
3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review
தனக்கென்றொரு வீடு வாங்கவேண்டும் என்பது வாசுதேவனின் ஆசை. ஆனால் சூழலும், குடும்பப்பாடுகளும் அக்கனவைத் தொட்டுவிடும் நிலைக்கு வரும்பொழுதெல்லாம் தட்டி விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்தக் கனவைத் தன் மகன் பிரபு நிறைவேற்றுவான் என்று சமாதானமாகிறார். பிரபுவின் வாழ்க்கையோ, தோல்வியடைதலுக்கும் (Failure), எதிலும் வெற்றியோ முன்னேற்றமோ காணாத மிகச் சராசரியான வாழ்விற்கும் (Average) இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வாசுதேவனின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை.
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். பதினேழு வயதில் வேலைக்குச் செல்லத் தொடங்கும் வாசுதேவன், தன் தம்பியையும், தங்கையையும் படிக்க வைத்து ஆளாக்கிவிடுகிறார். அவரது உழைப்பின் பலனை அனுபவித்த தங்கையோ, ‘உன்னால் சொந்த வீடு வாங்க முடியாது’ என அண்ணனை ஏளனப்படுத்தி விடுகிறார். அந்த ஒரு சொல், வாசுதேவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே புர...