Shadow

காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review

ஒரு நாள் நிகழ்வு மட்டுமே ஞாபகமிருக்கும் அதிதியைத் தினம் தினம் புதிதாகக் காதலிக்கிறார் சித்தார்த். 50 First Dates (2004) படத்தின் ஒரு வரிக் கதையால் இன்ஸ்பையராகி, இசை, துரோகம், ஏமாற்றம், ஆழ்ந்த காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு முக்கோண காதல்கதையைத் தந்துள்ளார் இயக்குநர் விஜய்.

‘சிரிச்சா போச்சு’ எனும் விரதத்தைப் பூண்டவராகச் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மதும்கேஷ். அதிதி காதலைச் சொல்லும் இடத்திலும் கூட மருந்துக்கு முகத்தில் ஒரு மாற்றத்தைக் காட்டிவிடக் கூடாத என கங்கணம் கட்டிக் கொண்டு நடித்துள்ளார். இயக்குநர் விஜயின் கதாபாத்திர வார்ப்பே அப்படித்தான் என்பதைச் சிறு வயது சித்தார்த்தாக வரும் சிறுவனின் நடிப்பில் இருந்து யூகிக்க முடிகிறது. பிரதான கதாபாத்திரத்தின் உணர்ச்சியற்ற முகத்தாலோ என்னவோ, ஹாரிஸ் ஜெயராஜின் தோளில் அதிக சுமையேறி விடுகிறது. நாயகனின் காதலையோ, அவனது மனவுணர்வுகளையோ மதும்கேஷ் வெளிப்படுத்தாததால், ஹாரிஸ் ஜெயராஜிற்கு இசையால் அதைக் கடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் கனமான பின்னணி இசையுடன் ஸ்காட்லாந்தில் தொடங்குகிறது படம். ரசிக்கும்படியான பாடல்கள் இருந்தாலும், பின்னணி இசை தான் படத்தின் பலமாக அமைந்துள்ளது.

ஹாரி எனும்.ஹரிச்சந்திரன் பாத்திரத்தில், தமிழில் அறிமுகமாகியுள்ளார் அர்ஜுன் அசோகன். தனக்களிப்பட்ட பணியைப் பிரமாதமாகச் செய்து அசத்தி விடுகிறார். ஒரு இசைக் கலைஞராக அறிமுகமாகுபவரை, இடைவேளையில் வில்லனாகவும், இரண்டாம் பாதியில் காமெடியனாகவும் பயன்படுத்தியுள்ளனர். எம்.எஸ்.பாஸ்கரை விட நகைச்சுவையில் அதிக ஸ்கோப் உள்ளதாக ஹாரியின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அடியாட்களாக வரும் நான்கு கறுப்பினத்தவரைக் கொண்டு, அர்ஜுன் அசோகனின் நகைச்சுவையை நகர்த்துகிறார் இயக்குநர் விஜய். ஒரு முழு நீள காதல்கதையாகவும் இல்லாமல், நகைச்சுவைப் படமாகவும் இல்லாமல், ஒற்றைக் குறிக்கோளற்று மாறி மாறி இரண்டு தடங்களில் பயணிக்கிறது. திடீரென இசைப்போட்டியில் வெல்வதுதான் நாயகியின் லட்சியம் என கதையை நகர்த்துகின்றனர். அதிலும் திருப்தியடையாமல், க்ளைமேக்ஸை இழுத்துப் பொறுமையைச் சோதித்துவிடுகிறார் விஜய்.

தமன்னாவின் தங்கை போலும், சில ஷாட்களில் தமன்னா போலவே காட்சியளிக்கிறார் அதிதியாக நடித்துள்ள நாயகி ஜியா சங்கர். ‘கனவு வாரியம்’ எனும் தமிழ்ப்படத்தில் 2017 இலேயே கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பின் தமிழ்ப்படத்தில் மீண்டும் நடித்துள்ளார். அதிதியாக அவரது பாத்திரத்தில் மிகச் சிறப்பாகவே பங்காற்றியுள்ளார்.

ஒரு கவித்துவமான முடிவைப் படத்திற்கு அளிக்கவேண்டுமென முடிவெடுத்து விட்ட விஜய், அதற்கான தருணத்தை யதார்த்தமாக உருவாக்க முடியாமல் இடறியுள்ளார். இறுதிக்காட்சிகளை நோக்கித் திரைக்கதை செல்லத் தொடங்கியதுமே இந்தப் பிரச்சனை பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. படம் தொடங்கும் பொழுது உள்ள இளமையும் புதுமையும், படம் முடியும்பொழுது முழுவதுமாக வடிந்துவிடுகிறது.