Search
Bigg-boss-3---day-40-

பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன்

மாரி பாடலுடன் தொடங்கிய நாளில் எப்போதும் இல்லாத வகையில் ஆண்கள் எல்லோரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

நாள் ஆரம்பமே இந்த வார டாஸ்க்கில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் தேர்ந்தெடுப்பதற்கான வேலை ஆரம்பித்தது. எப்பவும் போல் இந்த வார பெஸ்ட் பெர்ஃபாமர் என வரும்போது சாண்டி, மது இரண்டு பேரும் போட்டியே இல்லாமல் செலக்ட் ஆகினர். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமருக்கு முகின் பேரைச் சொன்ன உடனே யாரும் எதுவும் பேசவில்லை. அடுத்து வொர்ஸ்ட் பெர்ஃபாமர் யாரென வரும் போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. எடுத்த உடனே சாண்டி, ‘சேரன் ரஜினி கேரக்டரில் இன்னும் கொஞ்சம் நல்லா பண்பிருக்கலாம்’ எனச் சொன்ன உடனே ஜெர்க் ஆனார் சேரன். இந்த இடத்தில் சிலதைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த நிகழ்வு நடக்கும் போதெல்லாம், ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் கருத்து சொல்லுவதில்லை. யாராவது ஒருத்தர் ஒரு பேரைச் சொன்னால், அதைக் கூட ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்துச் சொல்பவர்கள் ரொம்பக் குறைவு. பேர் சொன்ன உடனே மையமாகத் தலை ஆட்டி வைக்கின்றவர் தான் அதிகம். எல்லோருமே சேஃபா விளையாட வேண்டுமென்று தான் நினைக்கின்றனர்.

அதனாலேயே முதலில் யார் பேர் வருகிறதோ, அவங்க தான் இந்த விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். சரவணன் கூட ஓர் உதாரணம் தான். அபிராமி கேப்டனாக இருந்த போது சரவணன் பேரைச் சொன்ன போது இதே தான் நடந்தது.

பெண்கள் அணி, கவின், முகின், தர்ஷன் இவங்களுக்கெல்லாம் ஒரு டீம் இருக்கு. பெஸ்ட் பெர்ஃபாமருக்கு இவங்க பேர் மட்டும் தான் வருது. இத்தனை வாரத்தில், சேரன் பேர் எல்லாம் கன்சிடர் பண்றதுக்குக் கூட யாருமே சொல்லவில்லை. அக, சரவணன் தனக்கென ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள இதுவும் கூட ஒரு காரணம்.

சேரனுக்கு ஆரம்பத்தில் இருந்தே தனி அணி இல்ல. அவர் நன்றாக வேலை செய்தாலும் யாரும் நல்ல பெர்ஃபாமர் போட்டிக்கு, அவர் பேரை நாமினேட் பண்றதுக்கு கூட யாரும் தயாராக இல்லை. அதுவே அவருக்குப் பெரிய உறுத்தலாக இருக்கு. இத்தனைக்கும் அவர் வாய் விட்டு புலம்பினதுக்கு அப்புறமும் கூட இந்த விஷயம் மாறவே இல்லை. ஆனால் வொர்ஸ்ட் பெர்ஃபாமரில் சேரன் பேர் சொல்றதுக்கு எல்லோரும் தயாராக இருக்காங்க.

இதை ஓரளவுக்கு புரிந்து கொண்ட சேரன், மறுபடியும் தன் பேர் முதலில் வந்த உடனே ஜெர்க் ஆகிறார். அப்பக் கூட சரவணன் மாதிரி மறுத்துப் பேசாமல், ‘எல்லாரும் என்னைத் தேர்ந்தெடுத்தா நான் ஒத்துக்கறேன். ஆனா என் பெர்ஃபாமன்ஸை அனலைஸ் பண்ணின மாதிரி எல்லாருடைய பெர்ஃபாமன்ஸையும் பத்திப் பேசுங்க’ என சேரன் சொன்னார். அவர் தன் பங்குக்கு சரவணனின் பெர்ஃபாமன்ஸ் பற்றி விமர்சனம் வைக்கிறார்.

ஆனால் விவாதம் அதற்கு மேல் நகரவே இல்லை. மேலே சொன்ன மாதிரி யாரும் பேசவே தயாரில்லை. சேரன் பேர் முதலில் வந்ததால் அதோடு நின்றுவிட்டது. தர்ஷன் தன்னைத்தானே நாமினேட் பண்ணினதும் செல்லாது எனச் சொல்லிவிட்டனர். சேரனே மறுபடியும் தன் பாயின்ட்டைத் திரும்பவும் சொல்றார். அப்பவும் அதை மறுத்தோ, ஆதரித்தோ யாரும் பேசவில்லை.

சரவணனே அதை மறுத்துப் பேசுகிறார். ‘நான் ட்ரெஸ் போட்டு நின்னாலே விஜயகாந்த் மாதிரி தான். அதுக்கு மேல எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஆனா நீங்க ரஜினி ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு இருந்தது தான் காமெடியா இருந்தது’ எனத் தாக்கினார். ‘அது எனக்குக் கொடுக்கப்பட்ட வேஷம் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது’ எனக் கடந்து போய்விட்டார் சேரன்.

இந்த விவாதம் சூடாகின்ற இடத்தில், தர்ஷன் இதற்கு விளக்கம் கொடுக்க வர, ‘என்ன சொல்றாருன்னு தெளிவா சொல்லச் சொல்லுய்யா’ என தர்ஷனைப் பார்த்துச் சொல்கிறார் சரவணன். அந்த ‘யோவ்’ தன்னைப் பார்த்துச் சொல்வதாகப் புரிந்து கொள்கிற சேரன், “வாய்யா போய்யானுலாம் பேசாதீங்க” எனச் சொல்ல, “அப்படித்தான்டா பேசுவேன்னு சொல்லுவேன் அப்புறம். பேசாம உங்க வேலைய பாருங்க” என சரவணன் பதில் அளித்ததும் அனைவருக்கும் ஷாக். சேரனும் டென்ஷனாவது நன்றாகவே தெரிந்தது. ‘இப்ப உனக்கு என்ன பிரச்சினை?’ என சேரனை நோக்கி எழுந்து வந்தார் சரவணன். தர்ஷன் மற்றவர்கள் எல்லாம் சமாதானப்படுத்த, “பின்ன என்னய்யா லூசு மாதிரி பேசிட்டு இருக்கான்” என மறுபடியும் சரவணன் வார்த்தையை விட, விரக்தியான முகத்தோடு சேரன் வெளியே வந்து உட்கார்ந்து இருந்தார்.

பெண்கள் எல்லோருமே சமாதானபடுத்த வர, “ஒன்னும் பிரச்சினையில்லை, பெரிய மனுஷன் ஏதோ சொல்லிட்டாரு, நான் ஓக்கே”என மேற்கொண்டு பிரச்சினையை வளர விடாமல் பார்த்துக் கொண்டார் சேரன்.

உள்ளே தர்ஷன் நேரடியாக சரவணன் செய்தது தப்புஎனச் சொல்லும் போது, சரவணனுக்கு முன்னாடி, கவினும் சாண்டியும் அதை மறுத்துப் பேசினது தான் ஆச்சரியம். சேரன் மேல் தான் தப்பு என்பது போலவே இரண்டு பேருமே பேசிக் கொண்டிருந்தார். ‘இந்தக் கூட்டணி டேஞ்சரானது’ என மற்ற ஹவுஸ்மேட்ஸும் உணர்ந்திருப்பர் . தர்ஷன் உண்மையிலேயே அட்டகாசமாகப் பேசுகிறான்.

தான் பேசியது தப்பெனத் தெரிந்து, மற்ற ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் தனக்கு எதிரான மனனிலையில இருக்காங்க எனத் தெரிந்த உடனே அனைவரிடமும் தன்னிலை விளக்கம் கொடுக்கிழ்றார் சரவணன். ‘நான் ஒரு நடிகன்னு உணர்ற மாதிரி என்னிக்காவது நடந்துருக்கேனா? ஆனா சேரன் இங்க வந்ததுல இருந்தே தான் ஒரு டைரக்டர்ன்னு காமிச்சுட்டு இருக்கார்’ என்பது சரவணனின் குற்றச்சாட்டு. இதில் பிரச்சினை என்னவென்றால், இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சரவணனைத் தவிர வேற யாருமே சொல்றதில்லை.

அதே மாதிரி தான் ஒரு பெரிய டைரக்டர் என இங்கே சேரனும் எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை. வந்ததில் இருந்து க்ளீனிங் டீமில் தான் இருக்கார். பாத்ரூமோ, இல்ல வேற இடமோ தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ரொம்பவும் ரசித்துச் செய்கிறார். அதற்காக கமலிடமும், மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் பாராட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கான அங்கீகாரம் தான் அவர் எதிர்பார்க்கிறதும். ‘நான் நல்லா வேலை செய்யறேன்னா ஏன் என் பேரை யாரும் சொல்ல மாட்டேங்கறீங்க?’ என அவர் கேட்கிறது நியாயமான கேள்வி தான்.

அதற்கப்புறம் தான், ‘நான் ஏன் சேரன் மேல் காண்டில் இருக்கேன்?’ என உண்மையான காரணத்தைச் சொன்னார். ‘99 இல், சரவணன் ரொம்பக் கஷ்டத்தில் இருக்கும் போது, அவர் வண்டி பஞ்சராகி சாலையில் நின்று கொண்டிருந்தாராம். அப்பொழுது சேரனிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அதுக்கு சேரன், ‘நீங்க நடிக்காத பாத்திரமா? நீங்க பார்க்காத டைரக்டரா?’ எனக் கேட்டுவிட்டு போய்விட்டாராம். அது இன்னும் அவருக்கு உறுத்திக் கொண்டே இருக்கு.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சரவணன் நடித்த ‘பொண்டாட்டி ராஜ்யம்’ படத்தின் போது சேரன் கே.எஸ்.ஆரோட அசிஸ்டென்ட். அப்ப இருந்தே சேரனுக்கும் சரவணனுக்கும் அறிமுகம் இருக்கு. அதற்கப்புறம் சரவணன், சொந்தப்படம் எடுத்து லாஸ் ஆகி, வாய்ப்பில்லாமல் தடுமாறி நிற்கின்றார். அந்தப் பக்கம் சேரன் தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு டைரக்டராக வளர்ந்து நிற்கிறார்.

ஜெயிக்கும் போது, ‘நான் அப்படிச் செஞ்சேன், இப்படிச் செஞ்சேன், நானே சொந்தமா சிந்திச்சேன்’ எனச் சொல்லும் நாம், தோற்கும் போது மட்டும் பழியை அடுத்தவங்க மேல் போடக் காரணம் தேடுகிறோம். ‘சேரன் நினைத்திருந்தால் அன்னிக்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கலாம், என் கஷ்டமெல்லாம் தீர்ந்து போயிருக்கும்’ என சரவணன் உறுதியாக நம்புகிறார் போல. ஆனால் வாழ்க்கை எப்பவுமே அப்படி இல்லை.

நான் என் குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாம என் நண்பனிடம் கடன் கேட்க போன போது அவன் உட்கார்ந்திருந்த இடம் ஒரு பார். ‘பணம் இல்லே’ எனத் சொல்லித் திருப்பி அனுப்பிட்டான். குடிக்கிறதுக்குக் காசு இருக்கு எனக்குக் கொடுக்க, அதுவும் ஸ்கூல் ஃபீஸ் கட்டக் கேட்டும், ‘கொடுக்க மனசு இல்லாமல் இருக்கானே’ என எனக்கும் கோபமாகத்தான் இருந்தது. ஆனால் சில வருடங்கள் போனதுக்கு அப்புறம் நான் கேட்டதை மறுக்கிறதுக்கும் அவனுக்கு உரிமை இருக்கு எனப் புரிந்தது. பணம் இருக்கென்றாலும் யாருக்குக் கொடுக்க வேண்டுமென அவன் தானே முடிவு செய்யவேண்டும். என்னோட கோபத்துக்கு நியாயமான காரணங்கள் இருந்த மாதிரி, மறுத்ததுக்கும் அவனிடம் நியாயமான காரணம் இருக்கலாம். அவரவருக்கு அவரவர் நியாயம் பெரிதுதானே!

எல்லோருமே தவறு செய்கிறவர்கள் தான். தெரிந்தோ தெரியாமலோ ஏதோவொரு விதத்தில், மற்றவர்களைக் காயப்படுத்திருப்போம். கூடவே இருந்தவர்களுக்கு துரோகம் செய்திருப்போம். ஆனால் சில பேரு அதையெல்லாம் மறந்துவிட்டு, நாம் கஷ்டத்தில் இருக்கும் போது அன்பு காட்டி, தோளோடு தோளாக நமக்காக நிற்பார்கள். அந்த விஷயத்தையே நாம் அடுத்தவர்களுக்கு செய்தால் போதும்.

ஆனால் நான் கஷ்டபட்டேன், புறக்கணிக்கப்பட்டேன், தூக்கி எறியப்பட்டேன் எனப் புலம்பிக் கொண்டே, இதையெல்லாம் மற்றவர்களுக்கும் செய்யவேண்டுமென நினைத்துப் பழிவாங்கும் மனநிலை தான் இங்கே பலருக்கும் இருக்கு. அதில் சரவணனும் ஒருத்தர்.

“சரவணன் எங்கிட்ட வாய்ப்புக் கேட்டபோது நான் கொடுக்கல. ஆனா அதையெல்லாம் மனசுல வைக்காம சரவணன் என்கிட்ட அன்பா நடந்துக்கறாரு” என சேரன் சொல்லிருந்தார் என்றால், சரவணன் அனைவரது மனதிலேயும் பல படி உசந்து நின்றிருப்பார்.

இந்த இரண்டு வாய்ப்பும் நம்மிடம் தான் இருக்கு. நாம் எதைத் தேர்ந்தெடுக்கறோம் என்பதுதான் முக்கியம். இதற்கு கமல் என்ன நியாயம் சொல்வாரென ஆவலோடு வெயிட்டிங்.

கடைசியாக ஷெரினையும் லியாவையும், ஜெயிலுக்கு அனுப்புவதாக முடிவு செய்தார் தர்ஷன்.

மது, சாண்டி, முகின் ஆகிய 3 பேருக்கும் கேப்டன் போட்டி நடந்தது. அதில் மதுவுக்கு சிலர் உதவி செய்ததை சாக்ஷி டீம் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தனர். முகின் ஜெயித்து இந்த வார கேப்டன் ஆனார்.

கவி, சாண்டி, முகின் டீம் தர்ஷனையும் ஷெரினையும் கிண்டல் பண்ணிப் பாடிக் கொண்டிருந்தார்.

மகாதேவன் CM