ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் வணங்கான் ஆகும். படத்திற்கும் அக்கதைக்கும் சம்பந்தமில்லை. தலைப்பை மட்டும் பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனிடம் அனுமதி கேட்டுள்ளார் இயக்குநர் பாலா. காது கேளாத, வாய் பேச முடியாத நாயகன், எவர்க்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத, வணங்காத அப்பழுக்கற்ற நல்ல முரடன் என்பதால், வணங்கான் எனும் தலைப்பு படத்திற்குச் சாலப் பொருந்துகிறது.
சுனாமியால் பெற்றோரை இழந்தவர்கள் கோட்டியும், அவனது தங்கை தேவியும். முரடனான கோட்டிக்கு, ஒரு காப்பகத்தில் வேலை வாங்கித் தரப்படுகிறது. அக்காப்பகத்தில், குளிக்கச் செல்லும் கண்பார்வையற்ற பெண்களை மூவர் ஒளிந்து நின்று ரசிக்கின்றனர். கொதித்தெழும் கோட்டி, வழக்கமாக பாலா முன்மொழியும் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறான். பாவம் செய்தவனை வதம் செய்துவிடுவதே அந்த தர்மம்!
ஒரு படைப்பாளனாகக் குறைந்தபட்ச அறம் கூட இல்லாமல், படத்தின் முதற்பாதியில் அரை நிர்வாண காட்சியொன்றைக் காட்டுகிறார். பிரச்சனை கதையிலோ, சொல்ல வந்த குற்றத்திலோ இல்லை, ஆனால் அதை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். ஆடுகளம் படத்தில், காவல் நிலையத்தில் பேட்டைக்காரன்க்கு நிகழும் அவமானத்தைக் காட்சியாகக் காட்டாமலே அற்புதமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருப்பார் வெற்றிமாறன். அப்படிக் கடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும், பாலாவின் கேமரா கோணங்கள் மலிவாக அமைந்துள்ளது. ‘யூனிஃபார்ம் போட்டவர்’ என பாதிரியார் கதாபாத்திரத்தை நையாண்டியுடன் அணுகி நகைச்சுவைக்கு முயற்சி செய்துள்ளார் பாலா. ஒரு கோமாளி காவல்துறை கதாபாத்திரமும், நாயகனைப் பார்த்து மிரளும் மற்றொரு காவல்துறை பாத்திரமும் கூடப் படத்தில் உண்டு.
குடிபோதையிலுள்ள இளைஞர்கள், இரயில்வே கேட்டில் வியாபாரம் செய்யும் திருநங்கைகளையும் பெண்களையும் போட்டு அடிக்க, அதைப் பார்க்கும் கோட்டி அவ்விளைஞர்களைப் போட்டு வெளுக்கிறார். அடிக்கிறார், அடிக்கிறார், அடித்துக் கொண்டே இருக்கிறார். அடிக்கத் தொடங்கினால் அவ்வளவு சாமானியத்தில் நிறுத்த மாட்டேங்கிறார். பெண்களை அடித்தால் பாவம் என நினைக்கும் உத்தம நாயகன் என நினைத்தால், நாயகன் கோட்டி உண்மையில் அப்படி இல்லை. நாயகியான டீனாவைச் சகட்டுமேனிக்கு அறைந்து குனிய வைத்து முதுகிலேயே சாத்து சாத்து எனச் சாத்துகிறார். சைக்கோ கோட்டியிடம் இருந்து டீனாவைக் காப்பாற்ற, கங்கைக்கரை ருத்ரன் வந்தால் பரவாயில்லை என நினைக்குமளவு அடிக்கிறார். கோட்டி எவ்வளவு தான் தன்னை அடித்தாலும், அவனைத்தான் காதலிப்பேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார் டீனா. டீனா காதலைச் சொல்ல முனையும்போதெல்லாம், கோட்டியின் செய்கை அருவருப்பானவை. டீனாவாக ரோஷ்னி பிரகாஷ் நன்றாக நடித்துள்ளார். அருண் விஜய் செலுத்தியுள்ள உழைப்பும் திரையில் நன்றாகத் தெரிகிறது.
பாலாவின் வதம் என்பது கொல்வதில்லை. மிருகத்தனமாக அடித்து சிதைப்பது. தனக்கு ஆதரவளித்து மிக நெருக்கமாக இருப்பவர்களுக்காகவே பாலாவின் நாயகர்கள் வெகுண்டெழுவார்கள். நான் கடவுள் ருத்ரன் மட்டுமே இந்த பேட்டர்னில் விதிவிலக்கு. ருத்ரனைத் தொடர்ந்து வணங்கானும் விதிவிலக்காகி உள்ளார். வணங்கானின் தங்கை தேவி, அவனது ஆதரவையும் அண்மையையும் கோர, மாற்றுத் திறனாளிகளின் வெளியில் சொல்ல முடியாத வலிக்கு நியாயம் வழங்குவதையே முதன்மை அறமாகக் கொள்கிறான்.
படத்தில், நீதிபதியாக மிஷ்கின் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனி முதல் மிஷ்கின் வரை எல்லாப் பாத்திரங்களும் பாலாவின் தர்மத்தைப் பிரதிபலிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். தர்மத்தைக் காக்கும் வணங்கானுக்கும் படத்தின் முடிவில் ஒரு தண்டனை வழங்கிவிடுகிறார் பாலா. அதனால் வணங்கான் என்ன இழக்கிறான் என்பதே க்ளைமேக்ஸ். ஆனால், அம்முடிவு இயல்பாக அல்லாமல் சோகத்திற்காக வலிந்து திணிக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை, எந்தக் கொம்பனையும் வளைத்து உடைத்துவிடும் என்ற தத்துவார்த்த முடிவிற்கான சரியான அடித்தளம் அமைக்கப்படாதது திரைக்கதையின் குறையாகும். அக்குறையைப் போக்கடிக்க உதவியுள்ளது சாம் CS-இன் பின்னணி இசை.