Shadow

காடுவெட்டி விமர்சனம்

காடுவெட்டி குருவைப் பற்றிய கதை இல்லை இப்படம். ஆனால், காடுவெட்டி என்கிற தலைப்பைப் பார்த்ததும், அதன் அரசியல் என்னவாக இருக்கும் என யூகிக்கிறார்களோ, அதை ஒரு சதவிகிதம் கூட ஏமாற்றாமல் தந்துள்ளனர். ஆணவக் கொலைகளுக்குக் காரணம் ஆதிக்க சாதியினர் இல்லை என்றும், அதற்கு யார் உண்மையில் காரணம் என்றும், ஓர் அரிய கண்டுபிடிப்பையே நிகழ்த்தியுள்ளார் இயக்குநர் சோலை ஆறுமுகம்.

நகரத்தில் ஒரு காதல் ஜோடி. வெவ்வேறு சாதியைச் சார்ந்த அந்த ஜோடிக்குப் பெற்றோர்களே முன் நின்று கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். அடுத்து, அதே ஜோடி, அதே குடும்பம், அதே ஜோடி, அதே பெற்றோர்கள், அதே காதல் கிராமத்தில் நிகழ்ந்தால், அதற்குப் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கும் என இரண்டு கதைகளை ஒப்பிடுகிறார். நகரத்துக் காதல் சுபமாகிறது, கிராமத்துக் காதல் ஏன் ஆணவக்கொலையில் முடிகிறது என கதை பயணிக்கிறது. படத்திற்குக் கதையும் தயார், அரசியலும் தயார், ஆனால் பாவம் இந்தத் திரைக்கதையைத்தான் அடியோடு வெட்டிச் சாய்த்து விட்டுள்ளனர்.

‘பொண்ணுங்கன்னா சாமிடா, ரத்தத்துல ஊறியிருக்கு வீரம்டா’ என அக்னிக்கொடியைக் கொண்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்டப்படும் கதாபாத்திரங்கள் அனைவருமே படம் முழுவதும் சன்னதத்திலேயே திளைத்துள்ளார்கள். இப்படித் தூக்கி உயர்த்திப் புகழ்ந்த (!?) பின், அந்த இனத்துப் பெண்கள், சாதிப்பெருமைக்குக் களங்கம் விளைவிக்கும் காதலில் ஈடுபடுவதாகக் காட்டமுடியுமா? அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்வது போலாகிவிடாதா? இயக்குநர் சோலைமுருகன் அவர்களுக்கு உண்மையான சவால் இந்தப் புள்ளியில்தான் எழுகிறது. பாம்பையும் அடிக்க வேண்டும்; தடிக்கும் நோகக்கூடாதென்ற இயக்குநரின் பரிதவிப்பு பட்டவர்த்தனமாய்த் தெரிகிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவரை அசிங்கப்படுத்த வேண்டும், அதே சமயம் ஆதிக்கசாதிப் பெருமைக்குக் களங்கம் வந்துவிடவும்கூடாது. எந்தப் படைப்பாளிக்கும் வரக்கூடாத இக்கட்டு இது. ஆனால், அதையும் சாமர்த்தியமாகப் படத்தில் கடந்துள்ளார் இயக்குநர்.

Spoilers ahead

படத்தின் நாயகனான ஆர்.கே.சுரேஷின் அறிமுகமே செம டெரராக உள்ளது. நாடகக்காதலால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மீட்க வருகிறார். ஆர்.கே.சுரேஷைப் பார்த்ததும், அவர் காலில் விழும் அந்தப் பெண் ஒரு குற்றப்பத்திரிகையை வாசித்துவிட்டு, “அண்ணா, குடிச்சுட்டு வந்து தினமும் வந்து அடிச்சுக் கொடுமைப்படுத்துறார்ண்ணா” எனக் கதறுகிறார். நடுநாட்டாருக்கு சினம் பொங்கி எழுகிறது. அந்தப் பெண்ணின் கணவர், “குடும்ப விஷயத்தைக் கண்டவன்கிட்டயும் சொல்றியா?” என தன் மனைவியின் தோள் மீது கோபமாக கை வைக்கிறார். வந்ததே பாருங்கள் ஆர்.கே.சுரேஷ்க்கு ஆவேசம்.

“பொண்ணுங்களாம் சாமிடா! அவங்க மேலயா கை வைக்கிற?” என அந்தக் கணவனை எட்டி ஓர் உதைவிடுகிறார்.

சோலைமுருகனைப் போல் கொடூரமான நேர்மையாளரை (Brutally honest) ஈரேழு உலகத்தில் மட்டுமல்ல, பன்னண்டத்தில் எந்த ஒரு மூலையிலும் பார்க்க முடியாது. பெண்கள் அனைவரும் சாமி, ஆனால் அவர்கள் தன் சாதியினர் காலைப் பிடித்துக் கொண்டு தன் காலடியிலேயே இருக்கவேண்டுமே தவிர்த்து, மற்ற சாதியினருடன் குறிப்பாகப் பட்டியலினத்தைச் சேர்ந்தவருடன் கை கோர்த்து விடக்கூடாது என நாயகன் நினைக்கிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளார் இயக்குநர். இவர்தான் நாயகன், அவர் இன்ன பிற்போக்குத்தனத்துடன் உள்ளார் என்பதைச் சொல்ல மிகுந்த நெஞ்சுரம் தேவைதானே? கலையில் இத்தகைய கலகக்குரல்களே தேவை. கலை சரியாக அவருக்கு வாய்க்காவிட்டாலும், சாதிவெறி எனும் காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றிச் சொல்லும் அவரது கலகக்குரலைப் பாராட்டியே ஆகவேண்டும்.

பட்டியலின மக்கள், உப்புசப்பில்லாத விஷயங்களுக்கு எல்லாம் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் என்றும், உணவை நாகரீகமற்ற முறையில் அள்ளி அள்ளித் தின்னுவார்கள் என்றும் தரம் தாழ்ந்து காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டும்பொழுது, இப்படியாக அவர்களது புறத்தைக் கேலி செய்தவர்,

ஆதிக்க சாதியினரைக் காட்டும்போது, அவர்களது அகத்தின் விகாரத்தைப் புடம் போட்டுக் காட்டுகிறார். ஒரு கிராமமே, ஒரு இளம்பெண்ணைக் கொலை செய்தாக வேண்டுமென்று காலை முதல் மாலை வரை பஞ்சாயத்தில் உட்கார்ந்துள்ளது. அவர்கள் அப்படிக் கொலைவெறியுடன் அமர்ந்திருந்தாலும், வெள்ளைத் தோலினை உடைய பெண், அந்தப் பக்கம் கடந்தால் ஆண்கள் ஓவர் கிளுகிளுப்பாகி விடுகிறார்கள். ‘மானம் உசுருக்கு மேலே!’ என அடிக்கடி பி.ஜி.எம்.-ஐ வேறு படத்தில் உச்சஸ்துதியில் ஒலிக்க விடுகிறார்கள். ஆனால், அந்த ஊர் பெண்கள் பரவாயில்லை. ஆண்களைப் போல் மனம் தடுமாறாமல், கொலைவெறி குறிக்கோளில் இருந்து வழுவாமல் உள்ளனர். மறுபடியும் இயக்குநரின் கொடூரமான நேர்மை வியக்க வைக்கிறது. ஆதிக்க சாதியினரைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் அந்த மனசு இருக்கே, நிச்சயமாக நீலம் ப்ரொடக்ஷன்ஸின் ஸ்லீப்பர் செல்லாகத்தான் இருப்பார் சோலைமுருகன். ஆதிக்க சாதியினரைத் தரமாகச் சம்பவம் செய்துள்ளார்.

அதற்கு சாட்சியாக இன்னொரு காட்சியைப் பார்ப்போம். அந்தப் பஞ்சாயத்தில் சட்டை போடாமல், வெளுத்த முறுக்கு மீசையுடன் அமர்ந்திருக்கும் ஒருவர், கோபமாக எழுந்து ஒரு வீட்டிற்குள் போகிறார். அந்த வீட்டின் கொல்லைப்புறம் போய், ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டு வந்து, பட்டியலின இளைஞனைக் காதலித்த இளம்பெண் மீது வீசியடிக்கிறார். மீண்டும் வந்து பஞ்சாயத்தில் அமர்ந்து கொள்கிறார். ஊரோட மானம் போச்சு என்பதால் அப்படி உரிமையோடு செய்துள்ளார். ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களில் கூட, ஓரிருவர்தான் சாதிவெறி பிடித்தவர்களாக இருப்பார்கள். இங்கே ஒரு ஊரே அப்படியிருக்கு. திரு. சோலைமுருகன் அவர்கள், நிச்சயமாக நீலம் ப்ரொடக்ஷன்ஸில் ஸ்லீப்பர் செல்லாக இருக்கமாட்டார். இவர், அதற்கும் மேல், வேற லெவல்! அவரை வியக்க வார்த்தைகளே இல்லை.

ஊரே கொலை செய்யவேண்டுமென நினைக்கும் பெண்ணின் தந்தையாக சுப்ரமணிய சிவா நடித்துள்ளார். அவர் மாலை வீட்டுக்கு வந்ததும், அவரது மகளைக் கொல்லச் சொல்லி நிர்பந்திக்கிறது ஊர். அவரும் ஒத்துக் கொள்கிறார். அதன் பின்னான காட்சிகள் எல்லாம் மிக நெகிழ்ச்சியாக உள்ளன. படத்திலுள்ள உருப்படியான அத்தியாயம் என இதைச் சொல்லலாம். சுப்பிரமணிய சிவாவின் மகளாக நடித்துள்ள சங்கீர்த்தனா நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கட்டுரையின், மூன்றாவது பத்தியின் கடைசி வரிக்கு வருவோம். சுப்ரமணிய சிவா, மகளைக் கொல்வதற்கு சம்மதித்ததும், பஞ்சாயத்து கலைகிறது. சுப்ரமணிய சிவாவிடம் ஒருவர் தெலுங்கில் பேசுகிறார். “இங்க பாரு, ஊர்ல நாம மூன்று குடும்பம்தான் இருக்கோம். பேசாம ஊர்ல சொல்றதைப் பண்ணிடு” எனச் சொல்லிவிட்டுப் போகிறார். அதாவது, அக்னிக்கொடி உடைய சாதிக்கு இணையான வேறொரு சாதியைச் சார்ந்தவர் போல சுப்பிரமணிய சிவா. அக்னிக்கொடியை உடைய சாதியின் பெருமைக்கும் களங்கம் கற்பிக்காமலும், அதே சமயம், ஆதிக்க சாதி இளம்பெண், பட்டியலின இளைஞனைக் காதலித்தால், அக்னிக்கொடி சாதியினர் எப்படிக் கொதித்தெழுவார்கள்  என்பதையும் நாசூக்காகச் சித்தரித்துள்ளார் சோலைமுருகன்.

பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவரைத் திரு. தொல் திருமாவளவன் போலவும், நாயகன் ஆர்.கே.சுரேஷை திரு. காடுவெட்டி குரு போலவும், அவரால் ஐயாவென மரியாதையாக விளிக்கப்படுவரை திரு. ராமதாஸ் போலவும் உருவகப்படுத்தியுள்ளனர். மையக் கதையுடன், ஆர்.கே.சுரேஷ்க்கும், அவரது ஐயாவுக்கும் நேரடிச் சம்பந்தமில்லை. இவர்கள் இருவரும் தன் மக்களுக்கு வீரத்தை ஊட்டுபவர்களாக வருகிறார்கள்.

ஆர்.கே.சுரேஷ் வரும் காட்சிகள் எல்லாம் நன்றாகப் பொழுது போகிறது. தன்னைப் பார்க்க வரும் ஒரு நபரிடம், ஓர் உதவி செய்யமுடியுமா எனக் கேட்கிறார் சுரேஷ். உடனே அந்த நபர், ஓடிப் போய் அரிவாளை எடுத்துக் கொண்டு வந்து தன் கழுத்தில் வைத்து, “சொல்லுங்க அறுத்துக்கவா?” எனக் கேட்கிறார். பொதுவாக, இது போன்ற சூழலில் யாராக இருந்தாலும் பதறி, ‘முதல்ல அரிவாள கீழ போடு. என்ன இது பைத்தியக்காரத்தனம்?’ எனப் பதறுவார்கள் தானே! மிகுந்த வீரம் நிரம்பியவராக வரும் சுரேஷோ செம ஹேப்பியாகிடுறார்.

“இந்த விசுவாசம்தான்டா நம்ம ஜனங்களோட உயிர்நாடி” எனத் தட்டிக் கொடுக்கிறார் சுரேஷ். பைத்தியக்காரத்தனத்துக்கும் விசுவாசத்துக்கும் வித்தியாசம் தெரியாதவராக நாயகனைச் சித்தரித்துள்ள இயக்குநரின் அந்தக் கொடூரமான நேர்மை தான் இந்தப் படத்தின் சிரிப்பு. மன்னிக்க, சிறப்பு.