Shadow

மெட்ராஸ்காரன் விமர்சனம்

திருமணத்திற்கு முன் தினம், ஒரு கர்ப்பினி பெண் மீது காரை மோதி விடுகிறான் நாயகன். ஊரே அவனுக்கெதிராகத் திரண்டு விடுகிறது. அவ்விபத்தினால், கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை இறந்து பிறக்க, ஐம்பதாயிரம் அபராதமும், இரண்டு வருடம் சிறைத் தண்டனையும் பெறுகிறான். அக்குழந்தையின் மரணத்திற்கு, தான் காரணமில்லை எனத் தெரிய வர, உண்மையைக் கண்டறியப் புறப்படுகிறான் நாயகன். நாயகன், உண்மையைக் கண்டுபிடித்து தன் குற்றவுணர்வில் இருந்து மீள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.

இப்படத்திற்கு, ‘மெட்ராஸ்காரன்’ எனத் தலைப்பிட நிச்சயம் ஒரு முரட்டுத் தைரியம் வேண்டும். கதையின் களம் புதுக்கோட்டை, கதாமாந்தர்களோ அம்மண்ணின் மைந்தர்கள். நாயகன், சென்னையில் வேலை பார்ப்பதாலும், அவன் சென்னை ரெஜிஸ்ட்ரேஷன் கார் வைத்திருப்பதாலும், அவனை மெட்ராஸ்காரன் என அழைக்கின்றனர். சொந்த ஊர் மெச்சும்படி தன் கல்யாணத்தை நடத்தவேண்டுமென்ற லட்சியம் கொண்ட நாயகனும், தானொரு மெட்ராஸ்காரன்தான் என கொஞ்சும் மலையாளத் தமிழில் ஒத்துக் கொள்கிறார்.

முதற்பாதியில் சுவாரசியமான ஒரு முடிச்சைப் போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் மனம் போன போக்கில் பயணிக்கிறது திரைக்கதை. ‘நீங்க தப்பு பண்றீங்க’ என்ற வசனத்தைப் பார்ப்பவர்கள் அனைவரிடமும் சொல்கிறார் நாயகன் ஷேன் நிகாம். க்ளைமேக்ஸில், ஐஸ்வர்யா தத்தாவும் அதையே இருமுறை கலையரசனிடம் சொல்கிறார். திரைக்கதை, வசனம் என இரண்டு வகையான எழுத்திலும் போதுமான கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுள்ளார் ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ். ஆனால், கதை ஈர்ப்பாகவே உள்ளது.

‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ நாயகி நிஹாரிகா, ஷேன் நிகாம்க்கு ஜோடியாக 2-3 கைபேசி அழைப்புகளுக்கும், ஒரு பாடலுக்கும் மட்டும் வந்து மறைகிறார். குழந்தையை இழக்கும் கலையரசனின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா தத்தாவிற்கும் போதுமான திரை நேரம் இல்லாவிட்டாலும், படத்தினை முடிக்க உதவுவதால், படத்தின் நிஜ நாயகியாக நிஹாரிகாவைப் பின்னுக்குத் தள்ளிப் பரிணமிக்கிறார்.

நாயகனின் அப்பாவாகப் பாண்டியராஜன் வந்தாலும், தாய்மாமாவாக வரும் கருணாஸே பிரதான பாத்திரத்தில் வருகிறார். இயக்குநர், கருணாஸ்க்குத் தீனி போடுமளவு வசனத்தைத் தராவிட்டாலும், அவரது தேர்ந்த அனுபவத்தால், அக்குறையைத் தன் பார்வையாலேயே போக்கி அசத்தலாக நடித்துள்ளார். கதாபாத்திர வடிவமைப்பைக் கட்டமைப்பதிலும் சோடை போயுள்ளார் வாலி மோகன் தாஸ். மனைவியின் பேச்சைக் கேட்டு, கலையரசன் காவல் நிலையத்திற்கு வருகிறார். நான்-லீனியராக இதைக் காட்டியுள்ளனர். ஆனால் பட முடிவில், அந்த ஷாட்டைக் காட்டத் தவறி, கலையரசன் பாத்திரத்தையும் அந்தரத்தில் துண்டித்துவிட்டுள்ளனர். படத்தொகுப்பாளர் R. வசந்தகுமார், கதையைச் சரியாக உள்வாங்கவில்லையோ என்ற ஐயத்தை அளிக்கிறது. நிறைய காட்சிகளுக்கு சரியான மூடுகை (Closure) இல்லை. ஒளிப்பதிவாளர் பிரசன்னா S. குமார் படத்தின் அழகைக் கூட்டுவதற்கு உதவியுள்ளார். சாம் CS-இன் பின்னணி இசை சற்று தூக்கலாகி இரைச்சலின் எல்லையில் நின்று ஒலிக்கிறது. ‘தை தக்கா கல்யாணம்’ பாடலின் இசையும், ஒளிப்பதிவும் ரசிக்கத்தக்க வகையில் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

தீமையைக் கொண்டு பொறுக்காதவராகவும், மனைவி மீது காதல் கொண்டவராகவும், சட்டென உணர்ச்சி வசப்படுபவராகவும் கலையரசன் நடித்துள்ளார். தமிழில் நாயகனாக அறிமுகமாகியுள்ள ஷேன் நிகாம் அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். ஆனால் அவரே மலையாள நெடியில் டப்பிங் பேசி, கதைக்களத்தில் இருந்து சற்றே அந்நியத்தன்மை பெற்றுவிடுகிறார்.

எழுத்தில் மெனக்கெடல் குறைவென்பதால், மையப் பாத்திரங்களின் உணர்வுகள் சரியாகக் கடத்தப்படவில்லை. ஆனால் மெட்ராஸ்காரன், உள்ளபடிக்கு குற்றவுணர்வையும், இழப்பின் வலியையும், பழிவாங்கும் உணர்வையும் பேச முனைந்துள்ளது.