32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ரெட் லேபிள் விமர்சனம் | Red Label review

Dinesh R சேலம் Published: 06/02/2026 3 நிமிட வாசிப்பு Updated: 07/02/2026 இது புதிது
எழுத்து அளவு:

ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துத்து நாயகனாக நடித்துள்ள படம் “ரெட் லேபிள்” ஆகும். பொன்.பார்த்திபன் கதை, வசனம் எழுத K.R.வினோத் இயக்கியுள்ளார். கல்லூரி மாணவர் தேர்தல் பின்னணியில் ஓர் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கோவையில் இருக்கும் ஒரு கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தல் நடக்கிறது. அரசியல்வாதியின் மகன் அந்தப் பதவிக்கு போட்டியிடுகிறார். கல்லூரியின் பேராசிரியர்களுக்கே அவரால் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறது. அவன் மாணவர் தலைவரானால் மொத்த கல்லூரிக்குமே ஆபத்து என நினைக்கும் பேராசிரியர்கள் சிலர், ஒரு மாணவரை நிற்கச் சொல்லி அதற்கான உதவிகளையும் செய்கிறார்கள். அத்துடன் அதே கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன் மாணவர் சங்கத் தலைவராக இருந்த நாயகன் லெனினை உதவிக்கு அழைக்கிறார்கள். கல்லூரிக் காலத்தில் அடிதடி, பஞ்சாசய்த்து என சுற்றி வந்தவர் இப்போது தான் உண்டு, தன் வேலை உண்டு என அமைதியாக வாழ்ந்து வருகிறார். பின் நண்பர்கள் மற்றும் காதலியின் வேண்டுகோளுக்கு இணங்க உதவ ஒப்புக் கொள்கிறார். அந்த மாணவரை வெற்றி பெறவும் வைக்கிறார்கள். அதன் பிறகு வந்த இடத்தில் கல்லூரிக்குள் ஒரு கொலை நிகழ்ந்து விடுகிறது. அந்தக் கொலைக்குக் காரணம் என்ன, கொலையானது யார், அந்தக் கொலைக்கும் நாயகனுக்கு என்ன தொடர்பு என்பதை பரபரப்பான ஒரு த்ரில்லர் படமாக சொல்வதே மீதிக்கதை.

இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார் லெனின். கல்லூரிக்கு, நண்பர்களுக்கு என எல்லோருக்குமே ஹீரோவாகக் கொஞ்சம் கெத்தோடு சுற்றும் ஒரு கதாபாத்திரத்தில் முடிந்தவரை நன்றாகவே நடித்திருக்கிறார். நாயகியாக அஸ்மின், நாயகனைக் காதல் செய்வது, அவரைத் திருமணம் செய்ய முயற்சிப்பது என நாயகனை சுற்றியே வரும் ஒரு கதாபாத்திரம். ஒரு மிக முக்கிய காட்சியில் முக்கியத்துவம் பெறுகிறார்.

80, 90களில் வரும் தமிழ் சினிமா வில்லன்களைப் பிரதிபலிப்பது போல ஒரு காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வருகிறார். அவருக்குப் படையப்பா படத்தில் வரும் உதவியாளர் போல, அதே அரசியல்வாதி அசிஸ்டென்ட் வேடத்தில் அனுமோகன் நடித்துள்ளார். இருவருமே கொஞ்சம் பழைய ட்ரீட்மென்ட்டில் ஓரளவுக்குப் பரவாயில்லை என்பது போல அவர்கள் பங்கைச் செய்து விட்டுப் போகிறார்கள். முனீஷ்காந்த் நாயகனின் ரியல் லைஃப் நண்பரோ என்னவோ, ஒரு காட்சியில் வந்து மாலை போட்டு விட்டு, ‘உனக்காக எப்பவும் எங்கயும் இருப்பேன்’ என வசனம் பேசி விட்டுச் செல்கிறார். தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலரும் கவனம் பெறுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன், அவரது வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். பசுமையான சூழலில் இருக்கும் கல்லூரியை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். படம் ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்தாலும் தனது ஒளிப்பதிவின் மூலம் கல்லூரி வளாகத்தைக் கொஞ்சம் புதுசாகவே காட்டுகிறார். கைலாஷ் மேனன் இசையில் வரும் காதல் பாடல் ரசிக்க வைக்கிறது. அதைப் படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தது. பின்னணி இசை ஓகே ரகம். லாரன்ஸ் கிஷோர் எனும் படத்தொகுப்பாளருக்கு நன்றி சொல்லியே ஆகணும். இந்தப் படத்தைக் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்காமல் வேகமாக நகர்த்த அவரின் எடிட்டிங் உதவி செய்திருக்கிறது.

கைதி உள்ளிட்ட பல படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதிய பொன்.பார்த்திபன் கல்லூரி பின்னணியில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை எழுதியிருக்கிறார். அவரே ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இன்ப அதிர்ச்சியும் கொடுக்கிறார். ஆனாலும் சில இடங்களில், ‘என்ன ரொம்ப எளிமையா சொல்றேன்!’ என யோசித்து, கொஞ்சம் பழைய படங்கள் ரேஞ்சுக்கு இறங்கி விட்டாரே என எண்ண வைக்கிறார். ஆனாலும் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதிக்கு இடையே அவ்வளவு வித்தியாசம். கிட்டத்தட்ட ஜானரே மாறியிருக்கிறது.

அதை இறுதி வரை சுவாரசியம் குறையாமல் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.வினோத். குறைந்த பட்ஜெட்டில் ஒரு கல்லூரியிலேயே பெரும்பாலான படத்தை அதுவும் முழுக்கப் புதுமுகங்களை வைத்துச் சலிப்படைய விடாமல் பார்த்துப் பார்த்து இயக்கியிருக்கிறார் K.R.வினோத். முதல் பாதியில், ‘என்னடா இது?’ எனக் கொஞ்சம் அசதி எட்டிப் பார்த்தாலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். பெரும்பாலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்தாலும் முடிந்தவரை போரடிக்காமல் கொண்டு சென்று, ஒரு முறை பார்க்க வைக்கிறார் இயக்குநர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்து விட்டு வரலாம்.

– மாறன் செ

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.