Shadow

மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

தனது காதலை ஏற்காவிட்டால், முகத்தில் அமிலம் ஊற்றும் இளைய தலைமுறையின் போக்கைக் கண்டு கவலையுறும் மனநல மருத்துவரான அர்ஜுனன், ஒரு மென்மையான, மேன்மையான காதலைத் திரையில் சொல்ல விழைந்துள்ளார். அதற்காகத் தனது அஜய் அர்ஜும் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படமே மயிலாஞ்சியாகும். மயிலாஞ்சி (அல்லது மைலாஞ்சி) என்பது மருதாணி (Henna) தாவரத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

புகைப்படக் கலைஞரான சூர்யா, அரிய வகை பறவையினத்தைப் படமெடுக்க நீல்கிரி வந்து சேருகிறார். அங்கே வசிக்கும் சாரு மீது காதல் வயப்படுகிறார். சாருவோ, தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிவித்து, சூர்யாவிடமே காதலுக்கு உதவும்படி கேட்கிறார். அவர்களது காதல் என்னானது என்பதே படத்தின் கதை.

சூர்யாவாக நடித்துள்ள கன்னிமாடம் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்கும், சாருவாக க்ரிஷா குரூப்பும் நடித்துள்ளனர். ஓவியம் போல் திரைச்சட்டகங்களை (Frames) அழகுறச் செதுக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். இளையராஜாவின் இசை, ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பு என படம் தொநில்நுட்ப ரீதியாக மிக நேர்த்தியாக உருவாகியுள்ளது. அந்தக் கவித்துவத்திற்குத் தீனி போடுமளவு அஜயன் பாலாவின் எழுத்து சுருதி சேரவில்லை. ரஷ்யச் செவ்வியல் நாவலான ‘வெண்ணிற இரவுகள்’-ஐ நினைவுப்படுத்தும் வகையில் கதை இருந்தாலும், திரைக்கதை அத்தனை வலுவாக இல்லை. குறிப்பாக நாயகியின் கதாபாத்திர வார்ப்பு மிகவும் தட்டையாக உள்ளது. ஒரு பள்ளிச் சிறுவன் சொல்வதை, “அப்படியா!” எனக் கேட்டு அதன்படி செயற்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளார். ஒரு விஷுவல் கவிதையாக மனதை வருடியிருக்க வேண்டிய படம், ஓவியக்காட்சிக்குச் சென்று வந்த திருப்தியை மட்டுமே அளிக்கின்றன.