Shadow

கர விமர்சனம் | Kara review

போர் தொழில் இயக்குநரின் இரண்டாவது படமென்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுதலாக இருந்தது. 1990 காலகட்டத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளனர் எழுத்தாளர் ஆல்ஃப்ரெட் பிரகாஷும், இயக்குநர் விக்னேஷ் ராஜாவும். அதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. அது கதை சார்ந்த காரணமல்ல, லாஜிக் சார்ந்த காரணம். கதை, படத்தில் நேர்கோட்டில் இருந்தாலும், அதை இன்னும் நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய பொறுப்புடன், கதையைச் சிம்பிளாகச் சொல்ல முயற்சி செய்கிறோம்.

தனுஷ் தனது 16-ஆவது வயதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனது கிராமத்தில், தன் அப்பாவிடமிருந்து பணத்தைத் தெரியாமல் எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறார் (இவை காட்சிகளாக இல்லை), அதன்பின், தன் இளம் வயதில், திருச்சி அருகேயுள்ள திருவெறும்புதூரில் ஒரு எம்.எல்.ஏ வீட்டில் திருடுகிறார் தனுஷ். அந்தத் திருட்டில் மாட்டியும் விடுகிறார். அதிலிருந்து தப்பிக்கும் தனுஷை வாழ்க்கைச் சூழல் தனது தந்தையைத் தேடிப் பயணிக்க வைக்கிறது. பல வருடங்களுக்குப் பின், தன் தந்தையை எதிர்கொள்ளும் தனுஷுக்குத் தன் தந்தைக்கு இருக்கும் பிரச்சனையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வருகிறது. அதன்பின் அவர் வாழ்வில் நடக்கும் திருப்பங்கள் தான் படத்தின் கதை.

தனுஷ் இப்படத்தில் இட்லிகடை படத்தின் முருகன் சிவனேசனைக் கொஞ்சமாகவும், பொல்லாதவன் பிரபு ஷங்கரை அதிகமாகவும் மிக்ஸ் செய்து நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் சில காட்சிகளில் செயற்கையாகத் தெரிந்தாலும், பல காட்சிகளில் எதார்த்த நடிப்பைக் கொடுத்துள்ளார். மமிதா பைஜுவை இன்னுமே நன்றாக யூஸ் பண்ணியிருக்கலாம். கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளனர். ப்ரித்வி தனது கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்து அசத்தியுள்ளார். முத்தாய்ப்பாகப் படத்தில் முத்திரை பதிப்பது ஜெயராம் தான். வில்லன் ரோலை அட்டகாசமாகச் செய்துள்ளார்

தேனீஸ்வரர் தன ஒளிப்பதிவின் மூலம் வழக்கம் போல் மேஜிக் செய்துள்ளார். 1990 கால கட்டங்களுக்கான வண்ணங்களைத் தரமாகத் தேர்வு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் கதையோட்டத்தை எங்குமே தொந்தரவு செய்யவில்லை. பின்னணி இசை தேவையான அழுத்தத்தை வழங்கியுள்ளது.

கந்தக பூமியான ராமநாதபுரத்தில், 1990 இல் விவசாய மக்களின் வாழ்வு பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளானதைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளனர் ஆல்ஃப்ரெட் பிரகாஷும் விக்னேஷ் ராஜாவும். ரஷ்யப்போரினாலும், வங்கிகள் கொடுத்த கடன் நெருக்கடியாலும் மக்கள் பாதிப்பிற்குள்ளானதை பிரச்சார நெடியில்லாமல் படமாக்கியுள்ளனர். படத்தில் அப்பா, மனைவி, சமூகம் சார்ந்து எமோஷ்னல் காட்சிகள் நிறைய இருந்தாலும், எந்த எமோஷனும் நமக்குள் கனெக்ட் ஆகவில்லை என்பது படத்தின் பெரிய மைனஸ். எனினும் உள்ளம் தொடும் சில நல்ல நல்ல காட்சிகள் படத்தைக் கரை சேர்க்கிறது.

வெண்பா தமிழ்