பியது அரசியல்களம். சிங்கம் என்றழைக்கப்படும் சிங்காரவேலன் அப்படியொரு நபர். எதிர்பாராத விதமாக அவருக்குத் தலையில் அடிபட, சிங்கத்துக்குள் இருந்து ஒரு நல்ல மனம் படைத்த ஆளுமை பெளர்ணமி போல் உருவாகிறான். சிங்கத்துக்குள் இருக்கும் பெளர்ணமி மக்களுக்கு நல்லது செய்யப் பார்க்க, அமாவாசையோ மக்களை வஞ்சித்துச் சம்பாதிக்கப் பார்க்கிறான். துக்ளக் தர்பார் போல், சிங்கத்திற்குள் இருக்கும் ஆளுமைகள் சிங்கத்தைத் தன்வயப்படுத்த அவனை ஒரு வழி செய்கின்றனர். சிங்கத்தை எந்த ஆளுமை வசப்படுத்தியது என்பதே படத்தின் கதை.
கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மங்களமாக பகவதி பெருமாள் நடித்துள்ளார். தன்னிடத்தை நேற்று வந்தவன் பிடித்து விடுவான் என்ற பதற்றத்திலேயே இருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சிங்காரவேலனின் நண்பன் வாசுவாகக் கருணாகரன் நடித்துள்ளார். உற்ற துணையாக இருக்கும் நண்பன் கதாபாத்...