

இந்திய அணிக்குத் தேர்வான மணத்தி P. கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையைக் கருவாக எடுத்துக் கொண்டு தன்னோட வலிகளையும் ஏக்கங்களையும் இணைத்து பைசனை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். அவரது முந்தைய படங்கள் பேசிய அரசியலையும் கைவிடாமல், படத்தின் பின்னணியாக வெங்கடேச பண்ணையார் – பசுபதி பாண்டியன் பகையின் பின்னணியில், கபடியில் சாதிக்க நினைக்கும் கபடி வீரனின் சமூகச் சூழலையும் மனநிலையையும் பதிந்துள்ளார்.
கபடி என்றால் வனத்தி கிட்டான்க்கு உயிர். அவனது திறமையைக் கண்டு ஊக்குவித்துத் தொடர்ந்து விளையாட வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கந்தசாமி. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் சார்பில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட இடம் பிடிக்கிறார். கிட்டானின் இந்த சாதனைப் பயணம் எத்தகையது என்பதைப் பற்றிய படம்தான் பைசன் காளமாடன்.
கிட்டானின் குலதெய்வம் காளமாடன் ஆவார். சீறிப் பாயும் கிட்டானின் திறம்பட்ட விளையாட்டைச் சிலாகிக்கும் வகையில் பைசன் என்றழைக்கப்படுகிறார் கிட்டான். கிட்டானாக துருவ் விக்ரம் கலக்கியுள்ளார். முறுக்கேறிய உடலும், தான் பிறப்பதிற்கு முன்பே நிலவி வரும் சாதியப் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட ஆற்றாமையைப் பரிதவிப்பைக் கோவத்தை வெளிப்படுத்தும் முகமும் படத்திற்கு உயிர்ப்பை அளித்துள்ளது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மிகச் சிறப்பான நடிகராக வெற்றிகரமாக வலம் வருவார்.
படத்தின் உண்மையான நாயகன் கிட்டானின் தந்தை வேலுச்சாமியாக நடித்திருக்கும் பசுபதிதான். சாதிச் சண்டைகளில் பிளவுப்பட்டுப் போய்க் கிடக்கும் ஊரில், தனது மகனைக் கக்கத்தில் வைத்து அடைகாக்கும் தந்தையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் மாரி தனது அரசியலுக்காகவும், வம்படியாகத் தன் சுயசரிதையை எழுதிப் பார்க்கும் ஆவலிலும், இந்தக் கதாபாத்திரத்தை பலி கொடுத்துவிடுகிறார். வாழையில் சிவனணைந்தானுக்கு உணவைத் திருட வேண்டிய அவசியம் நேர்ந்தது. தனியொருவர்க்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என மகாகவி பாரதியாரும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ளார். இப்படத்திலோ, உடலைத் திடப்படுத்துவதற்காக சக மாணவர்களின் உணவை எடுத்து உண்கிறான் பள்ளி மாணவனாய் இருக்கும் கிட்டான். பசியால் அல்ல, உடலைத் திடப்படுத்துவதற்காக மற்றவரின் உணவை உண்ணும் குற்றவுணர்வற்றவராக நாயகனையும், உடலைத் திடப்படுத்துமளவு உண்ணவிடாமல் தடுக்கும் தகப்பனாகப் பசுபதியையும் சேர்த்துக் கழுவிலேற்றி விடுகிறார் மாரி செல்வராஜ்.
படத்தில் அடிக்கடி இடம் பெறும் வசனம், ‘வளரக் கூடாது என மற்றவர் போடும் வேலியை அறுத்துக் கொண்டு, மற்றவர்களால் வேலியே போடமுடியாத உயரத்துக்கு வளர்ந்துவிட்டான் கிட்டான்’ என்பதே! அழுத்தமான அரசியல் வசனமாக ஈர்த்தாலும், கதைக்குப் பொருந்தாத வசனமிது. மகனின் பாதுகாப்பிற்காக மகனைக் கபடி விளையாட விடாமல் தடுப்பதே அவரது தந்தை தான். கிட்டானின் தந்தை போட்ட அந்த வேலியைப் போராடி உடைத்தெறிவது கிட்டானின் விளையாட்டு ஆசிரியர்தான். இப்படியாக வசனத்தில் புரட்சியையும், கதையில் யதார்த்தத்தையும் பதிந்துள்ளார் மாரி செல்வராஜ். உண்மையில் கிட்டான் ஆசிர்வதிக்கப்பட்டவன். அவனது திறமை மட்டுமே அவனது வெற்றிக்குக் காரணம் என்றாலும், அவனது திறமைக்கான அங்கீகாரத்தைப் போராடிப் பெற்றுத் தருவது மாற்று சாதியினரைச் சேர்ந்தவர்களே! பி.டி. வாத்தியார் சந்தான்ராஜ், கந்தசாமி, தமிழ்நாடு கபடி கமிட்டியின் தலைவர் காண்டீபன், காண்டீபனின் மகள், தமிழ்நாட்டுக் கபடி அணியின் கேப்டன் என கிட்டானின் வேலியை உடைத்து அவனை உயரத்தில் ஏற்றி அழகு பார்க்கின்றனர். கிட்டானோ சட்டெனச் சோர்ந்துவிடுபவன், உணர்ச்சி வசப்படுபவன். வேலியை மேலும் இறுக்கிக் கொள்ளும் இயல்பினன். மணத்தி P. கணேசனை வளர்த்துவிட்டது வெங்கடேச பண்ணையார் எனும் யதார்த்தம், மாரி செல்வராஜ் பதிய நினைக்கும் அரசியலுக்கு மாறானது. தன் விருப்பத்திற்குத் தக்கவாறு புனைவின் பின் ஒளிந்து கொள்ளாமல், உண்மையை ஒழுகியே திரைக்கதையை நேர்மையாக வடிவமைத்துள்ள மாரி செல்வராஜ்க்குப் பாராட்டுகள்.
தென்தமிழகத்தையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த இருவரின் பகையை மிக சென்ஸிபிளாகக் கையாண்டு மிக அற்புதமாக பேலன்ஸ் செய்துள்ளார் மாரி செல்வராஜ். ஆனால், மையக் கதையிலும், பிரதான கதாபாத்திர உருவாக்கத்திலும் தான் சமரசம் செய்துள்ளார். கந்தசாமியாக நடித்துள்ள லாலும், பாண்டியராஜாக நடித்துள்ள அமீரும் மிகச் சிறப்பான தேர்வுகள். வருகின்ற சிற்சில காட்சிகளிலேயே படத்தின் கனத்தைப் பலமடங்கு உயர்த்த உதவியுள்ளனர். கிட்டானை விடவும் எளிதாக மனதில் பதிந்துவிடுகின்றனர். அவ்வளவு ரத்தத்தையும், கோரமான கொலைகளையும் Raw-வாகத் திரையில் காட்டுகின்றனர். UA 16+ சென்சார் சான்றிதழைப் பெற்றுள்ள இப்படம், A சான்றிதழ் பெறத் தகுதியான படமாகும்.
படத்தின் நீளம் சற்றே அயர்ச்சியைத் தருகிறது. துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரனின் வயது வித்தியாசம், கிட்டானை பைசனாக உருவகித்து ஓவியம் வரையும் அழகம்பெருமாளின் மகள் ஹரிதா முத்தரசன் என கதையினின்று ஏற்படும் சின்னஞ்சிறு விலகல்களைத் தவிர்த்திருக்கலாம். இந்த விலகல்களையும் ரசிக்கும்வண்ணம் திரையில் பதிக்கும் craft கைவரப்பெற்றவராக மாரி செல்வராஜ் ஆச்சரியப்பட வைக்கிறார். நிவாஸ் K. பிரசன்னா உற்ற துணையாக நின்று தனது அற்புதமான இசையால் மாரிக்கு இதைச் சாத்தியப்படுத்த உதவியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் மூவியாகவும் இல்லாமல், தடைகளைத் தகர்த்தெறியும் ஒடுக்கப்பட்டவனின் படமாகவும் இல்லாமல், மகனுக்காக உருகி எதையும் செய்யத் தயாராக இருக்கும் தந்தையின் படமாகவும் இல்லாமல், இது அத்தனையுமாக இருப்பதே மட்டுமே பைஸனின் வரமும் சாபமும்.

