
ப பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களுக்குப் பின் தனுஷ் இயக்கியிருக்கும் 4 ஆவது படம் “இட்லி கடை” ஆகும். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷூடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
தேனி மாவட்டத்து சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் நடத்தும் இட்லி கடை அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது. இயற்கையான முறையில் நல்ல கைப்பக்குவத்துடன் சுவையான இட்லி சமைப்பவர் ராஜ்கிரண். அவரது மகன் தனுஷ் படிப்பை முடித்து வசதியாக வாழ வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார். பாங்காங்கில் தொழிலதிபர் சத்யராஜ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை செய்யும் தனுஷைச் சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டே காதலிக்க, தனுஷூடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கிடையில் திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு ராஜ்கிரண் இறந்து விட, ஊருக்குக் கிளம்பி வருகிறார் தனுஷ். மீண்டும் பாங்காக் சென்றாரா, ஷாலினி பாண்டேவுடன் திருமணம் நடந்ததா, ராஜ்கிரண் மரணத்துக்குப் பின் அந்த இட்லி கடை என்னானது என்பதே மீதிக்கதை.
தனுஷ் அவரின் திருச்சிற்றம்பலம், குபேரா மோடைத் (mode) துறந்து ரொம்பவே எளிமையாக, தன் நாயக பிம்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு நடிப்புக்குரிய கதாபாத்திரத்தில் ஜொலித்துள்ளார். மிக இயல்பான, எமோஷனலான நடிப்பால் பார்வையாளர்களை அந்தப் படத்துக்குள் இழுக்கிறார். நாயகியாக நித்யா மேனன், திருச்சிற்றம்பலம் படத்தின் இன்னொரு பரிமாணத்தில் மிளிர்கிறார். பணக்கார, ஈகோ பிடித்த வில்லனாக அருண் விஜய் அட்டகாசமாக நடித்திருக்கிறார். ரொம்ப ஸ்டைலாக அழகான வில்லனாக ரசிக்க வைக்கிறார்.
ராஜ்கிடன் தனது தோற்றத்தாலும் புன்னகையாலும், சில காட்சிகளிலேயே வந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் ஆழப் பதித்து விடுகிறார். ஒப்பனை மற்றும் நடிப்பின் மூலம் கோடீஸ்வரராகவே சத்யராஜ் மாறியிருக்கிறார். ஷாலினி பாண்டே மிக அழகான தமிழச்சியாக வந்து போகிறார். பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு, ஆடுகளம் நரேன், கீதா கைலாசம் என மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
காதுக்குள் ரீங்காரமிடுமளவு, ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசையில் எந்தக் குறையுமில்லாமல் சிறப்பாகத் தந்திருக்கிறார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவில் பாங்காக்கின் பிரம்மாண்டமும், கிராமத்தின் எளிமையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் தனுஷ், சிறுவயதில் தான் பார்த்த சில விஷயங்களை வைத்துக் கற்பனையாக இந்தப் படத்தை எழுதியுள்ளதாகச் சொல்லியிருக்கிறார். அதைத் திரையில் கொண்டு வந்த விதமும் சொல்லிக் கொள்ளும்படி உள்ளது. எனினும் படம் முழுக்க இப்படித்தான் பயணிக்கும், இப்படித்தான் காட்சிகள் வரும் எனக் கணிக்கும் அளவிற்கு ரொம்பவே நிதானமான ட்ராமாவாக உள்ளது. ஆனாலும் ஆங்காங்கே சில எமோஷனல் காட்சிகளை மனதில் நிற்கும் வண்ணம் அமைந்துள்ளது. சொந்த ஊரை விட்டு வெளியேறி வெளியூருக்குச் சென்ற ஒவ்வொருவருக்கும் இந்தப் படம் ஏதோ ஒரு விதத்தில் இதயத்துக்கு நெருக்கமாக அமையும் என்பது உறுதி. மொத்தத்தில் முந்தைய படங்களைப் போலவே, இயக்குநர் தனுஷ், இந்தப் படத்திலும் பாஸ் மார்க் வாங்கி விட்டாலும் இயக்குநர் தனுஷ் சராசரி மதிப்பெண்களிலேயே திருப்திப்பட்டுக் கொள்வதைத் தவிர்க்கலாம்.
– மாறன் செ