
எழுத்தாளர் ஜோதி ராமய்யாவிற்கு, நடுத்தர வர்க்கத்தைப் பற்றி நாவல் எழுதவேண்டுமெனப் பிரியப்படுகிறார். அந்தத் தேடலில், டாஸ்மாக்கில் சந்திக்கும் கண்ணன் எனும் ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறார். கண்ணன், அவரது குடும்பம், அவரது வாழ்க்கைப் பாடுகள், அவரது மகள் தீபிகா, மகன் தினேஷ், மனைவி கமலம் என ஒரு குடும்பத்தின் நெகிழ்ச்சியான கதை தான் மெட்ராஸ் மேட்னி படத்தின் கதையும்.
கட்சி விட்டுக் கட்சி தாவும் அரசியல்வாதி பச்சோந்தி பிரேமாவாகக் கீதா கைலாசம் நடித்துள்ளார். அம்மா பாத்திரங்களில் மட்டும் சிக்கிக் கொள்ளாமல், கலகலப்பான பாத்திரங்களிலும் முத்திரையைப் பதிப்பது சிறப்பு. அவரது உதவியாளராக விஜய் டிவி ராமர் தோன்றியுள்ளார். நகைச்சுவைக்கு உதவாவிட்டால் கூடப் படத்தில் ஒரு பாத்திரமாகப் பொருந்திப் போகிறார். பொதுவாகத் திரைப்படங்களில் அவர்க்கு இது போல் நிகழாது.
தினேஷாக நடித்துள்ள விஸ்வாவும், தீபிகாவாக நடித்துள்ள ரோஷினி ஹரிபிரியனும் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். பிளாஷ்-பேக்கில் தினேஷாகவும், தீபிகாவுமாக நடித்துள்ள சிறுவர்களும் கூட நேர்த்தியாக நடித்துள்ளனர். கண்ணனின் மனைவி கமலமாக நடித்துள்ள ஷெல்லி கிஷோர்க்குக் கதைக்குள் பெரிய வேலை இல்லை என்றாலும், திரையில், அவரது இருப்பும், கச்சிதமான முகபாவனைகளும், குடும்பத்தை ஒருங்கிணைக்கும் ஒரு குடும்பத்தலைவியாக மிளிர்வதற்கு உதவியுள்ளது.
படம் நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறது. படத்தில் சேட்டு வரும் காட்சிகளும், ஜார்ஜ் மரியான் வரும் காட்சிகளும் எடுத்துக்காட்டு. இரண்டாம் பாதியின் சென்ட்டிமென்ட் காட்சிகளோடு மிக அழகாகப் பொருந்திக் கொள்ள முடிகிறது. எழுதி இயக்கியுள்ள கார்த்திகேயன் மணிக்குப் பாராட்டுகள். ஒரு தந்தையைப் புரிந்து கொள்வதிலுள்ள தலைமுறை இடைவெளியை மீறி பிள்ளைகள் தந்தையைப் புரிந்து கொள்வதென்பது ஒரு மகத்தான கணம். நிறைய குடும்பங்களில் அது நடக்காமலே போகக்கூடும். ஆனால், படம் இந்தப் புள்ளியை மிக அழகாகத் தொட்டுள்ளது.
நேரடியாகக் கண்ணனின் வாழ்க்கைக்குள் செல்லாமல், எழுத்தாளர் ஜோதி ராமய்யாவைக் கதைசொல்லியாகப் பயன்படுத்துகிறார். படத்தின் மிகப் பெரிய மைனஸாக உள்ளது அவரது ஸ்டோரி நரேஷன். ஒய்யாரமாக அமர்ந்து வக்கணையாகப் பேசிக் கொண்டிருக்கும் சத்யராஜைப் பொறுத்துக் கொண்டால், கண்ணனாக நடித்துள்ள காளி வெங்கட் நல்லதொரு குடும்ப டிராமாவிற்கு உத்திரவாதமளித்துள்ளர். நல்ல தந்தையாக இருந்தும், பொறுப்பான, அதாவது பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திச் செய்யுமளவு பணம் கொண்ட தந்தையாக இல்லாமல் போய்விட்டோமே எனக் குற்றவுணர்ச்சியில் அவர் வாடும்பொழுது, நடுத்தர வர்க்கத்துத் தந்தைகளின் பிரதிநிதியாகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். காளி வெங்கட் எனும் அசலான கலைஞனால் எந்தக் குணசித்திரப் பாத்திரத்தையும் மிக அற்புதமாகத் திரையில் கொண்டு வர முடிகிறது. மெட்ராஸ் மேட்னி அதற்குக் கட்டியம் கூறும்வண்ணம் அமைந்துள்ளது.