Shadow

பல்டி விமர்சனம்

மெட்ராஸ்காரன் படத்துக்குப் பிறகு ஷேன் நிகாம் தமிழில் மீண்டும் நடித்திருக்கும் படம் பல்டி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். சாந்தனு, செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் தான் சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் திரைப்படமாகும்.

தமிழக, கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் இரண்டு நண்பர்கள் கபடி வீரர்களாவர். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடி வெற்றிகளைக் குவிக்கிறார்கள். அதே பகுதியில் விதவிதமான வட்டித் தொழில் செய்து வரும் மூன்று கேங்குகள் இடையே கடும் தொழில் போட்டி நிலவுகிறது. செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் பூர்ணிமா இந்த மூன்று கேங்குமே ஒருவரை ஒருவர் அழிக்கக் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் செல்வராகவன் நடத்தும் பொற்றாமரை கபடி டீமுக்குக் காசுக்காக விளையாடச் செல்லும் நண்பர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார் செல்வராகவன். அங்கிருந்து அவர்களின் வாழ்க்கையே மொத்தமாகத் திசை மாறுகிறது. அந்த கேங்கில் இருந்து வெளியே வந்தார்களா, செல்வராகவன் நோக்கத்தை உணர்ந்தார்களா, அவர்களின் வாழ்க்கை என்னானது என்பதே பரபர விறுவிறு திரைக்கதை.

பல்டி, ஷேன் நிகாம் நடித்துள்ள 25ஆவது படமாகும். அதற்கேற்ப நல்ல ஒரு படத்தைத் தேர்வு செய்திருக்கிறார். விஜய்க்கு ஒரு கில்லி போல ஷேன் நிகமுக்கு இந்த பல்டி அமைந்தாலும் ஆச்சர்யம் இல்லை. துடிப்பான இளைஞராக முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை திரையில் ஸ்கோர் செய்கிறார். சண்டைக்காட்சிகளிலும் அபாரம்.

படத்தின் இன்னொரு ஹீரோவாக சாந்தனு. தமிழ்ப் படங்களில் இவ்வளவு நாள் கிடைக்காத ஒரு பிரேக் இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது சாந்தனுவுக்கு. ஆக்ஷன், எமோஷன் என எல்லா விதமான நடிப்பையும் தரும் நல்ல ஒரு கதாபாத்திரம். வில்லனாக செல்வராகவன். வழக்கமான வில்லத்தனம் காட்டும் கதாபாத்திரம் தான், ஆனாலும் பெரிய உறுத்தல் இல்லாத அளவுக்கு நடித்திருக்கிறார். ஒரு தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தில் அல்ஃபோன்ஸ் புத்திரன் ரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகி ப்ரீத்தி அஸ்ரானிக்கு நடிக்க அவ்வளவாக ஸ்கோப் இல்லை என்றாலும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற அந்தக் கதாபாத்திரத்தில் மிக எளிமையாக, அயோத்திக்கு பின் ரொம்பவே இயல்பான பெர்ஃபாமன்ஸைத் தந்திருக்கிறார். பூர்ணிமா இந்திரஜித் தந்திரமான வில்லத்தனத்தில் அசத்துகிறார். கதாநாயகனின் நண்பர்களாக வரும் இரண்டு பேரும் நன்றாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பு. கபடி காட்சிகளைப் படமாக்கிய விதமும், சண்டைக் காட்சிகளில் கபடி விளையாட்டின் நுணுக்கங்களை உபயோகித்த விதமும் அருமை. சாய் அபயங்கர் முதல் படம், பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறை சொல்கிற அளவுக்கு இல்லாததே அவரின் முதல் வெற்றி. ‘ஜாலக்காரி’ பாடல் மட்டும் கொஞ்சம் மனதில் தங்குகிறது. அலெக்ஸ் புலிக்கல் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல படிகள் உயர்த்தியிருக்கிறது.

இயக்குநர் உன்னி சிவலிங்கம் முதல் படத்திலேயே நல்ல ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் படத்தைக் கபடியைக் கலந்து தந்திருக்கிறார். ஆரம்பத்தில் வரும் கபடி காட்சிகளைப் படமாக்கிய விதமும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் ஆக்ஷன் திரைக்கதை ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடும். திருவிழா காட்சிகள், கபடி காட்சிகள், இரவில் நடக்கும் சண்டைக் காட்சிகள் என அத்தனையும் எழுதிய விதமும், அதைப் படமாக்கிய விதமும் சிறப்பு. கிளைமாக்ஸ் ஒரு நல்ல சர்ப்ரைஸ். இப்படத்தின் அடுத்த பாகம் வந்தாலும் அதுவும் இதே போல அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

– மாறன் செ