

சினிமாவில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதைக் கொஞ்சம் உண்மைச் சம்பவங்களை நிறையக் கற்பனையுடன் புனைவாகக் கலந்து கட்டி அற்புதமானதொரு அரசியல் பகடிப்படத்தைத் தந்துள்ளனர் தந்தை மகனுமான தம்பி இராமையாவும், உமாபதி S.இராமையாவும். ‘தலைவர் தம்பி தலைமையில்’ போலவே ஒரு கொண்டாட்டமான படத்தைக் கண்ணன் ரவி குழுமம் (KRG) சார்பில் மறுபடியும் அளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவியும், தீபக் ரவியும்.
அடுத்த எம்.ஜி.ஆராகக் குல்கந்த் குமார் எனும் நடிகர் பரிணமிப்பார் என்பதை அனுமானித்து, அவரைப் போஷித்து, ஊக்குவித்து வளர்த்தெடுக்கிறார் நிலச்சுவன்தாரான மன்றாடியார் எனும் பொள்ளாச்சி கோடீஸ்வரர். அவரது எண்ணம் போலவே குல்கந்த் குமார் வளர்ந்து தமிழகத்தின் தங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார். குல்கந்த் குமாரின் 50 ஆவது வயதில் அவரை அரசியலுக்குள் கொண்டு வருகிறார் மன்றாடியார். அதன் பின் என்னாகிறது என்பதே படத்தின் சுவாரசியமான திரைக்கதையும் எதிர்பாராத முடிவும்.
நாயகன் நட்டி தான் என்றாலும், அவரையும் விட மிகப் பிரதான கதாபாத்திரமான மன்றாடியாராக தம்பி இராமையா நடித்துள்ளார். பத்தின் கலகலப்பிற்கு முழுவதுமாகப் பொறுப்பேற்கிறார். ஒரு ஜொலிக்கும் தங்கத்தை ஒளிர விட்டு, அந்த ஒளியைக் காட்டி மன்றாடியார் ஆடும் ஆட்டம்தான் இப்படம். தைலஸ்ரீ எனும் நாயகியோடு தங்க நட்சத்திரம் கிசுகிச்சுப்படும் பொழுது, என்ன செய்து மன்றாடியார் அதைச் சாமர்த்தியமாக நீர்த்துப் போகச் செய்கிறார் என்பதைத் திரையில் காணவும். அந்தச் சுவாரசியம் அடங்கும் முன், மன்றாடியாரின் சமயோசிதத்திற்குக் குல்கந்த் குமார் தரும் எதிர்வினையும் அட்டகாசம்.
பகடிப்படம் என முடிவெடுத்த பின், இறங்கி அடித்துள்ளார் கதை எழுதியுள்ள தம்பி இராமையா. குல்கந்த் குமார் என்பது ஒரு தனிப்பட்ட நாயகனை உருவகப்படுத்திய கதாபாத்திரம் இல்லை. எம்.ஜி.ஆர்.இல் தொடங்கி, ரஜினிக்குச் சென்று, விஜய் வரை அனைவரது சாயலும் கொஞ்சம் குல்கந்த் குமாரிடம் தெரியும். புனைவுக்கே உண்டான படைப்புச் சுதந்திரத்தை மிக நேர்த்தியாக, எவர் மனதும் புண்படுத்தி விடக்கூடாது என்ற பிரக்ஞையோடு இயக்குநர் உமாபதி S. இராமையா கவனத்துடன் கையாண்டிருப்பது சிறப்பு.
எழுபது வயதில் அரசியலுக்கு வந்தால் போதாதா என்ற குல்கந்த் குமாரின் கேள்வியும், அதற்கு மன்றாடியாரின் தேற்றுகையான பதிலும் வயிற்றைப் பதம் பார்க்கிறது. படத்தின் கலகலப்பிற்கு முழுப் பொறுப்பேற்பது அதன் வசனங்கள். நட்டியும், தம்பி இராமையாவும் மிகச் சிறந்த நகைச்சுவை இணையாக ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு களமாடியுள்ளனர். தம்பி இராமையா ஏற்ற இறக்கமான வசனம், காமிக்கல் ரியாக்ஷன் என அசத்தினால், நட்டியோ தீர்க்கமான உடற்மொழி, அவருக்கே உரித்தான வசன வேகம், மினிமம் ரியாக்ஷன் என அதகளப்படுத்தியுள்ளார். நட்டியின் செளகார்பேட்டை தமிழ், அரசியலுக்கு வந்த பின் தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு என இரண்டுமே ரசிக்க வைக்கின்றன.
தமிழகத் தேர்தல் நிகழ்வுகளும், கோடையும் கன்னாபின்னாவென்று சூடு பிடித்திருக்கும் நிலையில், கூலாகத் திரையரங்கிற்குச் சென்று ஜாலியாகப் புத்துணர்ச்சியுடன் திரும்பக் கலகலப்பான உத்திரவாதத்தை அளிக்கிறது TN 2026 திரைப்படம்.

