
கட்டப்பாவ காணோம் படத்தின் இயக்குநர் மணி சேயோனின் இரண்டாவது படமிது.
தொழிலதிபர் ஜோயல் கொடூரமான முறையில் கொல்லப்பட, அந்த வழக்கை ஏற்கும்படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திவாகரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. திவாகர் ஏன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், காணாமல் போகும் அவரது காதலி ஆத்யாவிற்கும் இந்தக் கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என பல முடிச்சுகள் படத்தின் முடிவில் அவிழ்க்கப்படுகிறது.
லப்பர் பந்து படத்தில், ஜாலி ஃப்ரெண்ட்ஸ் அணி கேப்டனாக நடித்திருந்த டிஎஸ்கே (TSK), இப்படத்தில் சுந்தர்.சி-க்குக் கீழ் பணிபுரியும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தொழிலதிபர் ஜோயலாகக் கமல் காமராஜ் நடித்துள்ளார். சுந்தர்.சியின் காதலி ஆத்யாவாக தன்யா ஹோப், ஜோயலின் மனைவியாக அபிராமி வெங்கடாசலம், அபிராமி வீட்டில் பணிபுரிபவராக சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால் இவர்களை விடப் படத்தின் ஓட்டத்திற்கு உதவுவது ஹேபா பட்டேல்தான். போலீஸ் அதிகாரி பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் சுந்தர்.சி. அவரது உயரமும் கம்பீரமும் அதற்குத் துணை புரிகிறது. வல்லான் எனும் தலைப்பிற்கு, சண்டை இயக்குநர் விக்கியின் காட்சியமைப்புகள் உதவி புரிகின்றது. ஆனால், அவரால் அழுது கதாபாத்திரத்தின் அக வலியைப் பிரதிபலிக்க முடியவில்லை.
படத்தில் பல கிளைக்கதைகள் உண்டு. காதல், துரோகம், பொருளாதாரக் குற்றம் என சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லாத கதை எனினும், திரைக்கதையின் கோர்வையின்மை படத்தில் ஒன்றவிடாமல் அலைக்கழிக்கிறது. க்ளைமேக்ஸில் எல்லா முடிச்சையும் அவிழ்த்து அசத்தி விடவேண்டுமென்று மெனக்கெட்டுள்ளார் மணி சேயோன். ஆனால், படம் எதை நோக்கி நகர்கிறது என்ற தெளிவில்லாமல், வேகவேகமாக ஒன்றிலிருந்து ஒன்றெனக் காட்சிகள் மாறியவண்ணம் உள்ளன. படம் நல்ல த்ரில்லர் படத்திற்கான அடித்தளத்தைக் கொண்டுள்ளது.