

154 UA+
‘மா இன்ட்டி பங்காரம் (Maa Into Bangaram)’ எனும் தெலுங்குப் படத்தைத் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என டப் செய்துள்ளனர். ‘மா இன்ட்டி பங்காரம்’ என்றால் ‘எங்கள் வீட்டின் தங்கம்’ எனப் பொருள்படும். ‘எங்கள் தங்கம்’ என்ற தலைப்பிற்கு இன்னொரு விசேஷம் உண்டு. எம்ஜியார், ஜெயலலிதா நடிப்பில், 1970இல், ‘எங்கள் தங்கம்’ என்ற படம் வெளியானது. அப்படத்தைத் தயாரித்தவர்கள் முரசொலி மாறனும், மு.கருணாநிதியும் ஆவர். அவ்விருவரும் கடன் சிக்கலில் இருந்ததால் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம் புரிந்த கொண்ட ஸ்வர்ணாவும், மருத்துவர் அனிருத்தும் கிராமத்திற்கு வருகிறார்கள். தங்கையின் நிச்சயம் மற்றும் திருமண நிகழ்விற்கு வருகை தரும் அனிருத்திடம், அவனயுவ்தந்தை ராமய்யா ராஜு முகம் கொடுத்துப் பேச மறுக்கிறார். அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த ஸ்வர்ணா, எப்படியாவது கணவர் குடும்பத்தில் நற்பெயர் சம்பாதித்து, அக்குடும்பத்துடன் இணக்கமாக நினைக்கிறாள். எதிர்பாராதவிதமாக ஸ்வர்ணாவின் கடந்தகாலம் அவளுக்கும், அவளது கணவன் குடும்பத்திற்கும் ஒரு பேராபத்தைக் கொண்டு வருகிறது. அதிலிருந்து எப்படி தனது குடும்பத்தை ஸ்வர்ணா காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் ஸ்வர்ணாவின் தோழி ஹிரண்மயியாக நடித்துள்ள மஞ்சுஷா. ஸ்வர்ணா இழுத்து விடும் சிக்கலைச் சமாளிக்கத் திணறி, பிறகு ‘லெட்ஸ் கம் ஆன்’ என உற்ற துணையாக நிற்கும் பாத்திரத்தை மிக நிறைவாகச் செய்துள்ளார். தொடர்ந்து நல்ல பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நல்லதொரு நகைச்சுவை நடிகையாகப் பரிணமிப்பார்.
அனிருத்தின் தாய் காமாக்ஷியாக கெளதமியும், அப்பா ராமய்யா ராஜுவாக ஆனந்தும் நடித்துள்ளனர். சொல்லிக் கொள்ளும்படியாக அவர்களது கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்படா விட்டாலும், தங்களது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸால் அதைச் சமாளிக்கின்றனர். அது சாத்தியமாவதற்கு உதவி செய்யும் விதமாக, வண்ணங்களை மிகையாக்கித் திரையில் அழகு சேர்த்துள்ளார் ஆடை வடிவமைப்பாளர் பல்லவி சிங்.
காந்தாராவில், ருக்மிணி வசந்தின் அண்ணனாகக் குலசேகரன் எனும் பாத்திரத்தில் நடித்த குல்ஷன் தேவய்யா, இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். கருணா எனும் வலுவான பாத்திரத்தில் அறிமுகமாகி, அற்புதமான தன் நடிப்பால் மிரட்டியுள்ளார். அவருக்கென்றொரு பிரத்தியேகமான அத்தியாயத்தையும் அடையாளத்தையும் ஃப்ளாஷ்-பேக்கில் கொடுத்துள்ளார் இயக்குநர் B.V.நந்தினி ரெட்டி. ஆனால், அவரது நோக்கமும், அதைச் செயற்படுத்த முனையும் விதமும், க்ளைமேக்ஸ் சண்டைக்கு மட்டுமே உதவியுள்ளதே அன்றி, அந்தக் கதாபாத்திரத்தின் வீரியத்திற்கு நியாயம் கற்பிக்கத் தவறி விடுகிறது. ஆதலால் படத்தின் முதற்பாதி போல் ஈர்க்காமல், இரண்டாம் பாதி சற்றே நீண்டு சோர்வாக்குகிறது.
லீ விட்டேக்கர், ஏஜாஸ் குலாப் ஆகியோரின் சண்டை இயக்கம் படத்திற்கு நல்லதொரு கமர்ஷியல் அழகைத் தந்துள்ளது. அதை இரட்டிப்பாக்கும் விதமாக அமைந்துள்ளது சந்தோஷ நாராயணனின் பின்னணி இசை. ஸ்வர்ணாவாக நடித்துள்ள சமந்தாவின் முகம், எதையோ இழந்த அவரது கடந்தகாலத்திற்குப் பொருந்தினாலும், குடும்ப அமைப்பினால் அவருக்குள் ஏற்படும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் வசீகரத்தைப் பிரதிபலிக்கவில்லை. முகமும் உடலும் அடிதடிக்குத் தயாராகாத ஒரு சோகையையும் சோகத்தையும் கொண்டுள்ளன. எனினும் தெலுங்குப் படங்களுக்கே உரிய கல்யாண குணங்களால், பெரும் குறைகள் இல்லாப் பொழுதுபோக்குப் படமாகத் தப்பித்துக் கொள்கிறது.

